Shadow

மீண்டும் வுல்வெரின்

Logan movie story

அகாதெமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹ்யூ ஜாக்மேன் மீண்டுமொரு முறையும், இறுதியாகவும் வுல்வெரின் வேடத்தில் தோன்றுகிறார். லோகன் என்ற இப்படத்தை, முந்தைய ‘தி வுல்வெரின்’ படத்தை இயக்கியிருந்த ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரையன் சிங்கரின் எக்ஸ்-மேன் (X-Men) படத்தில் தான் முதல் முறையாக ஹ்யூ ஜாக்மேன், வுல்வெரின் வேடத்தில் தோன்றிக் கலக்கியிருந்தார். இப்பொழுது ஒன்பதாவது முறையாக, அதே வேடத்தில் இப்படத்தில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளிவந்த அந்தத் தொடர் படங்களில் எல்லாம், வுல்வெரினின் அதிசய சக்திகள் மட்டுமே பறைசாற்றப்பட்டன. மனித நேயத்திலும் வுல்வெரின் சற்றும் குறைந்தவர் அல்ல என்பதை இப்படம் நிலைநாட்டுகிறது. வுல்வெரினின் இக்குணமே, இதர படங்களில் இருந்து இப்படத்தை மாறுபட்டதாக்கியுள்ளது.

இப்படத்தின் கதை நிகழும் ஆண்டு, 2029!

தனது வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து விலகி, மெக்ஸிகோவின் எல்லைப் பகுதியில் குறைந்த பணத்திற்கு வண்டி ஓட்டி வாழ்ந்து வருகிறார் லோகன். உடல் நலிவுற்ற சார்லஸ் சேவியரும், கேல்பனுமே அவரது உற்ற சகாக்களாக உள்ளனர். தனது பழைய வாழ்க்கையில் இருந்து விலகி வாழும் லோகனுக்கு, எதிர்பாராத விதமாக புதியதொரு கடமை குறிக்கிடுகிறது. தன்னைப் போலவே விசேஷ சக்திகள் கொண்ட லாரா என்கிற ஓர் இளம் பெண்ணிற்குப் பாதுகாப்புத் தந்து காக்க வேண்டிய பொறுப்பு வந்துசேர்கிறது. அமைதியாக சென்று வரும் லோகனின் வாழ்க்கையில், அதிரடி ஆக்ஷன் ஆரம்பமாகிறது!

படத்தின் ஓட்ட நேரம் 135 நிமிடங்கள். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர்.