Shadow

காந்தாரா – மனக்குழப்பமும், வாழ்வின் தரிசனமும்

ஒரு தயக்கத்துடன் இருக்கும் நாயகன் (Hesitant hero) வகை கதைகளில், நாயகன் தனக்கு விதிக்கப்பட்ட பொறுப்பை/பதவியை, அதுவும் எளிதாக அவனுக்குக் கிடைக்கக் கூடிய சூழலில், அதன் பிரம்மாண்டத்தின் மீதான ஒவ்வாமை அல்லது பயம் காரணமாகத் தவிர்த்து ஓடுவான். அதன் நேர் எதிர் முனையான கொண்டாட்டத்தின் மீதோ அல்லது இதை மொத்தமாக மறுதலிக்கும் வேறு தொழிலின் மீதோ அல்லது பிரியமான வேறு வாழ்க்கை மீதோ விருப்பு கொண்டு, அவ்வோரமாக ஒதுங்கிப் போக நினைப்பான். ஆனால் காலம் அவனைச் சூழலுக்குள் தள்ளிவிடும். எதைக் கண்டு உள்ளூர பயந்து விலகினானோ, அதிலேயே காப்பானாக வந்து நிற்கச் செய்யும்.

தேவர் மகனில் கமல் இப்படி நிலசுவன்தார் கால மதிப்பீடுகளைத் தாங்கி நிற்கும் தனது கிராம வாழ்வை வெறுத்து நகரத்தை முழுதாக நேசிப்பார். நகர மதிப்பீடுகளைச் சுவிகரித்து கொண்டதன் அடையாளமாக வேறு கலாச்சாரக் காதலியும், கார்பரேட் பாணி ஓட்டலுமென நவீனமாக தன் வாழ்வைத் திட்டமிட்டு வைத்திருப்பார். சண்டையும் சிக்கலும் வஞ்சமுமான கிராம வாழ்வு அவரை ஈர்ப்பதில்லை. ஆனால் கடைசியில் அந்த மக்களுக்குக் காப்பானாகத் தலைவனாக வர அவர் ஒருவருக்குத்தான் தகுதி உண்டென்ற அவரது தந்தையின் எண்ணத்தை ஈடேற்றும்படி ஆகிவிடும்.

காந்தாராவின் ஆரம்ப காட்சியில் பாஞ்சுருளி தெய்வத்தின் சாமியாடியாக இருக்கும் தனது தந்தை சாமியாடும்போதே காற்றோடு காற்றாக மறைந்து போனதைக் கண்ட சிறுவன் சிவாவுக்கு அதை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. ஆனால் தந்தை அதற்குப் பின் திரும்பி வரப்போவதில்லை என்ற கசப்பு அந்த பூதகோல ஆட்டத்தை விட்டு அவனை விலகி இருக்க வைத்துவிடுகிறது. பாஞ்சுருளி தெய்வத்திற்கான வருடாந்திர பூதகோலாவில் முகம் நிறைய வர்ணம் பூசி கிரீடமும் அகண்ட பெரிய அலங்காரங்களும் தரித்து பூதகோலா ஆட்டம் ஆடி சாமியாகவே மாறி நல்வாக்கு சொல்வது அவனுக்கு வழிவழியாக வந்த கடமை. தந்தைக்குப் பின் இவன் அந்த தெய்வத்தைக் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் சிவா அதற்குத் தயாராக இல்லை, அதை விட்டு விலகி ஓடுகிறான். அந்த ஓட்டம் இயல்பாகத் தென்படும் பொருட்டு அப்பாவின் ஒழுக்கமான சாமியாடி பிம்பத்திற்கு நேர்மாறாக நடக்கிறான். அவர் முழுதாக முகம் மழித்து குடுமி கட்டி விரதமிருந்து சாந்த உரு கொண்டிருந்தார், இவன் முகம் மறைக்கும் தாடி மீசையும் பறட்டை தலையுமாக கள்ளும் கறியும் வேட்டையும் சூதாட்டமும் கேளிக்கையும் விளையாட்டுமென மொத்தமாக எதிர்நிலையில் நிற்கிறான். அவனது சிற்றப்பன் மகன் பூதகோலா பொறுப்பை எடுத்து விரத வாழ்வு கொள்ளும் சாந்தமான சாமியாடியாகிறான். தம்பி அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டது இவனை ஆசுவாசப்படுத்துகிறது, ஆனால் இவனுக்கான அழைப்பு ஆரம்பம் தொட்டே பூடகமாக வந்து கொண்டே இருக்கிறது. கனவிலும் அழைப்பு வருகிறது, நனவிலும் வருகிறது, அவரது அப்பாவின் பூதகோலத்திலும் வருகிறது, பாஞ்சுருளி தெய்வத்தின் காட்டுப்பன்றியின் வடிவிலும் வருகிறது. இவன் முறை தவறும் நேரமெல்லாம் அவனை விழித்தெழ வைக்க அந்த தெய்வத்தின் வடிவில் மிரட்டலாக வந்து ஓவேன்று அரட்டுகிறது.

சிவாவுக்கும் தன்னைச் சுற்றி நடப்பது என்னவென்று தெரியும், ஆனால் அதை மற்றவர்களுக்கு வெளிகாட்டுவதில்லை. பன்றி வேட்டைக்குத் தனது நண்பர்களுடன் செல்வான். அவனது தாய் அதை தடுப்பாள். சிவாவின் மீறல் மனது அதை எளிதாகத் தள்ளி வைத்துவிட்டு வேட்டைக்குச் செல்லும். முதலில் புதருக்குள் தென்படும் ஒரு காட்டுப்பன்றியைத் தனது நாட்டு துப்பாக்கியால் குறி பார்க்கிறான், உடன் வேட்டைக்கு வந்தவர்கள் எதைக் குறிவைக்கிறாய் எனக் கேட்கிறார்கள், அவர்கள் கண்களுக்கு எதுவும் அந்த இருட்டில் தென்படவில்லை. எதையும் கவனிக்காமல் பன்றியைக் குறி வைக்கிறான். சுட்டதும் பன்றி ஓடும் சத்தம் கேட்கிறது அதோடு சிலம்பின் சத்தமும், ‘எதைச் சுட்டாய்?’ என கூட்டாளிகள் கேட்க, தான் யாரை சுட்டோம் என சிவா உணர்ந்து கொள்கிறான். பக்கத்தில் இருப்பவனின் கையில் இருக்கும் மதுவைப் பறித்து படப்படப்போடு குடிக்கிறான். வேட்டை முடியும்போது முதலில் சுட்ட பன்றியைத் தேடுவோமா என கூட்டாளி கேட்கிறான். ‘வேண்டாம் கிடைக்காது’ என சிவா சொல்கிறான். தேடி ஒரு அடி முன் எடுத்து வைத்தால் அவனுக்கு அந்த பாஞ்சுருளி தெய்வத்தின் அறிதல் கிடைக்கும் என அவனுக்கும் தெரியும், ஆனால் கவனமாகத் தவிர்த்து விட்டுச் செல்வான். அவன் அப்படிச் சொல்லும்போது மரங்களுக்குப் பின் மறைவில் வெகு அருகாமையில் அவனது தந்தையின் மாயமான இடமும், அந்த வட்டத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட காட்டுபன்றியும் நின்றிருக்கும். பிரமாதமான குறீயீட்டுக் காட்சி அது.

கனவிலும் அந்த மாயமான வட்டம் வரும் அதில் ஒரு முனையில் சிறுவன் சிவா நிற்பான். அதே தகப்பனைத் தொலைத்த நாளின் மிரட்சியைக் கண்களில் தேக்கி, மறுமுனையில் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட காட்டுபன்றி நின்றிருக்கும். அது பாஞ்சுருளி தெய்வத்தின் வடிவம். பாஞ்சுருளி அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்ததும் சிறுவன் பயந்து பின்வாங்கித் தெரித்து ஓடுவான். சிவாவின் மனதினுள் இருக்கும் இந்த மிரட்சியடைந்த சிறுவன் அவனை இந்தப் பொறுப்பிலிருந்து ஓடவைத்து கொண்டே இருப்பான். இப்படியாகப் படம் நெடுக சிவாவுக்கான செய்தி வந்து கொண்டே இருக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் ஆழ்மனதில் இருக்கும் அந்த மிரண்ட சிறுவன் சிவாவைப் பயந்து ஓடச் செய்துகொண்டே இருப்பான்.

கிளைமாக்சிற்கு முன்னர் இந்தத் தயக்கத்தை, மிரட்சியை ஒதுக்கி வைத்து விட்டு தனது தந்தை விட்டுச் சென்ற தீப்பந்தத்தைக் கையில் எடுக்கிறான். தீப்பந்தத்தைக் கடத்துவது அந்தப் பொறுப்பை அல்லது அதிகாரத்தை இன்னொருவருக்குக் கடத்துவதின் குறியீடு. தந்தை கொடுத்த பந்தத்தைக் கையில் எடுக்கும் போது தனது பிறவிக்கான பொறுப்பைக் கையெடுக்க அவன் துணிந்துவிட்டான். அவன் முன் கனவில் பார்த்த அதே அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட காட்டுபன்றி தோன்றுகிறது, இந்த முறை சிவா திரும்பி ஓடவில்லை, மாறாக பாஞ்சுருளி தெய்வத்தை நோக்கி ஓரடி எடுத்துவைக்கிறான்.

படத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதும் கலையாக்குவதும், நாயகனின் இந்தக் காவிய மனக்குழப்பமும் அதற்குப் பின் கிடைக்கும் வாழ்வின் தரிசனமும்தான். அவன் தன் விதியோடும் மனதோடும் முரண்பட்டு தனக்கான ஒரு போலி எதார்த்தத்தைக் கட்டமைக்கிறான். உண்மையைக் கண்டு ஓடி ஒளிகிறான். ஆனால் கடைசியில் அவன் உண்மையைத் தனது கடமையை முழுதாக உணர்கிறான். அதை இருகரங்களால் ஏந்தி அணைத்து கொள்கிறான்.

விஷ்வக்சேனன்