Shadow

கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

Sutha-puthra-Kanan

கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். “பயிற்சிக் காலம் தொட்டு எனது மாணவர்கள் அனைவரிலும் மேம்பட்டவனாக விளங்கியவன் அர்ஜ்ஜுனன் ஒருவனே. இன்று பலர் அறிய அதை நிரூபித்துவிட்டான். வில்லுக்கோர் விஜயன் என்ற சொல்லுக்கே பிறந்தவன் அவன்” என்று துரோணர் சான்று கூற.

“பலே அர்ஜ்ஜுனா பலே! என் தம்பி எல்லோரினும் பெரியவன்” என்று தருமன் மேடையில் முழங்க.

“சத்தம் வேண்டாம். இது வீண் இறுமாப்பு. மற்றவர்களைக் குறைத்துக் காட்டும் அப்படி ஒரு சொல்லை நான் அப்படியே ஏற்க முடியாது. இந்தப் போட்டியில் என் வில் திறமையைக் கண்ட பிறகு, ‘வில்லுக்கொருவன் எவன்?’ என்று சொல்லிக் காட்டுங்கள் ” என்றவாறு அங்கே உள்ளே நுழைகிறான் கர்ணன்.

‘யார் நீ? உன் தாய் தந்தையர் எவர்?’ என்ற கேள்வியோடு அவமானப்படுவதாகக் கர்ணன் அறிமுகம் ஆரம்பிக்கிறது. நாம் பச்சாதாபம் பொங்க கர்ணனை அணுகினோம்.

கர்ணனை குலத்தைச் சொல்லி, அவனை அவமதித்து அவனுக்கு ஆசாரியர்கள் பாடம் சொல்லித் தரவில்லை என்ற குற்றச்சாட்டை கர்ண-ப்ரேமிகள் வைக்கிறார்கள். படத்திலும் கூட அப்படி இல்லை என்பது தான் உண்மை. ‘யார் நீ?’ என்ற கேள்விக்கு படத்திலேயே துரோணாச்சாரியாரின் மாணவர்களில் நானும் ஒருவன் என்று தான் கர்ணன் சொல்லுவான்.

இங்கே காண வேண்டிய முக்கியமான ஒன்று கர்ணன் யாரோ போல் கூட்டத்தின் நடுவில் இருந்து வருவான். அவன் சாகசங்கள் செய்து காட்டியதும் அப்போது தான் கர்ணனை முதன் முதலாகப் பார்ப்பது போல துரியோதனன் அவனை ஆரத் தழுவி தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான் என்பது போல காட்சியமைப்பு இருக்கும். இது எவ்வளவு அப்பட்டமான பொய்?

(இந்த ஹரிமுகக் கட்டம் பற்றி ஹரியண்ணா இது குறித்த விளக்கமான பதிவை கீழ் கண்ட சுட்டியில் எழுதி இருக்கிறார்.

http://www.tamilhindu.com/2008/11/mahabharata-discussions-002/

கர்ணன் எப்போதிருந்து துரியோதனனுடன் இருந்தான் என்பதை ஹரியண்ணா மேலுள்ள சுட்டியில் விளக்கி இருக்கிறார்.

//இவ்வாறு துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் பல உபாயங்களால் பாண்டவர்களைக் கொல்ல முயன்றார்கள்” (ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ஸ்ரீ மஹாபாரத ஸாரம், கௌரவ பாண்டவ யௌவன லீலை, அத்தியாயம் 128, ஸ்லோகம் 40)

பீமனுக்கு நஞ்சூட்டிக் கொல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் சொல்லப்படுவது.

“When that terrible poison intended for the destruction of Bhima failed of its effect, Duryodhana. Karna and Sakuni, without giving up their wicked design had recourse to numerous other contrivances for accomplishing the death of the Pandavas

[HK1]Karna is here alredy.
[HK2]Still clueless as to when he returned.

இது சம இடத்தில் கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பில் காணப்படுவது. (HK என்று காணப்படும் குறிப்புகள் என்னுடையவை)//

அவர் குறிப்பிடும் கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு சுட்டி – https://www.sacred-texts.com/hin/m01/m01130.htm

தமிழ் மொழி பெயர்ப்பில்: https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section129.html

//பீமனின் அழிவுக்காகக் கலக்கப்பட்ட நஞ்சு வேலை செய்யாததால், துரியோதனன், கர்ணன்[1] மற்றும் சகுனி ஆகியோர் கூடிப் பாண்டவர்களின் மரணத்திற்காக இன்னும் பல தீய திட்டங்களை வகுத்தனர்.(40) அந்தத் திட்டங்கள் அனைத்தையும் பாண்டவர்கள் அறிந்தாலும், விதுரனின் ஆலோசனைப்படித் தங்கள் கடுஞ்சீற்றத்தை அடக்கிக் கொண்டனர்[2].(41)//

இது எப்போது நடந்தது ? கிருபர் முதலாசானாய் பாடம் சொல்லித்தரும் முன்னர்.

//அதே நேரத்தில் மன்னன் (திருதராஷ்டிரன்), குரு இளவரசர்கள் சோம்பலுடன், குறும்புத்தனங்கள் நிரம்பி வளர்வதைக் கண்டு, கௌதமரை அவர்களுக்குக் குருவாக நியமித்தான். அவர்களை {இளவரசர்கள்} அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். நாணற்புதரில் பிறந்த கௌதமர் {கௌதமரின் பேரனான கிருபர்}, வேதங்களில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். குரு இளவரசர்கள் அவரிடம் ஆயுதக் கல்வியைக் கற்கத் தொடங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(42-44)//

ஆக கர்ணன் அப்போதே துரியோதனனுக்குப் பழக்கம். என்னமோ இப்பத்தான் ரெண்டுபேரும் பாத்துக்கிட்டாங்க அப்படிங்கறது அப்பட்டமான பொய்.

அடுத்து அவனுக்கு பாண்டவர்கள் மீது ஏற்பட்ட பொறாமையும் பகையும் ஏதோ விற்போட்டியின் போது வந்ததாக எண்ணிவிடக் கூடாது. ஆரம்பத்தில் இருந்தே அவன் அவர்களை வெறுத்தான் என்பதற்கு பாரதத்தில் சான்று உண்டு. மேலும் துரோணர் கர்ணனுக்கு “குலம் காரணமாக” கல்வியை அளிக்க மறுத்தார் என்பதும் சுத்தப் பொய். அவன் இளவரசர்களுடன் அவர்களுக்குச் சமமாகவே கல்வி பயின்றிருக்கிறான்.

https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section134_27.html

//விருஷ்ணிகள், அந்தகர்கள், மற்றும் பல்வேறு நிலங்களில் உள்ள இளவரசர்கள், சூத குலத்தவனான ராதையின் மகன் (கர்ணன்) ஆகியோர் அனைவரும் துரோணருக்குச் சீடர்களானார்கள்.(11) ஆனால் அவர்கள் அனைவரிலும், சூதப் பிள்ளையான கர்ணன், பொறாமையால் அடிக்கடி அர்ஜுனனை எதிர்த்தும், துரியோதனனை ஆதரித்தும் பாண்டவர்களை அவமதித்து வந்தான்.// ( ஹரியண்ணாவின் கட்டுரையிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார் )

‘சரி, இப்ப அவன் திறமையை நிரூபிக்க வந்துட்டான். அவனை ஏன் குலம் சொல்லி ஆரம்பத்துலயே நிறுத்துனாங்க?’ என்று கேள்வி வரும் இல்லையா!

அதற்கு முன்னாடி துரோணர் அந்த அரங்கத்தை ஏன் ஏற்படுத்தினார் என்பதைப் பார்ப்போம்.

//திருதராஷ்டிரனிடம்,(1,2) “ஓ! குரு மன்னர்களில் சிறந்தவரே, உமது மகன்கள் தங்கள் கல்வியை முடித்துவிட்டனர். ஓ! மன்னா, உமது அனுமதியுடன் அவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தட்டும்” என்றார்.(3)//

அதாவது தான் கற்பித்த இளவரசர்களின் திறமையை எடுத்துக்காட்ட வேண்டும். இளவரசர்கள் திறமையைக் காட்டும் இடம். “போட்டி இல்லை” என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இப்போது நேரடியாக அந்த அரங்கத்திற்குள் நுழைவோம்.

எல்லோரும் தங்கள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருக்கும் போது பீமனும் துரியோதனனும் மோதுகிறார்கள். துரியோதனனும் பீமனும் செய்த பயிற்சி, போட்டியாகி அது இருவரும் வன்மத்துடன் மோதிக் கொண்டார்கள்.

மஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்

//இரண்டு பேரும் ‘கிடைத்தது சந்தர்ப்பம்’ என்று புகுந்து ஆட்டக் களத்தை அதகளமாக்கினார்கள். (அதகளம் என்று ஏதோ ரைமுக்காகச் சொல்லவில்லை. அதகளம் என்றால் போர்க்களம் என்றுதான் பொருள். அதகளம், அமர்க்களம் எல்லாம் போர்க்களத்தைதான் குறிக்கும்.)

அவர்களுடைய மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. பார்வையாளர்களுக்குத் திகிலும் திகைப்பும் உண்டாயிற்று. துரோணர் அஸ்வத்தாமனிடம் சொல்லி அவர்களை வலுக்கட்டாயமாக நிறுத்த வைத்தார். என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்:

“And seeing the place become like a troubled ocean, the intelligent Bharadwaja said unto his dear son, Aswatthaman, ‘Restrain both these mighty warriors so proficient in arms. Let not the ire of the assembly be provoked by this combat of Bhima and Duryodhana.” (மஹாபாரதம், ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 137)//

//அப்படிப்பட்ட சூழலில், மக்களுடைய அபிப்பிராயம் இரண்டு பக்கத்து இளவரசர்களுக்குமாகப் பிரிவதை எந்த முதிர்ந்த நிர்வாகியும் விரும்பமாட்டான். துரோணர் ஆணைப்படி அஸ்வத்தாமன் ‘நிறுத்துங்கள்! இது குருவின் ஆணை!’ என்று பெருங்குரலில் கூவித்தான் இருவரையும் நிறுத்த முடிந்தது//

கர்ணன் அப்போது வில், வாளுடன் உள்ளே அரங்கத்தில் நுழைகிறான். உள்ளே நுழையும் போதே ஆணவம் தான்.

//பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட அந்த வீரன், அரங்கத்தைச் சுற்றி நோட்டம் விட்டுத் துரோணருக்கும் கிருபருக்கும் {அதிகம் மதியாதவனைப் போல} அலட்சியமாக வணக்கம் செலுத்தினான்.(6)//

அடுத்ததாக அவன் அருச்சனனிடம் சொல்வதைக் கவனியுங்கள்.

//“ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ செய்து காட்டியதை விஞ்சும் வகையில் நான் இந்தச் சபையின் முன் அருஞ்செயல்கள் செய்வேன். அவற்றை நீ கண்டால் வியப்பில் மலைத்துவிடுவாய்” என்றான்.(9)//

//அக்கணத்தில் பீபத்சு {அர்ஜுனன்} கோபமும், நாணமும் கொண்ட போது, துரியோதனன் மகிழ்ச்சியால் நிறைந்தான்.(11) கர்ணன், துரோணரின் அனுமதியுடன், பார்த்தன் முன்பு செய்து காட்டிய அனைத்து அதிசயங்களையும் செய்து காட்டினான்.(12) ஓ! பாரதா, துரியோதனன் தனது தம்பிகளுடன் சென்று கர்ணனை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி கொண்டு அவனிடம்,(13) “ஓ! பெரும்பலம் வாய்ந்த வீரனே, நீ வரவேற்கப்படுகிறாய். நான் என் நற்பேறின் நிமித்தமாகவே உன்னை அடைந்திருக்கிறேன். ஓ! பண்பட்டவனே, நீ உன் விருப்பப்பட்ட படியே, எனக்கும், எனது அரசுக்கும் ஆணையிடுவாயாக” என்றான்.(14)//

அடுத்து “துரோணரின் அனுமதியுடன்” அந்த அரங்கத்தில் தன்னுடைய ஆற்றலைக் காண்பித்தான். ஆக அவன் வில்லாற்றலைக் காண்பிக்க யாரும் தடை செய்யவில்லை. அத்துடன் இதுவரைக்கும் எங்கேயும், ‘யார் நீ?’ என்ற கேள்வி ஆசாரியர்களிடம் இருந்து வரவே இல்லை. மேலும் கர்ணன் துரியோதனனுக்கு ஏதோ புதிதாக அறிமுகமானவனாகவும் காட்டப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

அடுத்து கர்ணன் துரியோதனனிடம் என்ன சொல்கிறான் என்பது தான் இங்கே மிக முக்கியமானது.

/அதற்குக் கர்ணன், “நீ இப்படிச் சொன்னதே போதும், நீ கூறியவற்றை அடைந்தவனாகவே என்னை நான் கருதுகிறேன். உனது நட்பையே விரும்புகிறேன். ஓ! தலைவா {துரியோதனா}, அர்ஜுனனுடன் தனிப்போரிடுவதே எனது ஆவல்” என்றான்.(15)/

இங்கே நடப்பது விற்போட்டி அல்ல. அவரவர்கள் தங்கள் திறமையைக் காட்டினார்கள். கர்ணனும் தன் திறமையைக் காட்டினான். வன்மத்தோடு துரியோதனன், பீமன் துவந்ததத்தை மக்கள் இரு பிரிவாகப் பிரியும் அபாயத்தால் சற்று முன் நிறுத்தினார்கள். ஆனால் கர்ணனோ தன் திறமையைக் காட்டியதோடு நிற்காமல் அர்ஜ்ஜுனனுடன் தனிப்போரை வேண்டுகிறான். அதற்கும் பாண்டவர்கள் தரப்பில் எந்த எதிர்வினையும் இல்லை. ஆனால் அடுத்து துரியோதனன் சொல்லும் வார்த்தை எந்த வீரனையும் சீண்டும் வார்த்தை.

//துரியோதனன், “என்னுடன் சேர்ந்து வாழ்வின் நன்மைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பாயாக! உனது நண்பனுக்கு நன்மை செய்வாயாக, ஓ! எதிரிகளை அடக்கி ஒடுக்குபவனே, அனைத்து எதிரிகளின் தலையிலும் உனது பாதத்தை வைப்பாயாக” என்றான்.(16)//

எந்த வீர ஆண்மகன் இதைப் பொறுப்பான்? அருச்சுனன் வீறு கொண்டு பதில் சொல்கிறான்.

//”இதன்பிறகு, அர்ஜுனன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி, தன் சகோதரர்களுக்கு {துரியோதனாதிகளுக்கு} மத்தியில் மலையென நின்ற கர்ணனிடம்,(17) “அழைக்கப்படாமல் வருபவர்களும், கேட்கப்படாமல் பேசுபவர்களும் செல்லும் பாதை {உலகம்} உன்னுடையதே. என்னால் கொல்லப்பட்ட பிறகு நீ அங்கேதான் போகப் போகிறாய்” என்றான்.(18)//

இப்போது கர்ணன் மேலும் அருச்சுனனை வம்புக்கு இழுத்து போருக்கு அழைக்கிறான்.

//கர்ணன், “இந்த அரங்கம் அனைவருக்கும் பொதுவானது, ஓ! பல்குனா {அர்ஜுனா}, இஃது உனக்கு மட்டும் சொந்தமானதல்ல. பலத்தில் மேன்மையானவர்களே மன்னர்கள். க்ஷத்திரியர்கள் பலத்தை மட்டுமே மதிப்பார்கள்.(19) வாய்ச்சண்டை எதற்கு? அது பலவீனமானவர்களின் வழியாகும். ஓ! பாரதா, குருவின் முன்னிலையில் நான் இன்று உனது தலையைக் கொய்யும் வரை உனது கணைகளால் என்னிடம் பேசுவாயாக” என்றான்”.(20)//

அருச்சுனன் துரோணரின் அனுமதியுடன் போர் செய்ய முன் செல்கிறான். மொத்தக் கூட்டமும் இரண்டாகி நிற்கின்றன.

//வைசம்பாயனர் தொடர்ந்தார், “சகோதரர்களால் விரைவாகத் தழுவி அனுப்பப்பட்டவனும், எதிரிகளின் நகரங்களை அடக்குபவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் அனுமதியுடன் போருக்கு முன்னேறினான்.(21) மறுபுறத்தில், துரியோதனனாலும், அவனது சகோதரர்களாலும் தழுவப்பட்ட கர்ணன், தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்குத் தயாராக நின்றான்.(22)//

//திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} கர்ணனுக்கு அருகிலேயே நின்றிருந்தான். பரத்வாஜர் {துரோணர்}, கிருபர் மற்றும் பீஷ்மர் ஆகியோர் பார்த்தனுக்கு அருகில் நின்றனர்.(26) அங்கே கூடியிருந்த கூட்டம் இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. பெண் பார்வையாளர்களும் அப்படியே பிரிந்திருந்தனர்.//

அரங்கமே உணர்ச்சிக் கொதிப்பில் இரண்டாகப் பிரிந்திருக்கின்றது. மீண்டும் மக்களுக்குள்ளே பிரிவினை வரும் சூழல். இது எந்த நாட்டின் அரசிற்கு நன்மை பயக்கும் ? இந்த நிலையில் தான் கிருபர் பேசுகிறார்.

//இரு வீரர்களும் கரங்களில் வில் வைத்திருப்பதைக் கண்டவரும், அனைத்துக் கடமைகளை அறிந்தவரும், நேருக்கு நேராக இருவர் போரிடும் முறைகளையும் நன்கறிந்தவருமான சரத்வானின் மகன் {கிருபர்}, கர்ணனிடம்,(30) “குந்தியின் இளைய மகனான இந்தப் பாண்டவன், கௌரவக் குலத்தைச் சார்ந்தவன். அவன் உன்னுடன் தனியாகப் போர் புரிவான்.(31) ஆனால், ஓ! பெரும்பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, நீயும் உனது குலத்தைக் கூற வேண்டும். உனது தந்தை, தாய் மற்றும் எந்த அரசு வழியை அலங்கரிப்பவன் நீ என்பது போன்றவற்றைக் கூற வேண்டும்.(32) இதையெல்லாம் அறிந்த பிறகே, பார்த்தன் {அர்ஜுனன்} உன்னுடன் போரிடுவான், இல்லையென்றால் போரிடமாட்டான். மன்னர்களின் மைந்தர்கள், புகழற்ற குலத்தில் பிறந்த மனிதர்களுடன் நேருக்கு நேர் தனியாகப் போரிட மாட்டார்கள்” என்றார்”.(33)//

// https://www.sacred-texts.com/hin/m01/m01139.htm //

இங்கே கிருபர் கர்ணனுக்கும் ஆசாரியராக இருந்தார் என்று ஊகிப்பதற்கும் இடமுண்டு. அவர் கர்ணனையும் நன்றாகவே அறிந்திருக்கிறார் என்பதை மேலுள்ள பத்தியில் காண்கிறோம். அவர் தான் இப்பொழுது குறுக்கிட்டு தடுக்கிறார்.

துரியோதனனால் பாதுகாக்கப்பட்டு, அருச்சுனன் மீதான பொறாமையுடன், “அட வாடா சண்டைக்கு.. நீயா நானா பாத்துடலாம்” என்பதால் உண்டாகும் பின் விளைவுகள் என்ன? நாடு இரண்டாகப் பிரியும். அரசு உடையும். மக்கள் அழிவார்கள். இதெல்லாம் தடுக்கவேண்டியது குல குருவின் கடமை. துரோணரால் தடுக்க இயலாமல் போனது. அவரால் அந்த அவமானத்தை ஏற்க முடியாது. அப்படி வேண்டாம் என்றிருந்தால் அவருடைய பயிற்சியின் மீது களங்கம். ஆகவே கிருபர் அந்த இடத்தில் கர்ணனைத் தடைச் செய்ய வேண்டியது அவசியமாயிற்று.

ஹரியண்ணாவின் வாதத்தை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

ஐயா, ரெண்டுபேரும் பங்காளிகள். ரெண்டு பேருக்கும் உரிமை இருக்கிறது. பெரிய ஜமீன்தார் கண்ணில்லாதவர். சின்ன ஜமீன்தார் ஜமீனைக் கவனித்துக் கொண்டார். பண்ணையை விருத்தி செய்தார். காட்டுக்குப் போய் செத்துப் போயிட்டார். அவருடைய பிள்ளைகளுக்கு ஜமீனில் உரிமையே இல்லாமல் போய்விடுமா? அவர்களை வைத்துக் கொண்டே அவர்களைக் கேவலப்படுத்தி இப்படிப் பேசினால் அவர்கள் உடலில் மட்டும் க்ஷத்திரிய ரத்தம் ஓடவில்லையா? தர்மன் எதிர்த்துப் பேசினானா? ஒருவார்த்தை பேசவில்லை அல்லவா? ஆனால் அர்ஜுனன் மட்டும் எதிர்வார்த்தை சொன்னான் என்பதையும் நான் சொல்லவேண்டும்:

‘Arjuna, after this, deeming himself disgraced, said unto Karna stationed amidst the brothers like unto a cliff, ‘That path which the unwelcome intruder and the uninvited talker cometh to, shall be thine, O Karna, for thou shall be slain by me.’ (மஹாபாரதம், ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 138)

உணர்ச்சி வெள்ளம் அணைபோட முடியாத அளவுக்கு உடைப்பெடுத்துக் கொண்டது. பார்த்தனுக்குப் போரிடுவதற்கான அனுமதியை துரோணர் வழங்கிவிட்டார். இப்படி ஒரு அவமானத்தை அவரால் மட்டும் சகித்துக்கொள்ள முடியுமா என்ன! அர்ஜுனனன் போருக்காக ஓர் எட்டு எடுத்து வைத்தான். தன்னுடைய இரண்டு மகன்களும் போருக்குத் தயாராக நிற்பதைப் பார்த்த குந்தி மறுபடி மயங்கி விழுந்தாள். விதுரன் பணிப்பெண்களைக் கொண்டு அவளைக் கவனிக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் சமயத்தில் மக்களிடையே கொந்தளிப்பு பெருகிக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்தில்தான் கிருபர் குறுக்கிட்டார்.

ஹரியண்ணாவின், மஹாபாரத உரையாடல்கள் 006 எனும் இந்தக் கட்டுரையில் மிக விளக்கமாகக் காணலாம்.

அதன் பின் தான் கர்ணனை, “அர்ஜ்ஜுனனை எதிர்ப்பதற்காக” அங்க தேச அதிபதியாக்கினான் துரியோதனன்.

ஆக, துரோணர் குலம் காட்டி கல்வியைத் தவிர்க்கவில்லை. அரங்கத்திலும் குலம் காட்டி அவன் திறமையைக் காட்டுவதைத் தடுக்கவில்லை. அது இளவரசர்களுக்கான களம் என்னும் போதில் ஆசாரியர்கள் கர்ணனையும் தடுத்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் அனுமதிக்கவே செய்தார்கள். ஆக, குலம் காட்டி கர்ணனுக்கு கல்வி மறுக்கப்பட்ட என்ற கர்ண-ப்ரேமிகளின் வாதம் முற்றிலும் பொய்யாகிறது.

-ஐயப்பன் கிருஷ்ணன்