Shadow

கவலை வேண்டாம் விமர்சனம்

Kavalai vendaam vimarsanam

யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே!

ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை.

தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளுமளவு திரைக்கதை மனித மனங்களோடு சடுகுடு ஆடவில்லை. நகைச்சுவைப் படத்தில் அவ்வளவு எதிர்பார்க்கக் கூடாதெனினும், காதல் வாழ்க்கை தாம்பத்யம் என்ற விஷயங்களை ‘குச்சிமிட்டாய் யாருக்கு?’ என்ற அளவிலேயே மேம்போக்காக அணுகியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

காஜல் அகர்வாலுக்கு எவ்வாறு பாபி சிம்ஹா க்யூட்டாக ப்ரொபோஸ் செய்தாரெனச் சொல்லப்படவில்லை. வசனமாகக் கடக்கிறது. அதனால் பாபி சிம்ஹா வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகவே மனதில் ஒட்டாமல் போகிறார். சுனைனாவும் அப்படியே! திடீர் திடீரெனத் தோன்றி, ஜீவாவையே சுற்றிச் சுற்றி வருகிறார் சுனைனா. காஜல் அகர்வாலும் சுனைனாவும் முதல்முறை பார்த்துக் கொள்ளும் பொழுது, ‘ஊத்திக் கொடுக்க வந்தியா?’ என அறிமுகமாகிக் கொள்கின்றனர். படம் முழுவதுமே இப்படியான தேவையற்ற வார்த்தை மோதல்கள் கதையைப் பின்னுக்குத் தள்ளி, பார்வையாளர்களை மிகவும் அயர்ச்சி அடைய வைக்கிறது.

ஒரு காட்சியில், “நான் மகேஷ்பாபு இல்லை. பட்ட பாபு” என்கிறார் மனோபாலா. “என்னது பொட்ட பாபுவா?” எனக் கேட்கிறார் காஜலின் தோழியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணா (இவர் விரைவில் இசை என்ற படத்தின் நாயகி). இப்படியான வசனங்களையே நகைச்சுவை என நம்பி, படம் தன்னைத் தானே ஒரு மாற்று தரத்தில் குறைத்துக் கொள்கிறது. போதாக்குறைக்கு போலிஸ் ஸ்டேஷனில் ஆர்.ஜே.பாலாஜிக்கு வயிற்றைக் கலக்குவது, பாலசரவணனுக்கு நடக்கும் விவாகரத்துச் சடங்கு என படம் கதைக்கு உதவாத மொக்கை நகைச்சுவைக் காட்சிகளுக்கு அதீத முக்கியத்துவம் தந்துள்ளது. குடிக்கார மருத்துவராகவும், ஜீவாவின் தந்தையாகவும் மயில்சாமி நடித்துள்ளார். அவருக்கு இணையாக, அதாவது ஜீவாவின் சித்தியாக ஜாங்கிரி மதுமிதா நடித்துள்ளார். ஆனால், மயில்சாமி தன் வழக்கத்தைச் சோலோவாகத்தான் தொடர்கிறார்.

அரவிந்த்தாக வரும் ஜீவா தோற்றத்தில் வசிகரித்தாலும், வலுவற்ற திரைக்கதை அவருக்கு நாயக பிம்பத்தை அழுத்தமாகப் பதிக்கத் தவறி விடுகிறது. திவ்யாவாக வரும் காஜல் அகர்வாலின் கதாபாத்திரத்தை நம்பித்தான் படமே! அக்கதாபாத்திரத்திற்கு ஏற்படும் சங்கடங்களையும் குழப்பங்களையும், அதனால் எடுக்கும் முடிவுகளையும் ஒழுங்காக பார்வையாலர்களுக்குக் கடத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வசனங்களும் துணை புரியாதபட்சத்தில், காஜல் அகர்வால் தன் சக்திக்கு ஏற்றவாறு சமாளித்து விடுகிறார். ஒன்றைச் சாதித்துக் கொள்ள, குறிப்பாக காதலில், பிரதான ஆண் பாத்திரங்கள் கையாளும் அகம்பாவமான பிடிவாதமான வழிமுறைகளை எல்லாம், மென்மையான முதிர்ச்சியான பாங்காக மாற்ற வேண்டிய சமூகக் கட்டாயமும், அவசியமும் எழுந்துள்ளது என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும்.

இளமை துள்ளுகிறது – அபிநந்தனின் ஒளிப்பதிவில். தனது முந்தைய படம் போலவே இயக்குநர் டி.கே இப்படத்தையும் மலைப் பிரதேசத்திலேயே காட்சிப்படுத்தியுள்ளார். பாடலாகக் கேட்ட பொழுதிருக்கும் பெரும் ஈர்ப்பு, காட்சிகளோடு காணும் பொழுது சற்று மிதமாகத்தான் உள்ளது. பாடல் வரும் காட்சிகள் காரணமாக இருக்கலாம்.

“வாழ்க்கை வாழ்வதற்கல்ல; கொண்டாடுவதற்கு” என்ற சொல்ல முற்படுகிறது படம். எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், நாம் சோர்ந்து அமர்வது போல், வாழ்க்கை நிற்பதில்லை. அது போய்க் கொண்டே இருக்கும். அதன் போக்கில் நடந்தவைகளுக்குக் கவலை கொள்ளாமல் நாமும் அடுத்து எனக் கொண்டாட்ட மனநிலையோடு இருக்கவேண்டும். அதைத்தான், “கவலை வேண்டாம்” என்று சொல்கிறார் இயக்குநர் டி.கே. தனது முதல் படத்தினைப் போலவே, இப்படத்திலும் படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரின் புகைப்படத்தையும் க்ரெடிட்டில் சேர்த்துள்ளார். இம்முறை, அவர்களின் சிறுவயது புகைப்படத்தையும் சேர்த்துள்ளது சிறப்பு.