Shadow

முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி

First Clap

ஆயிரம் விருதுகள் கிடைத்தாலும், கலைஞர்களுக்கு கைதட்டல் என்பது தான் ஊக்க சக்தி. அதுவும் முதல் கைதட்டல் என்பது அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் முதல் அங்கீகாரம். அவர்களது நம்பிக்கையைப் பன்மடங்கு உறுதி செய்யும் தருணம் அது. தன் படைப்பு, பெருவாரியான மக்களைச் சென்று சேர்ந்துள்ளது என்ற உணர்வு தரும் சொல்லொன்னா பரவசத்திற்கு அளவுகோலே கிடையாது.

அப்படி, இளம் படைப்பாளிகளைப் பரவசப்படுத்தும் முன்முயற்சியைத் தான் மூவி பஃப் (Movie Buff – First Clap) மேற்கொண்டுள்ளது. மூன்று நிமிடங்கள் காலளவு கொண்ட குறும்படப் போட்டியை நடத்தி, தேர்வு பெற்ற ஐந்து படங்களைத் தமிழகம் முழுவதும் சுமார் 150+ திரையரங்குகளில் படத்தின் நடுவே வரும் இடைவேளையில் ஒளிபரப்புகின்றனர். மக்கள் தங்களுக்கு விருப்பமான படத்தை ஓட்டு செய்தும் தேர்ந்தெடுக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று படங்களுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படுவதோடு, நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் பட வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய 2டி எண்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர், “250 படங்கள் போட்டியில் கலந்துகொண்டன. அதிலிருந்து 19 படங்களைத் தேர்ந்தெடுத்தோம். அதிலிருந்து மிகவும் சிரமப்பட்டு ஐந்து படத்தை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்துள்ளோம். ஆனால், எங்கள் நிறுவனத்தில் அந்த 19 குழுவுடனும் கதை விவாதிக்க உள்ளோம். எங்கள் படங்களில் பணி புரியவும் வாய்ப்புகளை வழங்கவுள்ளோம்” என்றார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் வெற்றிமாறன் போன்றோர்கள் தேர்வு செய்யும் குழுவில் இருந்தவர்கள்.

App(a) lock, இவள் அழகு, இந்த நாள் இனிய நாள், Think & Ink, என்னங்க சார் உங்க சட்டம் என்ற ஐந்தும் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள். ஏப்ரல் 13 வரை மக்கள் வாக்கு அளிக்கலாம்.

First Clap Short Film COntest