Shadow

கிடா விமர்சனம்

 

மதுரை மாநகரின் ஒட்டு மொத்த ஊரும் அடுத்த நாளின் தீபாவளி கொண்டாட்டங்களுக்காக  தயாராகிக் கொண்டிருக்க,  ஊருக்கு வெளிப்புறம் இருக்கும்  ஒரு சிறு கிராமத்தில், வயதான பெரியவரும் அவரின் பேரனும் தவிப்போடு அமர்ந்திருக்கின்றனர்.  பெரியவருக்கு தன் பேரன் ஆசையாக கேட்ட ஆடையை வாங்கிக் கொடுப்பதற்காக அவன் ஆசையோடு வளர்த்த ”கிடா”-வை விற்கத் துணிந்தும், அதை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன ஆள் இன்னும் வரவில்லையே என்கின்ற பதட்டம். பேரனுக்கோ தான் ஆசைப்பட்டு கேட்ட ஆடைக்காக தான் ஆசை ஆசையாக வளர்த்த கிடாவை நம்மிடம் இருந்து பிரித்துவிடுவார்களோ என்கின்ற பதட்டம்.  இவர்கள் இருவரின் பதட்டம் இதுவென்றால்,  கறிக் கடையில் ஆடு வெட்டுவதையே தொழிலாக கொண்ட தன்னை, குடிக்கிறேன் என்கின்ற காரணத்தால், தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும் போது கடையை விட்டு அனுப்பிய தன்முதலாளி மகனுக்கு எதிராக தீபாவளி அன்றே போட்டிக்கு கடை போடுகிறேன் என்று சவால் விட்டு வந்தவனுக்கு, கையில் பணம் இல்லாத காரணத்தால் கடை போடுவதற்கு கிடைத்த ”கிடா” அந்த பெரியவரின் பேரன் ஆசையாக வளர்த்த அந்த ஒற்றை ”கிடா”.  இப்படி மூன்றுவிதமான கதாபாத்திரத்திற்கும் மூன்றுவிதமான தேவை இருக்கின்ற முக்கோணச் சிக்கல் கொண்ட கதை.  கடைசியில் ஒற்றை கிடாவை வைத்தாவது கடை போடுவோம் என்று பணத்தை திரட்டிக் கொண்டு கிடாவை கொண்டு செல்ல வந்தவனுக்கு கிடைத்ததோ ஏமாற்றம். வேறொரு கும்பல் அந்த கிடாவை திருடிச் சென்று இருக்கிறது.  கடைசியில் என்ன ஆனது என்பதை நேர்த்தியுடன் சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இந்த “கிடா”.

அது என்னவோ தெரியவில்லை என்ன மாயமோ புரியவில்லை மதுரை பக்கத்தில் இருக்கும் மேலூரைத் தாண்டி மதுரைக்குள் நுழையும் போது தெரியும் யானை மலையை பின்புலமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் எல்லாமே யதார்த்த படைப்பாக நெஞ்சம் நிறைக்கின்றன. சமீபத்தில் Sony Liv –ல் வெளியான “கூழாங்கல்’ திரைப்படமும் கூட யானை மலை பின்னணியில் தான் எடுக்கப்பட்டு இருந்தது.  ஆனால் கூழாங்கல் திரைப்படத்தில் இருந்த வெம்மை இப்படத்தில் இல்லை என்றாலும்,  அந்த நிலத்து மக்களின் இயல்பான வாழ்வியலும், யதார்த்தமான வசனங்களும், உடல்மொழியும் அப்படியே அச்சு எடுத்தார் போல் அசலாக ஒவ்வொரு ப்ரேமிலும் அப்பிக் கொண்டு வந்திருக்கிறது.

வயதான பெரியவர் செல்லையாவாக “பூ” ராமு படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.  அதிலும் குறிப்பாக கடைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்ன பேரனை, கையில் காசு கிடைக்காத காரணத்தால் எதிர்கொள்ளத் தயங்கி, இருட்டியப் பின்னர் வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவு எடுக்கும் போதும் அவர் காட்டும் உடல்மொழியில் அவ்வளவு இயலாமை வெளிப்படுகிறது. அதே இயலாமை தன் பேரன் ஆசைப்பட்ட புதுத்துணியை வாங்க, கிடாவை விற்கலாம் என்று முடிவு செய்யும் போது, மறுத்து முரண்டு பிடிக்கும் பேரனை “வெண்ணெ மவனே” என்று திட்டி அதட்டும் போது வேறொரு கோணத்தில் வெளிப்படுகிறது.  கடனாக பணம் கேட்டுப் போன இடத்தில் செலவுக்கு காசு கொடுத்து அனுப்ப முனையும் போது, அதை சுயமரியாதையுடன் மறுத்து, தொந்தரவு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது கண்கலங்க வைத்து விடுகிறார்.

தாத்தாவாக நடித்த பூ ராமு இப்படி என்றால், அவரின் மனைவியாகவும் பேரனின் ஆச்சியாகவும் மீனம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியம்மா பூ ராமுவையே நடிப்பில் ஒரு படி மிஞ்சிவிடுகிறாள்.  வீடு வந்து சேராமல் இருட்டுவதற்காக காத்துக் கொண்டிருக்கும் தன் கணவனை, பேரன் அழுது கொண்டு இருப்பதைப் பார்த்து பொறுக்காமல் போன் செய்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் போதும், பேரனை கண்டிக்க பெரியவர் கை ஓங்கும் போது, பத்ரகாளியாய் மாறி தன் பேரனை அசுரனிடமிருந்து காப்பது போல் காக்கும் இடத்திலும்,  பேரனும், புருஷனும் திருடு போன கிடாயை தேடிப் போயிருக்கும் போது, பேரனின் ஆசையை தீர்க்க தன்னால் என்ன செய்ய முடியும் என்று முடிவு எடுத்து, அதற்கான முயற்சியில் இறங்கும் போதும்,  புதுத்துணிக்கான பணத்தில் 500 ரூபாய் குறையும் போது, மருவி நிற்கும் காட்சியிலும் நம் கண்களில் கண்ணீரை வரவைக்கிறார்.

பேரன் கதிராக நடித்திருக்கும் மாஸ்டர் தீபன் சின்ன சின்ன பார்வைகள் மூலமே தன்னுடைய ஏக்கங்களை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறான். தாத்தா தன்னை புதுத்துணி வாங்க கடைக்கு கூட்டிச் செல்வார், என்று காலையிலேயே  கிளம்பி, விளையாட அழைத்த தன் நண்பர்களிடம் புதுத்துணி வாங்க கடைக்குப் போகிறோம் என்று கூறிவிட்டு, மாலை வரை தாத்தா வராததால் நண்பர்களின் கேலிக்கு ஆளாகி,  இனி தாத்தா வர மாட்டார் என்று தெரிந்ததும்,  தன் இறந்து போன அப்பா அம்மா போட்டோவை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அழும் அந்தக் காட்சியில் தீபன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  தான் ஆசைப்பட்ட ஆடைக்காக தன் உயிரைப் போல வளர்த்த  கிடாவை பிரிய விரும்பாமல் தனக்கு புதுத்துணி வேண்டாம் என்று கூறும் போதும், தொலைந்த கிடாவைத் தேடி பயணிக்கும் போது கிடா கிடைத்தால்  கொன்றுவிடுவார்களோ என்கின்ற பயத்திலும் கிடா கிடைக்காவிட்டால் என்றுமே அது கிடைக்காதே என்கின்ற பதட்டத்துடனும் பயணிக்கும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.

குடிகாரனாகவும் கசாப்பு கடையில்  கறி வெட்டும்  வெள்ளைச்சாமியாகவும் வரும் காளி வெங்கட்,  தான் புதிதாக தீபாவளி அன்று துவங்க இருக்கும் கடைக்கு கஸ்டமர் பிடிக்கும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது.  கஸ்டமர் பிடிக்க செல்லும் காளி வெங்கட்டிடம் ஒவ்வொரு கதாபாத்திரமும் உதிர்க்கும் வசனங்களில் மதுரைக்கே உரிய நக்கலும் நையாண்டியும் தெறிக்கிறது. அதுவும் தீபாவளி அன்று காலை 4 மணிக்கே காளி வெங்கட் வீட்டின் முன் கூடும் கூட்டம்,  நீ ஆட்டை இப்பொழுது தான் தேடிக்கிட்டு இருக்கியாமே, நாங்க எப்ப கறி வைச்சி சாப்புடுறது என்று கேக்கும் டீக்கடைக்காரன் பாண்டி கதாபாத்திரத்தில் வரும் கருப்பு கலகலக்க வைக்கிறார்.  காளி வெங்கட் மனைவி லோகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இவ்வளவு கதைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு நடுவில் ஒரு காதல் ஜோடியையும் உறுத்தாமல் கதைக்குள் கொண்டு வந்திருப்பதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகின்றது. அந்த காதல் எபிசோடுகளும் மையக்கதைக்கு தடை ஏற்படுத்தாமல் கதை முன்னோக்கி நகர்வதில் சுவாரஸ்யத்தையே கொடுக்கின்றன.  காதல் ஜோடிகளாக வரும் பாண்டி மற்றும் ஜோதி  இருவருமே கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து கொடுத்திருக்கின்றனர். திருடர்களாக வரும் ஆனந்த், ஜெய், தேவா மற்றும் சங்கிலி நால்வரும் கலகலப்புக்கு வலு  சேர்க்கின்றனர்.

கதையிலும் கதை மாந்தர்களிடமும் அன்பு கரை புரண்டு ஓடுகிறது. வாழ்க்கையில் துன்பம் சூழும் சில இக்கட்டான சூழல்களிலும் நம்பிக்கை கீற்று  போல் ஒளிவீசும் அந்த வசீகரத்தை தன் திரைக்கதையின் மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ரா.வெங்கட்.  பணம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, துணியை எடுத்துக் கொண்டு போய் தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்று சொல்லும் அந்த கடைக்காரர் துவங்கி, தன் பேரனுக்காக வாங்கிய பட்டாசுகளோடு, தன் மகன் தனக்காகக் கொடுத்த 500 ரூபாயையும் சேர்த்து மீனம்மாள்  பாட்டி கையில் கொடுத்து அனுப்பும் மற்றொரு பாட்டி கதாபாத்திரமும், தன் கடையில் இருந்து வீராப்பாக கிளம்பிச் சென்றவனாக இருந்தாலும் அவனுக்காக கறி கொடுத்து அனுப்பும் முஸ்லீம் பெரியவரின் கதாபாத்திரமும், ஆடு காணாமல் போய் விட்டது தெரிந்தும் தன் கையில் இருக்கும் பணத்தில் இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து தீபனின் சந்தோசத்தையாவது நாம் எல்லாரும் சேர்ந்து பூர்த்தி செய்வோம் என்று கூறும் காளிவெங்கட் கதாபாத்திரம் என அன்பின் மனிதர்கள் திரைப்படத்தில் ஏராளம். இந்த கதாபாத்திரங்களின் மூலம் வாழ்க்கை மற்றும் வாழ்வதில் இருக்கும் பேரானந்தம் பீறிட்டுக் கிளம்புகிறது.

எழுதி இயக்கி இருக்கும் ரா.வெங்கட்டிற்கு இது முதல்படம். முதல் படத்திலேயே சிறப்பான கதைக்களத்தை எடுத்ததோடு, அதை செய் நேர்த்தியோடும் படைத்துக் காட்டியிருக்கிறார்.  கேராமேன் எம்.ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவில் மதுரையின் வெம்மையும் ஈரமும் ஒருங்கே இடம் பிடிக்கின்றன.  தீசனின் இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.  ஆனந்த் ஜெரால்டின் கத்தரி கூர்மையாக கதை சொல்ல உதவி இருக்கிறது.  ஸ்ரவந்தி ரவி கிஷோர் தயாரிப்பில் ஒரு தரமான படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களின் தயாரிப்பு குழுவினருக்கு நம் பாராட்டுக்கள்.

‘கிடா’ படத்தை பார்க்கும் நாம் ஆட்டுக்கறி வாங்க சற்று தயங்குவோம் என்றாலும் கூட, அதை மீறி நமக்கு தெரிந்த அல்லது அறிமுகமே இல்லாத ஒரு சிறுவனுக்கோ ஒரு சிறுமிக்கோ அவர்கள் விரும்பும் ஒரு இனிப்பையோ, பட்டாசையோ, ஒரு புதுத்துணியையோ கொடுக்கலாமோ என்கின்ற உள மாற்றத்தையும், சமூகத்திற்கான ஒரு உளவியல் மாற்றத்தையும், வாழ்க்கை மீதான நம்பிக்கையையும், அன்பெனும் ஊற்றின் பெருங்கண்-ணையும் திறக்கும் என்பதால் இந்த ”கிடா”- வை தீபாவளிக்கும் தீபாவளி கடந்தும் கண்டிப்பாக தரிசிக்கலாம்.

– இன்பராஜா ராஜலிங்கம்