Shadow

அதே கண்கள் விமர்சனம்

Adhe Kangal review

1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படம் “அதே கண்கள்”. அந்தப் படத்திற்கு மிகக் கச்சிதமாகத் தலைப்பு பொருந்தியது போல், இப்படத்திற்குப் பொருந்தவில்லை.

ரெஸ்டாரன்ட் ஓனரான சமையல் கலைஞர் வருணுக்குத் தீபா மீது காதல் ஏற்படுகிறது. தீபாவிடம் காதலைச் சொன்ன அன்றே ஏற்படும் விபத்தில், கண் பார்வையை மீண்டும் பெறுகிறான் வருண். ஆனால், அவனது காதலி தீபா பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

நெடுஞ்சாலை, ஜீரோ ஆகிய படங்களிலேயே தன் நடிப்பை நிரூபித்து விட்டவர் ஷிவதா. எனினும் இந்தப் படத்தின் மூலம் தான் பரவலாகக் கவனிக்கப்படுவார் என்பது திண்ணம். தீபா எனும் பாத்திரத்தில் பார்வையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார். அறிமுக காட்சியிலேயே அசத்திவிடுகிறார். அவரது குணாம்சமும் கடைசி ஃப்ரேம் வரை ஈர்க்கிறது. நாயகனை விடவும் வலுவான கதாபாத்திரமென்பதில் படத்தின் நாயகி எனும் அந்தஸ்த்தை ஜனனி ஐயரிடம் இருந்து பறித்துக் கொள்கிறார் ஷிவதா. சொல்லப் போனால், நாயகனை விடவும் ஹீரோயிசம்* அதிகமுள்ள பாத்திரம் வாய்க்கப் பெற்றுள்ளார் (இப்பெல்லாம் அறமற்ற செய்கைகளே ஹீரோயிசமாகக் கட்டமைக்கப்படுகின்றன). 

கலையரசன் நாயகன் எனினும் அவரது உருண்டையான முகம் அவரை குணசித்திர நடிகராகவே மனதில் பதிய வைக்கிறது. கதையின் நாயகனாக வரும் இவருக்கு ஒரு செல்ஃபோன் ஆதாரம் வலுவாய்ச் சிக்குகிறது. எனினும் கலையரசனைக் கடைசியிலாவது கதாநாயகனாக்கி விடவேண்டுமென வளவள க்ளைமேக்ஸை அமைத்துள்ளார் போலும் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். கான்ஸ்டபிள் பஞ்சுவாக பாலசரவணன் நடித்துள்ளார். நாயகனின் நண்பனாக மட்டும் வராமல், கதைக்கு உதவும் பாத்திரத்தில் வருகிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், மொபைல் கடை வைத்திருக்கும் அல்ஃபோன்ஸாக வரும் ‘புட் சட்னி’ புகழ் அப்துல் ரஹுமான் தன் முத்திரையை ஆழப் பதித்துள்ளார்.

ஜிப்ரானின் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு இயைந்து ரசிக்க வைக்கின்றன. இரவுக் காட்சிகளை ஒளி பெறச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம். கலையரசனும் ஷிவதாவும் இரவில் நடந்து வரும் சாதாரணக் காட்சியும் கூட ரசிக்கும்படி இருப்பது அதற்குச் சான்று. தொடக்கம் முதல் கடைசி வரை பார்வையாளர்களைச் சலிப்புறச் செய்யாமல் இழுத்து அமரச் செய்துள்ளார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். 2017 இன் முடிவிலும் கூட, நினைவு கூரத் தக்க படமாக இது அமையுமென்பதே இப்படத்தின் வெற்றி.