Shadow

கூழாங்கல் விமர்சனம்

வறண்ட நிலப்பகுதியில் பயணிப்பவர்கள், தண்ணீர் தாகத்தைத் தணிக்க கூழாங்கல்லை வாயில் வைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு நிலப்பகுதியை வேலுவும், அவனது தந்தை கணபதியும் நடந்தே கடக்கின்றனர்.

பிறந்த வீட்டுக்குப் போன மனைவியை அழைத்து வர, கடன் வாங்கிப் பேருந்தில் செல்லுகிறான் குடிகாரனான கணபதி. மீண்டும் திரும்புகையில், நல்ல உக்கிரமான வெயிலில் தந்தையை நடக்க வைக்கிறான் வேலு. நடப்பது வேலுவிற்கும், கடன் வாங்கிப் பேருந்தில் வரக் குறைவான வாய்ப்பைப் பெற்ற அவனது தாயிற்கும் வழக்கமானது ஒன்றாகும். ஆனால் மாப்பிள்ளை முறுக்குடன் திரியும் கணபதிக்குப் புதுசு. தந்தையை, நடக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு துண்டு கண்ணாடியைக் கொண்டு தந்தையின் முதுகையும் சூரியக்கதிர்களால் சூடேற்றியும் விளையாடுகிறான். வத்திப்பெட்டியை ஒளித்து வைத்து பீடி பிடிக்க நினைக்கும் தந்தையைக் கோபப்படுத்துகிறான். முழுப் படமுமே அவ்விருவரின் நடைப்பயணம் மட்டுமே!

படித்து ஆசிரியர் வேலையிலுள்ள பெண், டிவிஎஸ் 50 ஓட்டுபவராய், தனக்கான முடிவுகளைத் தானே எடுப்பவராய் உள்ளார். ‘பையனை ஊர் வரைக்கும் அழைச்சுட்டுப் போலாமா?’ என கணவனிடம் அவர் கேட்பதில்லை. வேலுவின் அம்மாவோ, அம்மா வீட்டிற்குப் போனாலும், பசியைப் போக்கிக் கொள்ளும் அளவு கூட உண்ண சுதந்திரமற்றவராய் உள்ளார். அடித்துத் துன்புறுத்துகின்ற கணவன் வாய்த்தாலும், புகுந்த வீட்டில் கிடைக்கும் குறைந்தபட்ச சுதந்திரத்தின் பொருட்டு, அதைப் பொறுத்துப் போகும் நபராய் உள்ளார். பிறந்த வீடு என்பது எல்லாப் பெண்மணிகளுக்கும் சுகமான அடைக்கலமாகவோ, வரவேற்பிடமாகவோ இருப்பதில்லை. நேரடி வன்முறையை விட, நுண்ணிய சாடைப் பேச்சுகள் அளிக்கும் வலி தீவிரமானது. ஆண் என்பதாலேயே தன்னை உயர்ந்தவனாகக் கருதிக் கொள்ளும் ஒரு கோமாளி தம்பியை நம்பினால் ஒரு பைசாக்குப் பிரயோசனப்படாது என்ற தெளிவை உடைய வேலுவின் அம்மாவைக் கடைசி வரை திரையில் காட்டாமலே அழகாகக் கண்ணாமூச்சி ஆடியுள்ளார் அறிமுக இயக்குநர் PS வினோத் ராஜ். பொண்டாட்டியை வண்டி ஓட்டச் சொல்லி விட்டு பின்னமர்ந்து வந்தால் ஊர் பரிகசிக்கும், அதனால் ஊரருகே வந்ததும் வண்டியை தான் ஓட்டுகிறேன் எனச் சொல்லும் ஆணின் நூற்றாண்டு கால பழமைவாத பதைபதைப்பையும் ஆவணப்படுத்தத் தவறவில்லை இயக்குநர். 

எலிக்கறியைச் சுட்டுச் சாப்பிடுபவர்கள், கலங்கிய தண்ணீருக்கே தட்டுப்பாடாய் இருக்கும் இடத்தில் குடத்துடன் காத்திருக்கும் பெண்கள், பேருந்தில் இருந்து இறங்கினாலும் ஒதுக்குப்புறம் என்பதே இல்லாத கரடுமுரடான நிலம்  என படம் சிலவற்றை பதிவு செய்கிறது. குடிநீருக்கான இந்தப் பாடுகளை மக்கள் இன்னமும் அனுபவிக்கிறார்கள் என்பதை மிகைப்படுத்தலாக மனம் ஏற்க மறுக்கிறது. ஆனால், அக்கொடுமையும் நம்மக்கள் கடந்து வந்த பாதை தான் என்றளவில் சமாதானம் அடையலாம்.

சிறுவன் சேகரிக்கும் கூழாங்கற்கள், பெற்றோருக்குள் நிகழும் சண்டையின் எண்ணிக்கையாகப் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அப்படி எடுத்துக் கொள்வதற்கான நிகழ்தகவிற்கு வாய்ப்பிருக்கு என்ற போதிலும், வேலுவிற்குத் தன் தந்தை மீதான பாசம் கூடுவதற்கு அப்பயணமே உதவுகிறது எனும் பட்சத்தில், அந்தக் கூழாங்கற்கள் எண்ணிக்கை அப்பாதையில் நினைவு தெரிந்து அவன் மேற்கொண்ட பயணங்களைக் குறிப்பதே மட்டுமேயாகும். அது அப்பாம்மாவின் சண்டையாகவோ, திருவிழாவிற்குப் பாட்டி வீட்டுக்குச் சென்றதாகவோ, பள்ளி விடுமுறையாகவோ இருக்கலாம். டிவிஎஸ் 50 இல் ஊரை அடையும் வேலுவிற்குத் தந்தையுடனான மனவிலகல் நீர்த்து, அவனும், அவனது அம்மாவும் தங்கையும் உள்ள உலகில் தன் தந்தையின் பெயரையும் இணைத்துக் கொள்கிறான். சின்ன கோப வெளிப்பாட்டிற்குப் பிறகு, தன் தந்தையைத் தங்களுக்குள் ஒருவராக ஏற்றுக்கொள்கிறான் அந்நடைப்பயணத்தின் மீது அலாதி ஈர்ப்புடைய சிறுவன் வேலு (“என்ன இருந்தாலும் அந்த ஆளு என் அப்பன்” எனச் சொல்லும் ‘ஆரண்ய காண்டம்’ படத்து கொடுக்காப்புளி நினைவில் வந்து செல்கிறான்). அடி உதைகள் கொண்ட பேசாப்பயணம் என்றாலும், பார்வை படும் தூரத்தில், உடன் நடந்து வரும் தந்தையை மன்னிக்கும் குழந்தைமையை இழந்த விடாத சிறுவனாகவும் உள்ளான் வேலு.

படத்தின் பேசுபொருள், பாலை நிலத்தின் உருப்பொருளான பிரிதலும், பிரிதல் தொடர்பான நிகழ்வுகளேயாகும். தலைவனின் பிரிவைத் தாங்கொண்ணாமல் தலைவி வாடுவதாகப் பாலைத்திணையின் அகநானூற்றுப் பாடல்கள் அமைந்திருக்கும். உடன்போக்கு என்ற உயரிய கலாச்சாரமும் இத்திணைக்கே உரித்தானது. கோபக்காரராகப் படம் நெடுகே சித்தரிக்கப்பட்டாலும், ‘உங்கொம்மாவைக் கொல்லப் போறேன்’ என வழி நெடுகே சகட்டுமேனிக்கு வைதாலும், மனைவியின் பிரிவைப் பொறுக்கமாட்டாமல் முறுக்கிக் கொண்டு கிளம்பியவர்தான் கணபதி. கணபதியாக நடந்திருக்கும், முறைத்திருக்கும் கருத்தடையான், அக்கதாபாத்திற்கு அற்புதமாகப் பொருந்துகிறார். கலைப்படத்திற்கான இலக்கணமென நம்பப்படும் உயிரற்ற பாவனையும், மெதுவாக அசையும் மந்தத்தனமும் இல்லாமல், மாறாக வீறு கொண்ட அவரது நடையும், கனன்று கொதிக்கும் பார்வையும், வியர்த்த முகமும் முதுகும் பார்வையாளர்களைப் படத்தோடு பிணைக்க உதவியுள்ளன. சிறுவன் வேலுவாக நடித்திருக்கும் செல்லப்பாண்டி, கலைப்படத்திற்கான இலக்கணங்களோடு ஓர் உறைந்த பார்வையோடே படம் முழுவதும் வந்தாலும், தந்தை – மகன் உறவையும் முரணையும் உணர்த்த அது உதவியுள்ளது. தொடக்கத்தில், அந்தச் சிறுவனின் கையறுநிலை பதற்றத்தை ஏற்படுத்தினாலும், அது அவனது அன்றாடத்தில் ஒன்று என்ற அவனோட தெளிவை நாமும் அவனது பயணத்தினூடே பெறுகிறோம். வீட்டுக்கு வந்தபின் வேலு கூழாங்கல்லை மற்ற கற்களோடு வைத்து விட்டு, நாய்க்குட்டியோடும் தங்கை லட்சுமியோடும் விளையாடுவதுடனும், மனைவியை கொல்லப் போவதாக ஆவேசத்துடன் வந்த கணபதி, தண்ணீரைக் குடித்து பின் பசி தாங்காமல் சோற்றை அள்ளிப் போட்டு சாப்பிடுவதுடனும் அவர்களின் நாள் இனிதே முடிவடைகிறது. ஆனால், துளித்துளியாயச் சுரக்கும் குடிநீருக்கான நீண்ட நெடிய காத்திருப்பு என சாந்தியின் நாளும் பொறுப்புகளும் நிறைவுறுவதே இல்லை.

(நன்றி: பாளையத்தான்)