கேரளத்து நாடோடிப் பாடல்களின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் 19 ஆம் நூற்றாண்டு காயங்குளம் கொச்சுண்ணி. கள்வரென்றாலும், சுரண்டல்காரர்களான பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் நல்லவர். காலங்கள் கடந்தும், செவி வழியாக மக்களின் மனங்களில் நுழைந்து, இன்றளவும் தன் நாயக பிம்பத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சகாப்தம் அவர்.
தன் தந்தையைப் போல் திருடனாகி விடக்கூடாதென ஒரு மளிகைக் கடையில் பணி புரிகிறார் கொச்சுண்ணி. மனதில் பேராசையும் வஞ்சகமும் நிறைந்த பிராமணர்கள், ஒரு பொய் குற்றச்சாட்டினைக் கொச்சுண்ணி மீது சுமத்தி, நையப்புடைத்து, மரத்தில் தலைகீழாகத் தொங்க விடுகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கும் கொள்ளைக்காரரான ‘இத்திக்கர பக்கி’, கொச்சுண்ணியை மீட்டு, பார் போற்றும் கொள்ளைக்காரர் காயங்குளம் கொச்சுண்ணியாக உருவாக்குகிறார். அதன் பின், அவர் சந்திக்கும் தொடர் துரோகங்களைக் கடந்து, காயங்குளம் கொச்சுண்ணி, ஒரு சகாப்தமாக மக்கள் மனதில் எப்படி இடம்பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில், பிராமணர்களின் ஆதிக்கம் எந்தளவு அக்காலத்தில் நிலவியது என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ளனர்.
ஆங்கிலேய உயரதிகாரியின் நன்மதிப்பைப் பெற்றவன் கொச்சுண்ணி. மரணத்தை ஏற்படுத்தும், தலைகீழாய்த் தொங்கவிடப்படும் அந்தப் பாதக தண்டனையை அவர் தடுக்க முற்படும் பொழுது, ஒரு பொய்ச்சாட்சியை வாக்குமூலம் சொல்ல வைத்து, “வியாவஹாரா (Vyavahàra)” எனும் ஹிந்துச் சட்டத்தின் படி தண்டிக்கும் பொழுது, துரைமார் குறுக்கே வரக்கூடாதெனப் பிரதான பிராமணர் வினயமாகக் கேட்டுக் கொள்கிறார். அதோடு நில்லாமல், கொச்சுண்ணி காதலித்த சூத்திரப் பெண்ணான ஜானகியின் தலைமுடியை வெட்டிக் கல்லால் அடித்து ஊரை விட்டுத் துரத்துகின்றனர். இப்படியாக, மளிகைக் கடையில் வேலை செய்து வந்த அப்பாவி முஸ்லீமான கொச்சுண்ணியைக் காயங்குளம் கொச்சுண்ணியாக உருமாற்றுகின்றனர். அவர்கள் விதைத்த வினையை அவர்களே பின்னாளில் அறுவடையும் செய்கிறார்கள். இதன் மூலம், “கர்மா ஒரு பூமராங் போல” என்ற ஹிந்து மதத் தத்துவத்தை ஆழ எடுத்துரைக்கிறார் இயக்குநரான ரோஷன் ஆண்ட்ரூஸ்.
காதலித்த பெண், களரி கற்றுக் கொடுத்த குரு, தெருவில் வருவோர் போவார் எனப் பாரபட்சம் இல்லாமல் துரோகம் இழைக்கின்றனர் நாயகனுக்கு. அவரும் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ரகமாக இருப்பதோடு, அதிலிருந்து மீளும் திடச்சித்தனாயும் இருக்கிறார். எது நடந்தாலும், ஏழைகளுக்கு உதவுவதை மட்டும் கொச்சுண்ணி நிறுத்துவதில்லை. படம் முடியும் பொழுது, கோயிலாகப் பாவிக்கப்படும் கொச்சுண்ணியின் சமாதியை ஒருமுறை பார்த்துவிட்டு வரும் ஓர் ஆவல் எழுகிறது.
கடவுளிண்ட தேசமான கேரள நிலப்பரப்பே, படத்திற்கு ஒரு பிரம்மாண்டத்தை அளிக்கிறது. ஜானகி பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். அவருக்கு ஏற்படும் காதலை அழகாகக் காட்டிய இயக்குநர், நிவின் பாலிக்கு அவர் மீது எழும் காதலை அந்தளவு ரசிக்கும்படிச் சித்தரிக்காதது குறை. குறும்பு கொப்பளிக்கும், மிக நல்ல இளைஞனான கொச்சுண்ணியைச் சுற்றியே படத்தின் முதல் பாதி கதை நகர்கிறது. இடைவேளைக்கு முன், இத்திக்கர பக்கியாகப் புயலென அறிமுகமாகிறார் மோகன்லால். ‘ட்ரன்க்கன் மாஸ்டர்’ படத்தில் ஜாக்கி சானுக்கு அவரது மாஸ்டர் அளிக்கும் பயிற்சிகளை, நிவின் பாலிக்கு மோகன்லால் அளிக்கிறார். மோகன்லால் விடைப்பெறும் வரை, ஒட்டுமொத்தமாகத் திரையைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார்.
படத்தின் க்ளைமேக்ஸ் அதி அற்புதம். இதை விடச் சிறப்பான மரியாதையைக் காயங்குளம் கொச்சுண்ணிக்கு அளித்த விடமுடியாது. இப்படம் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொள்ளாமல், கர்ணபரம்பரை கதையின் நாயகனைப் போற்றும் விதமாகப் படத்தை எடுத்துள்ளனர். அந்தப் படைப்புச் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக டிஸ்க்ளெயிமரும் போடுகின்றனர்.
கொச்சுண்ணியாகப் படம் முழுவதும் வரும் நிவின் பாலியிடமிருந்து, மோகன்லால் திரையைக் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறார் என்றால், தங்கல் எனும் களரி ஆசானாக வரும் பாபு ஆண்டனி, க்ளைமேக்ஸில் மீண்டும் நிவின் பாலியிடம் இருந்து திரையை அபகரிக்கிறார். மனதை மெல்ல மெல்ல ஆக்கிரமித்த கொச்சுண்ணியைத் தள்ளி விட்டுவிட்டு, பாபு ஆண்டனி சிம்மாசனம் போட்டு மனதில் அமர்ந்து கொள்கிறார். கொச்சுண்ணியின் கதையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு அந்த மாயம் நிகழ வாய்ப்புக் கம்மி. அவர்களால் மனதைக் கொச்சுண்ணியிடமிருந்து பிறரிடம் திருப்பக் கடினம். ஆனால், யாரோ ஒரு கேரளத்து வரலாற்று நாயகனின் படமென்றளவில் மட்டுமே பார்க்கும் பிற மொழி ரசிகனுக்கு, கொச்சுண்ணியை விட பாபு ஆண்டனி பாத்திரத்தை மிகவும் பிடித்துவிடும். மார்வெல் பாணியில், இத்திக்காரப் பக்கி பற்றியும், தங்கல் பற்றியும் கூடத் தனித்தனி படங்களைக் கொண்டு வருவதைப் பற்றி இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸோ, தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸோ யோசிக்கலாம்.