சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என மனிதனின் வாழ்வில் நிகழும் அத்தனையையும் தொடும் சுவாரசியமாகப் படமாக இருக்கும் “கவண்”.
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று டி.ராஜேந்தரும் நடித்துள்ளார். அவரது அடுக்குமொழி வசனமும், அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. டி.ஆர் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கப் போகின்றதாம்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். மேலும், பாண்டியராஜன், விக்ராந்த், ‘அயன்’ ஆகாஷ், போஸ் வெங்கட், ‘நண்டு’ ஜகன், பவர் ஸ்டார் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
‘கனா கண்டேன்’ முதல் இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் இரட்டை எழுத்தாளர்கள் சுபா. கவண் படத்திலும் பங்களித்திருக்கிறார்கள். இந்த எழுத்துக் கூட்டணியில் புதியதாக இணைகிறார் கவிஞர் கபிலன் வைரமுத்து. இதன் மூலம், தமிழ்த் திரைத்துறையில் கதாசிரியராகவும் வசனகர்த்தாகவும் அறிமுகமாகிறார். இயக்குநர் கே.வி.ஆனந்த், சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர் இணைந்து கவண் படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கின்றனர்.
தனி ஒருவன் புகழ் இலம் இசையமைப்பாளர்கள் ஹிப் ஹாப் தமிழா, இப்படத்திற்கு ஆரவாரமான இசயை அளித்துள்ளனர். பாரதியாரின், “பாயும் ஒளி நீ எனக்கு” என்ற பாடல், மிகப் பெரிய பொருட்செலவில் வண்ணமயமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் கலை இயக்குநர் கிரண், பிரம்மாண்டமாக அமைத்த இரண்டு வெவ்வேறு அரங்கங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் இறுதிக்காட்சி ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கப் பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் கேமரா காட்டிலும் மேட்டிலும் விளையாடியிருப்பதாகச் சொல்கிறார், சக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி.ஆனந்த்.
மிக விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.