Shadow

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

தலைப்பு வைப்பது ஒரு கலை. சிலர், தலைப்பில் கதைக் கருவைத் தொட்டுச் செல்வார்கள்; சிலர், முழுக்கதையையும் உணர்த்துவார்கள்; சிலர், சம்பந்தமே இல்லாமல் என்னத்தையாவது தலைப்பென வைப்பார்கள். படத்தின் விமர்சனத்தையே தலைப்பாக்கும் தைரியம், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’, ‘அகண்டா‘ முதலிய படங்களை இயக்கிய ஆக்ஷன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவிற்கே உண்டு. படம், பார்வையாளர்களைக் கிஞ்சித்தும் கருணையின்றிச் சாவடி அடிக்கிறது. அதை நேர்மையாகத் தலைப்பிலேயே சுட்டிக் காட்டி, நேர்மை என்றால் ‘ஹமாம்’ சவர்க்காரம் மட்டுமில்லை, தானும் தானென உலகிற்கு எடுத்தியம்பியுள்ளார் ஸ்ரீனு.

இரண்டு வில்லன்களின் அறிமுகம் காட்டப்பட்டவுடன், ஆந்திரக் காரத்துடன் முழுச் சாப்பாடு விருந்து தயாரென நினைக்கையில், அது தொடங்குகிறது. அது என்றால் படத்தின் ‘அட்டாக்’ வெர்ஷன். ரெகுலராக ஜிம்முக்குப் போய் நன்றாக உடலை வளர்த்து வைத்திருக்கும் ஒரு காளை மாடோடு அறிமுகமாகிறார் நாயகன் ராம் பொத்தினேனி. பாலகிருஷ்ணாக்கு எழுதப்பட்ட கதை (!?) போலலும். ஸ்ரீனு, பாலகிருஷ்ணாவுக்கே ஒரே கதையைத்தான் சொல்லி மூன்று படங்களாக எடுத்துள்ளார். அதே கதையைத்தான் ராம் பொத்தினேனிக்கும் சொல்லி நடிக்க வைத்துள்ளார். ‘ப்பாஆ, வாட்டே எ மேன்!’ என வியப்பில் ஆழ்த்தும் சரித்தரித்தின் மயிர்கூச்செரிய வைக்கும் ஆச்சரியமாகத் திகழ்கிறார் போயபட்டி ஸ்ரீனு. ஏனெனில் அவருக்கு அவ்வளவு ஓவர் கான்ஃபிடெண்ட்லு.

நாயகனின் அறிமுகம் முடியும் பொழுதே, சூடு, சொரணை, பட்டறிவு, பகுத்தறிவு இருந்தால், படத்தை விட்டு வெளியேறித் தற்காத்துக் கொள்ளலாம். ஆனால், திண்ணிய மார்பும், உள்ளுணர்வை மதியா மாண்பும், நேர்மையை மதிக்கும் நற்குணமும், உச்சந்தலையில் சுர்ரென்று காரத்தை ஏற்றும் மசாலாவைத் தாங்கும் நெஞ்சுரமும் வாய்க்கப் பெற்றவர்களை யாரால்தான் காப்பாற்ற முடியும்? உயரத்திற்குச் சென்றால், அங்கிருந்து குதிக்கத் தோன்றும் HPP (High Place Phenomenon) என்பது சர்வவைலுக்காக மூளை தரும் தவறான சிக்னலாகும் (misinterpretation of survival signal). அதே மூளை, இதே போன்ற சூழலில், ‘த்தாஆ, பார்த்துக்கலாம், பாலய்யாகாரு படத்திற்குத் தப்பிப் பிழைச்சவன் இல்லடா நேனு, அதையே ஜாலியா ரசிச்சவன்டா இந்த கானசர்*லு’ எனத் தவறான சிக்னல் தந்து உள்ளே தள்ளிவிடும். Survival instinct misfire ஆகிப் படத்தைத் தொடர்ந்தால், நாம் போயபட்டிக்காரரிடம் முழுதாக சரண்டராகி, மூளையைப் பத்திரமாக ஃப்ரிட்ஜில் கழட்டி வைத்து விடவேண்டும். உயிர் பிழைக்க நம் முன் இருக்கும் ஒரே வழி அது மட்டுமே.

இதுக்கு மேல் சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால், படத்தின் புகழ் பாடுவதைக் கனத்த இதயத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நல்ல விமர்சனம் என்பது படம் பார்க்கும் ஆவலைத் தூண்டவேண்டும். அதற்காகப் படத்தில் இருக்கும் ஒரு சின்ன சுவாரசியத்தை, tip of the iceberg போல் ஹைலைட் செய்கிறேன். நாயகனின் தலையில் அடித்து அவரை மூர்ச்சையாக்கி விடுகின்றனர். அவரது தலையைக் கொய்ய, ஆடியாள் ஸ்லோமோஷனில் ஓடி வருகிறார். நாயகனின் அப்பாவோ, ‘ஸ்ரீராமர் ஆன் தி வே. பயப்படாதீங்க’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ராமர் மழையாக வந்து நாயகனை எழுப்புவார் என்பதற்கான அறிகுறிகள் படத்தில் தெரிகின்றது. அங்க வைக்கிறார் இயக்குநர் ஒரு ட்விஸ்ட். நாயகன், ஹார்வர்ட் பல்கலைக்கழக்கத்தில் எத்திக்கல் ஹேக்கிங்கில் டாப்பர். திடீரென எங்கயோ இருந்து ஒரு ட்ராக்டர் வீலிங் செஞ்சாப்ல வந்து புழுதியைக் கிளப்புகின்றது. புழுதி அடங்கியதும், ‘ஓ, எண்டே சாத்தான்’ எனச் சொல்லுமளவு படுபயங்கர திருப்பம் உள்ளது படத்தில். போயபட்டியாரின் சிக்னேச்சர் திருப்பம் அது. பொதுவாக, இரண்டாம் பாதியிலேயே அவரது படங்களில் அந்தத் திருப்பம் தொடங்கிவிடும். ஆனால், இந்தப் படத்தில் க்ளைமேக்ஸில்தான் அது நிகழ்கிறது. ‘இந்தத் திருப்பம் முன்பே நடந்திருந்தால், படத்தின் சுவாரசியம் விண்ணைப் பிளந்து இருக்குமே!’ எனச் சோர்வுறும் பொழுது,

‘உங்க மைண்ட்-வாய்ஸ் கேட்டுச்சு ப்ரோ! நீங்க எதிர்பார்ப்பது ஸ்கந்தா – 2 இல் வருது. Believe me’ எனப் படத்தை போனஸ் அட்டாக்குடன் முடிக்கிறார் போயபட்டியார். அடிதூளு எனக் குதூகலித்தது மனம். ‘செத்தான்டா அந்த மொரோக்கோ டேனியலு. எப்ப பார்ட் 2 வரும்?’ என எகிறும் ஆவலையும், ஹார்ட்-பீட்டையும் கன்ட்ரோல் செய்யக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

சினிமா இலக்கணங்களை உடைப்பதே நல்ல இயக்குநருக்கு அழகு. போயபட்டிக்காரு, இயற்பியலுக்குச் சமாதி கட்டுவதில் மட்டுமே பல Ph.D.கள் முடிச்சவர். சினிமா இலக்கணத்தை உடைப்பதா பெருசா? ஒரு ஃப்ரேமில் ஒரு துப்பாக்கி காட்டப்பட்டால் அது படம் முடியும் முன் ஒரு தோட்டாவையாவது உமிழ்ந்திருக்க வேண்டுமென்பது இலக்கணம். இங்கே நாயகனைக் கொல்ல வரும் நூற்றுக்கணக்கான ஆட்களின் கைகளிலும் துப்பாக்கி உள்ளன. ஆனால், யாரும் நாயகனை நோக்கிச் சுடுவதில்லை. RIP, Cinema Grammar. பிளஸ், தயாரிப்பாளருக்குத் தோட்டா செலவையும் மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளார். ஹாட்ஸ்டார்+ டிஸ்னியில் படம் பார்த்ததும், மறக்காமல் குளிர்பதனப்பெட்டியில் வைத்த மூளையை எடுத்துத் தலையில் insert செய்துகொள்ளவும்.

இப்படிக்கு,
*Agent Connoisseur