பவுடர் என்பதைக் குறியீடான தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. பவுடர் போட்ட முகங்களுக்கும், அசலான முகங்களுக்கும் உள்ள வேறுபாடினைக் காட்ட முயற்சி செய்துள்ளார். படத்தின் நாயகன் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான நிகில், மைனா வீட்டில் திருட வரும் ஆதவன் ஆகியோர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் பவுடர்.
கொரோனாக் காலகட்டத்தில் மிக எளிமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இரவு ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்தில், ஓர் இரவில் நடக்கும் கதையாகப் படத்தை எடுத்துள்ளார். தாதா 87 படத்தில், இரண்டாம் பாதியில் அவர் செய்திருந்த மேஜிக், இப்படத்தில் இல்லை. கதையின் ஓட்டத்திலுள்ள ஒரு விறுவிறுப்பு, திரைக்கதையில் பிரதிபலிக்காதது ஒரு குறை. அக்குறை தெரியாமல் பார்த்துக் கொள்ள வாய்ப்பிருந்தும் படத்தொகுப்பாளரும் மெனக்கெட்த் தவறியுள்ளார்.
தமிழ்த் திரைப்பட மக்கள் தொடர்பாளரான நிகில், நடிகராக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். ராகவன் NM என கமலின் வேட்டையாடு விளையாடு படத்து நாயகனை ஒட்டி, நிகிலின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்தும் உடற்மொழியும் குரலும் நிகிலுக்கு வாய்க்கப்பட்டிருந்தும், கதாபாத்திர வடிவமைப்பில் அழுத்தம் இல்லாததால், நன்றாக நடித்தும் நாயகனாகச் சோபிக்கத் தவறியுள்ளார். நிகிலுக்கு, ராகவனின் இன்ஸ்டின்க்ட்டும் இருப்பதாக வடிவமைத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் அந்தக் கதாபாத்திரம் (ஆனால், நுணுகி ஆராய்ந்தால் நிகிலின் பாத்திரத்தில் ஓர் அழகான சுவாரசியம் மறைந்துள்ளது. அந்த ராகவன், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். இந்த ராகவனோ, நிகிலைப் போல் ‘அன்பே சிவம்’ விசிறியாய் மன்னிக்கும் குணம் வாய்த்து, கொலைகாரர்களை ‘பொழச்சுப் போ’ எனச் சொல்லும் நல்லசிவமாக இருக்கிறார்). நிகிலை வைத்து அடுத்த பாகத்திற்கான லீட் கொடுத்துள்லனர். அதிலாவது காவல்துறை அதிகாரியாக அவரது திறமை புலப்படும்வண்ணம் ராகவன் பாத்திரத்தை இயக்குநர் அமைப்பாரென நம்பலாம்.
பிளாக் காமெடிக்கு முயன்று கமிஷ்னர் பாத்திரத்தைக் கேலிக்கு உள்ளாக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ. வையாபுரியின் பாத்திரமும், அவரது நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது. சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ஆதவன் ஆகியோர் நகைச்சுவைக்காகப் பெரிதும் மெனக்கெட்டுள்ளார்கள். இறுதியில், வித்யா ப்ரதீப்பின் அத்தியாயத்தில் படத்தை முடித்தவிதம் நல்ல த்ரில்லர் படத்திற்கான க்ளைமேக்ஸ் போன்றே அமைந்துள்ளது. ஆனால், கச்சிதமில்லாத் திரைக்கதையால் படத்தின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் தவறிவிடுகிறது.
சூது கவ்வும் படத்தில் வரும் ‘காசு பணம் துட்டு மணி’ பாடல் பாணியில், படத்தின் முடிவில் வரும் No சூடு No சொரணை பாடல் தனி ஆவர்த்தனமாக ஈர்க்கிறது.