
தொடக்கத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டாலும், கலகலப்பான படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் மேஜர் கெளதம். எம்.எஸ்.பாஸ்கரும், யோகி பாபுவும் தமது டைமிங் சென்ஸாலும், மாடுலேஷனாலும் 2 மணி நேரத்திற்கும் குறைவான படத்தைக் கரையேற்றியுள்ளனர்.
கழிவறை கட்டும் திட்டத்தில் தமிழக அமைச்சர் ஊழல் செய்து சுருட்டிய 100 கோடியைக் கொலம்பியா வங்கியில் டெப்பாசிட் செய்ய, முதற்கட்டமாக ஹவாலா மூலம் மலேஷியா அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பணத்தை நாயகன், நாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் என மொத்தம் 8 பேர் திருட முனைகின்றனர். அமைச்சரின் பணம் யார் கையில் சிக்குகிறது என்பதுதான் படத்தின் கதை.
கெட்டவனாக யோகி பாபு. டானாக (Don) வரும் கல்யாண் மாஸ்டரின் உதவியாளாக வருகிறார். படத்தில் சகட்டுமேனிக்கு அனைவரையும் கலாய்க்கிறார். “இருபது கோடி!!” என அதிசயித்து, “டொன்ட்டி லேக்ஸ்” என அவர் முடிக்கும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.
எம்.எஸ்.பாஸ்கர் நாயகனின் தாத்தாவாக வருகிறார். கதாபாத்திரத்தின் பெயர் சின்ன பையன். ஏதாவது செய்து, அதாவது திருடியோ, யாரையேனும் கடத்தி ப்ளாக்-மெயில் செய்தோ சம்பாதித்து, தன் பரம்பரை வீட்டை மீட்க வேண்டுமென்பது தான் அவரது லட்சியம். மிக அமெச்சூரான தெளிவற்றக் கதாபாத்திர அறிமுகங்கள் தான் படத்தின் ஆரம்ப சுணக்கத்திற்குக் காரணம். பார் டான்ஸர் ஷாலுவாக கவர்ச்சி காட்டியுள்ளார் சாந்தினி.
ஹவாலாவில் பணம் மாற்றும் ஆளாக விச்சு விஸ்வநாத் வருகிறார். அதீத சுதாரிப்புடன் இருக்க வேண்டிய ஒரு கதாபாத்திரத்தை, நகைச்சுவைக்காக மிக மந்தமானவராகக் காட்டியுள்ளார் இயக்குநர். அது கொஞ்சம் கடியை ஏற்படுத்தினாலும், படத்தின் ஓட்டத்தில் அதை மறந்து விடுகிறோம். தமிழகத்தின் நம்பர் 2 & நம்பர் 1 டிடெக்டிவாக வரும் சுகர், தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு குணசித்திர அறிமுகம். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் இவர்.
ஜெய் எனும் பாத்திரத்தில் அரவிந்த் ஆகாஷ் நாயகனாக நடித்துள்ளார். ஊர் கூடித் தேரிழுக்கும் படத்தில், இவர்தான் நாயகன் எனச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. ஏனென்றால் அவர் ‘ஒரு வேலையும் இல்லாதவர்’. அவருக்கு இணையாக மது எனும் பாத்திரத்தில் அஸ்வதி அறிமுகமாகியுள்ளார். ஒருவரை ஏமாற்றி விட்டு மறைபவர், மீண்டும் அதே பாருக்கு அடுத்த நாளும் செல்கிறார். படத்தின் காமெடியான போக்கால், இத்தகைய லாஜிக் பிழைகளை எல்லாம் பொருட்படுத்தத் தோன்றாது. எனினும் கவனம் செலுத்தியிருந்தால், இன்னும் மெருகேறியிருக்கும் என்றொரு சின்ன ஆசைதான்.
டைமிங்கில் சொல்லி அடித்தாற்போல் ஒரு தலைப்பு வாய்த்தது அதகளம். படத்தின் க்ளைமேக்ஸ் மிக அற்புதம். துப்பாக்கி இருந்தும், துப்பாக்கியில் தோட்டா இருந்தும், ரத்தமின்றி முடியும் க்ளைமேக்ஸ் ஆறுதல். இவ்வளவு மெச்சூர்டான நல் இதய திருடர்களைக் காணக் கிடைப்பது பேரதிர்ஷ்டம். அதை அழகாய்ச் சாத்தியப்படுத்தியுள்ளார் மேஜர் கெளதம்.