வேலைக்குச் செல்லாமல், மதுரை மாநகரின் டீக்கடைகளில் பொழுது போக்குகிறார்கள் ஐந்து இளைஞர்கள். அவர்களில் நாயகன் சிவா மட்டும் பெண்கள் என்றால் பாராமுகமாய் உள்ளான். சிவா ஏன் அப்படி உள்ளான்? தன்னைக் காதலிக்கும் இலக்கியாவை அவன் ஏற்றுக் கொண்டானா? பட்டதாரி இளைஞர்கள் பிழைப்புக்கு என்ன செய்தார்கள் என்பதே படத்தின் கதை.
சிவாவாக அபிசரவணன் நடித்துள்ளார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே!’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். ஊரோடு ஒத்துவாழ்வது போல், தற்போதைய ட்ரெண்டின் படி வேலை வெட்டியில்லாதவராக நடித்துள்ளார். அவரது நண்பர்கள் அனைவரும் பெண்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்க, அபிசரவணன் மட்டும் விதிவிலக்காய் இருக்கிறார். எந்தப் பெண்ணாவது கை கொடுத்தால் கூட, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவார்.
‘வாவ்..’ என நாயகனின் இந்தக் குணம் கண்டு காதலில் விழுகிறார் நாயாகி அதிதி. இலக்கியா எனும் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு, நாயகனைச் சுற்றி வந்து காதல் செய்வது மட்டுமே வேலை. அபிசரவணனுக்கோ டீக்கடையில் டீ சாப்பிடுவதும், டாஸ்மாக்கில் பீர் அடிப்பது மட்டுமே வேலை. கதையோ, சுவாரசியமோ, திருப்பமோ இல்லாமல் முதல் பாதி தேமோவென முடிகிறது.
இரண்டாம் பாதியில், ஓர் அழகான ஃப்ளாஷ்-பேக் வருகிறது. அது முடிந்ததுமே, குடத்தை உருட்டிவிட்டது போல் படம் முடிந்தே விடுகிறது. அதிதி தான் பிரதான நாயகி என்றாலும், ஃப்ளாஷ்-பேக்கில் சரோவாக வரும் ராசிகாவிற்குச் சற்றே அழுத்தமான கதாபாத்திரம். படத்தை ஓரளவுக்கேனும் கலகலப்பாக வைத்திருக்க உதவுவது, டீ மாஸ்டர் பாக்கியநாதனாக வரும் கலையரசனே! நாயகனின் நண்பனாக அம்பானி ஷங்கர் படம் நெடுகே வந்தாலும், மூன்றே காட்சிகளில் போலிஸாக வரும் மகாநதி சங்கர் வழக்கம் போல் தன் கரகரக் குரலால் கவர்கிறார்.
படத்தில் வலுவான கதையும், சுவாரசியமான திரைக்கதையும் இல்லாவிட்டாலும், “படித்த பட்டதாரிகள் வேலைக்குப் போகணும் என்று நினைக்காமல், தொழில் தொடங்கி பத்துப் பேருக்காவது வேலை தரணும்” என்ற மெஸ்சேஜை மறக்காமல் சொல்லி, தலைப்புக்கு நியாயம் கற்பித்துள்ளார் இயக்குநர் சங்கர்பாண்டி.