தைரியசாலிக்கே பெண் என்று சொல்லிவிடுகிறார் கதாநாயகியின் தந்தை. நாயகனோ சாலையைக் கடக்கக் கூட தொடை நடுங்குபவன். அவன் பயத்தை மீறி எப்படி கதாநாயகன் ஆகிறான் என்பதே படத்தின் கலகலப்பான் கதை.
தாசில்தார் ஆஃபீசில் அட்டெண்டராக சூரியும், ரெவன்யூ இன்ஸ்பெக்டராக விஷ்ணு விஷாலும் பணிபுரிகின்றனர். இருவரும் ஆறாம் வகுப்பில் பிரிந்த நண்பர்கள் என ஒரு காமிக்கல் ஃபிளாஷ்-பேக் காட்டப்படுகிறது. சூரியின் கதாபாத்திரத்தின் பெயர் அண்ணாதுரை; விஷ்ணு விஷாலின் பெயர் தம்பிதுரை. நாயகனின் நண்பர்கள் செய்யும் அதே வேலையைத்தான் சூரி இப்படத்தில் செய்கிறார். தம்பியின் காதலுக்கு உதவுவது தான் அண்ணாவின் பிரதான வேலை.
நாயகனின் பயத்தைப் பார்த்து, ‘ரொம்ப அப்பாவி’ எனக் காதலிக்கத் தொடங்கும் அழகு நாயகியாக கேத்ரின் தெரசா. சில காட்சிகள் ஸ்ஃபூப் மூவி போல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் முழுமையான கலகலப்பைத் தரத் தவறி விடுகிறது. முழு நீள நகைச்சுவை படமாக இல்லாதது ஒரு சிறு குறை. நாயகனின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். அவரது வழக்கமான குதூகலமும் படத்தில் மிஸ்ஸிங்.
ஷேக்காக வரும் ஆனந்த்ராஜ் எபிசோட் செமயாக உள்ளது. அவரிடம் சிக்கிக் கொள்ளும் சூரியும், அதற்கு முன் அவர் செய்யும் அலப்பறையும் செமயாக உள்ளது. குறிப்பாக க்ளைமேக்ஸில், சூழலுக்குத் தகுந்தாற்போல் மொட்டை ராஜேந்திரன் பாடல் பாடும் காட்சிகள் அட்டகாசம். ஷான் ரோல்டனின் இசை, இளமைத் துள்ளலாய் உள்ளது.
தண்ணி அடித்தால் ஒருவனுக்கு வீரம் வந்து கதாநாயகன் ஆகிவிடுவான் என்ற கருத்தாக்கம் கொண்ட காட்சிகள் நகைச்சுவைக்காக வைக்கப்பட்டாலும், அதன் அபத்தம் பெரும் உறுத்தலாய் உள்ளது. ‘தப்பைத் தட்டிக் கேட்பவன் மட்டும் தைரியசாலி இல்லை; தப்பே செய்யாதவன் கூடத் தைரியசாலிதான்’ என்று கதாநாயகனுக்கு சரண்யா பொன்வண்ணன் க்ளைமேக்சில் கொடுக்கும் விளக்கம் ரசிக்க வைக்கிறது.