Shadow

100 விமர்சனம்

100-movie-review

தனது புஜ பல பராக்கிரமத்தால், தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ அடித்து உதைத்து அவர்களைச் சிறையில் அடைத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியாக மிளிர வேண்டுமென்பது அதர்வாவின் லட்சியம். ஆனால், அவசர உதவி கோரி எண் 100-இற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் கண்காணிப்பு அறையில் அவரைப் பணிக்கு அமர்த்திவிடுகின்றனர்.

நேடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் முதற்பாதி தேவையில்லாத காட்சிகளால் அலைக்கழிக்கிறது. அதர்வாவின் தந்தையாக பருத்தி வீரன் சரவணன், அம்மாவாக நிரோஷா, காதலியாக ஹன்சிகா, நண்பராக ‘எருமை சாணி’ விஜய் ஆகியோர் கதைக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. தயாரிப்பாளரான ஆரா சினிமாஸ் மகேஷ், அன்வர் எனும் பாத்திரத்தில் அதர்வாவின் நண்பராக நடித்துள்ளனர். ஓர் அழகான பாத்திரத்திற்கு, கொஞ்சம் லெத்தார்ஜிக்கான உடற்மொழியாலும் நடிப்பாலும், போதுமான நியாயத்தைச் செய்யத் தவறிவிடுகிறார். மறைந்த நடிகர் சீனு மோகனின் கதாபாத்திர வார்ப்பும், அவரது அனுபவம் மிக்க நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

யோகி பாபுவின் வருகைக்குப் பின்பே படம் கலகலப்பாகிறது. சமீபத்திய படங்களில், அவரைச் சரியாக உபயோகிக்காமல், மிகக் குறைவான காட்சிகள் அளித்து ஏனோ தானோ எனப் பயன்படுத்தி வருகின்றனர். இப்படத்தில் கிடைத்த வாய்ப்பை அற்புதமாய்ப் பயன்படுத்தியுள்ளார். விஷால் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது வந்துவிடும் ராதாரவியைக் கலாய்ப்பது என டைமிங்கில் வயிற்றைப் பதம் பார்க்கிறார். இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காத ஒரு நாயகனைத்தான் நடிக்கவேண்டுமென, இயக்குநர் அதர்வாவை நடிக்க வைத்துள்ளார். அதர்வா அவரது தேர்வு மிகச் சரியானது என்பதை தன் நடிப்பால் நிரூபித்துள்ளார். ஹன்சிகாவின் சில க்ளோஸ்-அப் ஷாட்களின் மூலம், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த், ஹன்சிகாவின் ரசிகர்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்துள்ளார். காலம் தான் எவ்வளவு கொடுமையானது?

அதர்வாவிற்கு வரும் 100வது அழைப்பு தான் படத்தின் மையக்கரு. இடைவேளையின் பொழுதுதான் கதைக்குள் செல்கிறது படம். சில விஷயங்கள் பார்வையாளர்களுக்குப் புரிந்து விடாதோ என மெனக்கெட்டு வசனங்கள் மூலம் விளக்குகிறார் இயக்குநர் சாம் ஆண்டன். படத்தின் தொடக்கமும் முடிவும் ஓர் ஒழுங்கில் இல்லாவிட்டாலும், 100வது அழைப்பை அதர்வா பொருட்படுத்தி அதை நோக்கிப் பயணிப்பது நன்றாக உள்ளது. படம் முடிந்த பிறகு, அதாவது குற்றவாளி யாரெனத் தெரிந்த பின்னும், திணிக்கப்பட்ட ஒரு க்ளைமேக்ஸ் சண்டையின் மூலமாகப் படத்தினை முடிப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.