‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில், சிவாஜி தன் தளபதி ஜெமினியைப் பார்த்துச் சொல்லும் பிரபலமான வசனத்தைப் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். வெற்றியை நோக்கிப் போகும் பொழுது, கூட இருந்து உற்சாகம் தரச் சொல்லப்படுவது “பலே”. இப்படத்தின் நாயகனது செயல், அப்படி பலே சொல்லிப் பாராட்டும்படி (!?) இருக்கும் என்பதை வலியுறுத்தும் காரணப் பெயராகத் தலைப்பை வைத்துள்ளனர்.
வயலூருக்கு ட்ரான்ஸ்ஃபராகி வருகிறார்கள் ஃபோஸ்ட் மாஸ்டர் ரோகினியும் அவர் மகன் சசிகுமாரும். அவருக்கு தான்யா மீது கண்டதும் காதல் மலர்வதோடு உள்ளூர் கேபிள்காரருடன் தகராறாகி விடுகிறது. காதலும் தகராறும் என்னானது என்பதே படத்தின் கதை.
தணக்கனாக சங்கிலி முருகன் நடித்துள்ளார். கோவை சரளாவை நடிக்க விட்டு விட்டு, அசால்ட்டாக ஸ்கோர் செய்குறார். மிக வலுவான கேரக்டர் ரோல்களை இயக்குநர்கள் அவருக்குத் தரலாம். ‘செல்ஃபி’ காத்தாயியாக கோவை சரளா. படம் இவரை நம்பித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காகவேணும், காத்தாயி கதாபாத்திரத்தை இன்னும் நேர்த்தியாகச் செதுக்கியிருக்கலாம் இயக்குநர் சோலை பிரகாஷ்.
சசிகுமாரால் ஃபாலோ செய்யப்படவும், காதலிக்கப்படவும் தனிக்கொடியாக அறிமுகமாகியுள்ளார் தான்யா. சக்திவேலாக சசிகுமார். காட்சிகளோடு இயைந்த நகைச்சுவைக் காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம் சசிகுமார். பல்லி முட்டையை நாயகியின் எச்சலில் உடைப்பது; அதன் பின் அந்த பெண் பூசாரி போலியானவர் என நாயகன் கண்டுபிடிப்பதென காட்சிகளை நகைச்சுவை எனும் பெயரில் நன்றாக ஒப்பேற்றியுள்ளனர்.
நாயகனுக்கும் வில்லனுக்குமான மோதல் தொடக்கத்தில் சுவாரசியம் ஏற்படுத்தினாலும், போகப் போக அதுவும் பொலிவிழந்து போய் விடுகிறது. போலீஸைப் பார்த்ததும் தான்யாவின் தந்தை பாலா சிங் பயப்படுவது சரி, ஏன் அரிவாளை எடுத்து அழுத்தமாகப் பிடித்துக் கொள்கிறாரோ எனத் தெரியவில்லை.
ஒரே ஒரு சண்டைக் காட்சி தான் எனினும், இயல்பான சண்டையாக வடிவமைத்துள்ளார் திலீப் சுப்புராயன். கிடாரியில் கலக்கியிருந்த தர்புகா சிவா, இந்த அவசர படத்திற்கு இவ்வளவு போதுமென நினைத்து விட்டார் போலும். கத்தியைக் கீழே வைத்த சசிகுமார், கூர்மையான கதையாகத் தேர்ந்தெடுத்துக் களமிறங்கவேண்டும்.