Shadow

கர்ணன் | பரசுராமரின் சாபம் பலித்ததா?

Karnan-and-Parasuraman

கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

பரசுராமர், கர்ணனை ஷத்திரியன் என்று அறிந்து சாபம் அளித்தார். அதனால் அவன் வலிமை குன்றியது, கடைசி நேரத்தில் ஆயுதங்கள் துணை வராமல் போனது என்ற குற்றச்சாட்டு.

முதலில் அவன் ஏன் பரசுராமரிடம் பயிலச் சென்றான் ? அவன் துரோணரிடம் பயிலும் போது ஒரு வேண்டுகோள் வைக்கிறான்.

// http://www.tamilhindu.com/2008/12/mahabharata-discussions-007/

பயிற்சிபெற்ற காலத்தில், அர்ஜுனன் தன்னைப் பார்க்கிலும் அதிகம் தேர்ச்சி பெற்றவனாகவும், பல திவ்ய அஸ்திரங்களை எய்யவும் திரும்பப் பெறுவதற்குமான பயிற்சிகளில் தேறியவனாகவும் இருந்தது கர்ணனால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஆகவே, துரோணரைத் தனிமையில் அணுகினான். அவரிடம் கர்ணன் கேட்டுக் கொண்டதை நாரதர் விவரிக்கிறார்:

Beholding that Dhananjaya was superior to every one in the science of weapons, Karna. one day approached Drona in private and said these words unto him, ‘I desire to be acquainted with the Brahma weapon, with all its mantras and the power of withdrawing it, for I desire to fight Arjuna. Without doubt, the affection thou bearest to every one of thy pupils is equal to what thou bearest to thy own son. I pray that all the masters of the science of weapons may, through thy grace, regard me as one accomplished in weapons!’ (மேற்படி அத்தியாயம், சர்க்கம்) வண்ணத்தை மாற்றிக் காட்டியிருக்கும் பகுதியின் வடமொழி வடிவம் இது:

10 brahmāstaṃ vettum icchāmi sa rahasyanivartanam
arjunena samo yuddhe bhaveyam iti me matiḥ
11 samaḥ putreṣu ca snehaḥ śiṣyeṣu ca tava dhruvam
tvatprasādān na māṃ brūyur akṛtāstraṃ vicakṣaṇāḥ (சாந்தி பர்வம், அத்தியாயம் 2. ஸ்லோக எண்கள் மேலே தரப்பட்டுள்ளன.)

‘நான் பிரமாஸ்திரப் பிரயோகத்தையும் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வித்தையையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய மாணவர்கள் எல்லோருமே உங்களுடைய மகனுக்குச் சமமானவர்களாகத்தான் நீங்கள் கருதுகிறீர்கள். ஆகவே எனக்கும் பிரமாஸ்திர வித்தையைக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில், நான் அர்ஜுனனோடு போர்தொடுக்க விரும்புகிறேன்’.

சாந்தி பருவம் தமிழில்: https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Santi-Parva-Section-02.html

// கர்ணன் எதற்காக அஸ்த்திரம் கற்றுக் கொள்ள விரும்புகிறான்? அருச்சுனனை எதிர்த்துப் போர் தொடுக்க! அப்படியென்றால் தன் மாணவர்களுக்கு இடையே சண்டை மூட்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பாரா ஆசாரியர்? அவர் மறுக்கிறார். ஆகவே பிரம்மாஸ்த்திரம் கற்க பரசுராமரை அணுகுகிறான். //

அவர் அந்தணர்கள் தவிர்த்து யாருக்கும் பயிற்சி அளிக்க மாட்டேன் என்ற விரதத்தை அறிந்து ஏமாற்றுதல் என்பது நியாயமான ஒன்றா?

//மஹேந்திர மலைகளில் வசித்து வந்த ராமரிடம் {பரசுராமரிடம்} தாமதமில்லாமல் சென்றான்.(14) அந்த ராமரை அணுகி, தலைவணங்கி, அவரிடம் {பரசுராமரிடம்}, “நான் பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு பிராமணனாவேன்” என்றான். // அப்பட்டமாக பொய் சொல்லி வித்தையைக் கற்கிறான். பரசுராமரும் எந்த ஒரு தடையும் இன்றி அனைத்தையும் சொல்லித் தருகிறார்.

//நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “கர்ணனின் கரவலிமை, (பரசுராமரிடம்) அவன் கொண்டிருந்த அன்பு, தற்கட்டுப்பாடு, தன ஆசானுக்கு அவன் செய்த தொண்டுகள் ஆகியவற்றில் அந்தப் பிருகு குலத்தின் புலி {பரசுராமர்} நிறைவு கொண்டார்.(1) தவநேன்புகளை நோற்றவரான ராமர் {பரசுராமர்}, தவம் நோற்ற தன் சீடனுக்கு உரிய வடிவிலான பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்களுடனும், அதைத் திரும்ப அழைக்கும் மந்திரங்களுடனும் உற்சாகமாகப் போதித்தார்.(2) அவ்வாயுதத்தைக் குறித்த அறிவை அடைந்த கர்ணன், பிருகுவின் {பிருகு முனிவரின் வாரிசான பரசுராமரின்} ஓய்வில்லத்தில் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான். அற்புத ஆற்றலைக் கொண்ட அவன் {கர்ணன்}, பெரும் ஆவலுடன் தன்னை அந்த ஆயுத அறிவியலுக்கு அர்ப்பணித்துக் கொண்டான்//

//இவை அனைத்தையுமே நாரதர் ஒரு flashback ஆக விவரிக்கிறார். நாரதருடைய இந்த விவரிப்பில் ஒரு மிக முக்கியமான அம்சம் தென்படுகிறது. கர்ணனுடைய தொடையை ‘வண்டு’ ரூபத்தில் வந்து குடைந்தவன் இந்திரன் என்றுதான் பல உபன்யாசகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கர்ணன் திரைப்படத்திலும் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைவு. That’s an obvious attempt at putting Arjuna at a disadvantage. அதாவது, இந்திரன் வந்து கர்ணனுடைய தொடையைக் குடைந்து, பரசுராமருக்கு ‘இவன் பிராமணன் அல்லன்’ என்ற உண்மையைத் தெரிவிக்க ஏற்பாடு செய்து, அவனுக்கு சாபமும் பெற்றுத் தந்தான். அர்ஜுனனுக்கு மறைமுகமாக உதவி செய்யவே இப்படி இந்திரன் செய்தான் என்பதுதான் வழக்கமாகச் சொல்லப்படுவது.

வியாசர் அப்படிச் சொல்லவில்லை. கடித்தது வண்டு இல்லை. எட்டுக் கால்களும் கூர்மையான பற்களும்; முள்ளம்பன்றியைப் போல் உடலெங்கும் குத்திட்டு நீட்டிக் கொண்டிருக்கும் முட்களுமான ஒரு சிறிய பூச்சி. கிருமி என்று வியாசர் சொல்கிறார். கிருமி என்பதற்கு நாம் இப்போது சொல்லிவரும் பொருள் வேறு. அந்தக் கிருமி இல்லை இது. பூச்சி என்று பொருள்படுகிறது.

– ஹரியண்ணா

சாந்தி பர்வத்தில் பரசுராமர் சாபம் தரும் பகுதி:
https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Santi-Parva-Section-03.html//

இப்போது பரசுராமர் கேட்கிறார். “நீ யார், ஒரு ஷத்திரியன் அல்லாது அந்தணனுக்கு இவ்வளவு வலி தாங்க இயலாது. உண்மையைச் சொல்” என்று கேட்கும் போது தான் அவன் சொல்கிறான்.

//”ஓ! பிருகு குலத்தவரே, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் கலப்பில் உண்டான குலத்தில் பிறந்த ஒரு சூதனாக என்னை அறிந்து கொள்வீராக.(26) மக்கள் என்னை ராதையின் மகனான கர்ணன் என்றழைக்கிறார்கள். //

ஒன்றைக் கவனியுங்கள். சூதன் என்பது ஏதோ அடிமட்டத்தில் இருக்கும் தாழ்ந்த குலம் அல்ல. ஷத்திரியர்களுக்கு ஒரு மாற்று குறைவு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். பாரதத்தில் கீசகன் சூத புத்திரன்.

//http://www.tamilhindu.com/2008/11/mahabharata-discussions-001/

சூதன் என்ற சொல்லுக்குத் தேரோட்டி என்ற பொருள் உண்டு. தேரோட்டி, சூத்திரன் இல்லை. இதைப் பற்றிய முக்கியமான மஹாபாரதக் குறிப்பு ஒன்றை (கர்ணன் வாய்மொழியாகவே வரும் பொருள் வரையறையைப்) பின்னால் பார்க்கலாம். பின்னால், விராட பர்வத்தில் கீசகனைப் பல சமயங்களில், பல இடங்களில் பாஞ்சாலி ‘சூத புத்ர’ என்றே அழைப்பதைப் பார்க்கலாம்.

தேரோட்டி மகன் என்ற எள்ளலுக்குப் பலமுறை, குறிப்பாக பீமனால், கர்ணன் ஆளாகியிருக்கிறான். பாஞ்சாலி, சுயம்வரத்தின்போது, ‘நான் சூதனை வரிக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறாள். ஆனால், கர்ணனை துரியோதனன் உள்ளிட்ட ஏனையோரும், மிக அன்புடனும் மரியாதையுடனும் ‘சூத புத்ரா!’ என்று அழைப்பதைப் பார்க்கலாம். – ஹரியண்ணா //

ஆகவே சூத புத்திரன் என்பது இழிவானச் சொல் இல்லை. சரி மீண்டும் பரசுராமரிடம் வருவோம்.

கர்ணன் தான் இன்னார் என்று சொன்னதும் அவர்.

//அந்த முதன்மையான பிருகு குலத்தவர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்திருந்தாலும், உற்சாகமற்றவனாக, நடுங்கிக் கொண்டிருப்பவனாகக் கரங்களைக் கூப்பி, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த கர்ணனிடம் புன்னகையுடன் {எரிச்சலுடன்}, “ஓ! இழிந்தவனே, ஆயுதங்கள் மீது கொண்ட பேராசையின் காரணமாக நீ பொய்யுரைத்ததால், இந்தப் பிரம்மாயுதம் உன் நினைவில் தங்காது[1].(30) நீ பிராமணனாக இல்லாததால், உனக்குச் சமமான ஒரு போர்வீரனுடன் நீ போரிட்டுக் கொண்டிருக்கும்போது, மரணம் உன்னை நெருங்கும்வரை இஃது உன்னிடம் தங்காது[2].(31) செல்வாயாக, பொய் நடத்தை கொண்டோருக்கான இடம் இஃதல்ல. இந்தப் பூமியில், உனக்கு இணையான எந்த க்ஷத்திரியனும் இருக்க மாட்டான்” என்றார்.(32)//

அந்தக் கடைசி வரியைக் கவனியுங்கள். இது சாபமா? உன்னைப் போல வீரன் யாரும் இருக்க மாட்டான் என்பது சாபமில்லை. ஆசிரியன் அவனுக்கு வழங்கிய ஆசி. கோபத்தில் பரசுராமர் அந்த பிரம்மாஸ்த்திரம் நினைவில் வராது என்று சொல்லி இருந்தாலுமே, அவன் இறுதிப் போரில் பிரம்மாஸ்த்திரத்தை உயிர்ப்பிக்கிறான். அவர் சொல்லிக் கொடுத்த ஆயுதங்களைப் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

// https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-90.html
அர்ஜுனனின் அந்த எரியும் ஆயுதத்தை, (பலாபலன்களில்) அதர்வணச் சடங்குக்கு ஒப்பானதும், ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து பெற்றதும், பெரும் பலம் வாய்ந்ததும், எதிரியைக் கொல்லவல்லதுமான தன் ஆயுதத்தால் அந்தச் சூதன் மகன் {கர்ணன்} அழித்தான்.

நடுவில் பிரம்மாஸ்த்திரம் மறந்து போகிறது மீண்டும் அதை நினைவில் கொண்டு வருகிறான்.

ஒரு பலமிக்க முயற்சியால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவன் {கர்ணன்}, பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான்[12]. பிரம்மாயுதத்தைக் கண்ட அர்ஜுனன், ஐந்திர ஆயுதத்தை உரிய மந்திரங்களுடன் இருப்புக்கு அழைத்தான்.(91)

https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-91.html

அதைக் கண்ட கர்ணன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தனஞ்சயன் மீது கணைமாரியைப் பொழிந்து, தன் தேரை வெளிக்கொணர மீண்டும் முயற்சித்தான்.(20) //

ஆகவே பரசுராமர் உண்மையில் சாபத்தை வழங்கவில்லை. அது கோபத்தின் வார்த்தையே தவிர, அவர் மனமுவந்து சபிக்கவில்லை என்பதாகத்தான் கொள்ள வேண்டும் இல்லையா ? ஆனால் குருத் துரோகத்துக்கு மன்னிப்பு உண்டா?

கடைசியாக, ‘நாக அம்பு இரண்டாம் முறை அர்ஜ்ஜுனன் மீது ஏவக்கூடாது’ என்று குந்தி வரம் பெற்றாள். அதனால் கர்ணனின் வலிமை குன்றியது என்று கர்ண ப்ரேமிகள் கூறுவது கர்ணனை அவர்களே இழிவு செய்வதற்கு சமம்.

நாக அம்பு அவனிடம் வந்தது அவனுக்கேத் தெரியாது என்பது மட்டுமல்ல, அது அவனிடம் வந்தது இறுதிப் போரின் போது தான்.

// https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-90.html

அர்ஜுனனுக்கு எதிரியான அஸ்வசேனன் எனும் பாம்பானவன், பாதாள உலகத்தில் தன் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.(12) காண்டவத்தின் காட்டுத் தீயில் இருந்து தப்பிய அவன், (பாதாள உலகத்திற்குச் செல்வதற்காக) கோபத்தால் பூமியை துளைத்துச் சென்றான். அந்தத் துணிச்சல் மிக்கப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, தன் தாயின் மரணத்தையும், அதன் காரணமாக அர்ஜுனனிடம் தான் கொண்ட பகைமையையும் நினைவு கூர்ந்து, பாதாளலோகத்தில் இருந்து எழுந்து வந்தான். வானத்தில் எழுக்கூடிய சக்தியைக் கொண்ட அவன் {அஸ்வசேனன்}, கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கிடையிலான போரைக் காண்பதற்காகப் பெரும் வேகத்துடன் பறந்து சென்றான்.(13) ‘தீய ஆன்மா கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தான் கொண்ட பகைமையை நிறைவு செய்ய இதுவே நேரம்’ என்று நினைத்த அவன் {அஸ்வசேனன்}, வேகமாகக் கர்ணனின் அம்பறாத்தூணிக்குள் ஒரு கணையின் வடிவில் புகுந்தான்.(14)

பாம்பான அஸ்வசேனன், யோக சக்திகளின் உதவியால் தன் கணைக்குள் நுழைந்திருப்பதைச் சூதன் மகன் {கர்ணன்} அறியவில்லை.(23) //

கர்ணன் அந்த அம்பு எய்ததும் கண்ணன் தேரைக் கீழிறக்குகிறான்.

// தன் பலத்தைச் செலுத்தி இவ்வாறு தன் பாதத்தால் அந்தத் தேரைப் பூமிக்குள் அழுத்தியதால், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கி, அந்தத் தேர் மூழ்கிய அந்தப் பூமியில் தங்களைக் கிடத்திக் கொண்டன[6].(29,30) //

பாம்பு திரும்ப வந்து கர்ணனிடம் அனுப்பச் சொல்லி கேட்க, கர்ணன் மறுக்கிறான். ‘என் திறமையால் வெல்வேன். உன் உதவியால் இல்லை’ என்று சொல்லி நிராகரிக்கிறான். பின்பு அந்த பாம்பே தானாக ஒரு அஸ்த்திரம் போல மாறி அர்ஜ்ஜுனனை கொல்லச் செல்லும் போது அதை அர்ஜ்ஜுனன் துண்டு துண்டாக வெட்டி எறிகிறான்.

ஆக, அந்த வரம் கேட்ட விஷயமும் பொய்.

கர்ணன் வீரனா ? ஆம் வீரன் தான். மாவீரன் அல்ல.

கர்ணன் கொடையாளியா? ஆம், ஆனால் பெரும்பாலும் அது கட்டாயத்தினால் செய்தது. பெரும்புகழ் தரும் கொடை எதுவும் கண்ணில் படவில்லை.

கர்ணன் நியாயவானா? ஏதோ ஒரு சில இடங்களில் இருந்திருக்கலாம். ஆனால் அவன் நால்பெரும் தீயவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் இடம்பெற்றவன். நியாயத்திற்கும் அவனுக்கும் தூரம் அதிகம் தான்.

கர்ணன் நல்ல நண்பனா? ஒரு சில சமயங்களில் நட்பைக் காண்பித்திருக்கிறான். ஆனால் அவன் சிறந்த நண்பன் அல்லன். அவன் நட்பைக் காட்டிலும் துரியோதனன் நட்பு மேலானது.

கர்ணன் பிறப்பின் அடிப்படையில் இழிவுப் படுத்தப் பட்டானா? இல்லை. அவன் வளர்ப்புத் தந்தை தாய் குலமும் சூதர்கள் எனப்படும் குலம். அரசர் குலத்திற்கு ஈடானதே! அதிலும் அரசர்கள் இருந்தார்கள். ஆகவே இழிவான குலமும் அல்ல. குலத்தை வைத்து அவன் இழிவுப் படுத்தப்படவும் இல்லை.

கர்ணனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதா? – கல்வி மறுக்கப்படவில்லை. பதினெட்டு நாள் போருக்கு முன் பல தடவை அவன் அர்ஜ்ஜுனனை எதிர்த்துப் போரிட்டும் தோல்வியையே தழுவி இருக்கிறான். பதினெட்டு நாள் போரிலும் கூட பீஷ்மர் இறக்கும் வரைக்கும் வர மாட்டேன் என்று அவனே விலகி இருந்தான். ஆக எந்த நிலையிலும் அவனுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை.

பரசுராமர் சாபம் அவனை வீழ்த்தியதா? – இல்லை. அவர் சொன்ன பிரம்மாத்திரம் பலிக்காமல் போகட்டும் எனும் சாபம் பலிக்கவில்லை. அவன் இரு முறை இறுதிப் போரில் பிரம்மாத்திரம் உபயோகித்திருக்கிறான்.

அவனைப் பற்றிய ஒரே சாபம், தேரழுந்திப் போக அந்தணர் கொடுத்த சாபம். அது மட்டும் தான் பலித்தது. ஆக இப்படி பொய்களாலும், புனைவுகளாலும், தாயில்லாப் பிள்ளை என்ற இரக்கத்தினாலும் தான் கர்ணனுக்கு உயர்ந்த இடத்தை அளித்திருக்கிறார்கள் மக்கள்.

கர்ணன் மீது விருப்பு வெறுப்பு ஏதுமற்று. இவற்றை ஹரியண்ணா, அருள் செல்வன் பேரரசன் அவர்களின் மொழிபெயர்ப்பு மற்றும் கிஸாரி மோஹன் கங்கூலி அவர்களின் வியாச பாரத மொழிபெயர்ப்பின் துணையுடன் எழுதி இருக்கிறேன். இதில் தவறுகள் இருக்கலாம். அவை என் அறிவின் பிழையாலும் கவனப்பிழையால் நேர்ந்தவையாகத்தான் இருக்க வேண்டும். சுட்டிக் காட்டித் திருத்தினால் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வேன்.

நன்றி

– ஐயப்பன் கிருஷ்ணன்