Shadow

கொட்டுக்காளி – உலக சினிமாவின் அடையாளம் | இயக்குநர்கள் புகழாரம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’ ஆகும். இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலையரசு, “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. கூழாங்கல் படம் பார்த்ததும் நாங்கள் வினோத்துடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தோம். ‘கொட்டுக்காளி’ மூலம் அது நடந்துள்ளது. வினோத்ராஜ், சூரி, அன்னா பென் என அனைவரும் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினரும் நன்றாக வேலை செய்திருக்கின்றனர். படம் நிச்சயம் பேசப்படும்” என்றார்.

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவன், “இது நம் ஊரின் கதை. நிச்சயம் நம் எல்லோரும் கடந்துதான் வந்திருப்போம். நம் மக்கள் எப்படி ‘கொட்டுக்காளி’யை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

சவுண்ட் டிசைனர் அழகிய கூத்தன், “படத்தில் மியூசிக் இல்லை என்பதை இயக்குநர் வினோத்ராஜ் சொல்லியிருந்தார். அதுவே முதல் சவால். இசை இல்லை என்பதால் படத்தில் சத்தம் அதிகம் வைக்கக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தினோம். இந்தப் படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார், “’கூழாங்கல்’ படத்தை விட இயக்குநர் வினோத்ராஜ் அதிக பாய்ச்சல் இதில் நிகழ்த்தி இருக்கிறார். உலகத்தின் பல்வேறு மொழி படங்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்ற வினோத்ராஜாவைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக உள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லாமல், தரமான படைப்பைக் கொடுக்க வேண்டும் என்பது இந்தப் படக்குழுவின் நோக்கமாக உள்ளது. உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு இந்தப் படம் வாழ்நாள் பெருமையாக இருக்கும். படத்தில் சூரி, அன்னா பென் நடிப்பு, உழைப்பைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல், “’கொட்டுக்காளி’ திரைப்படம் மிகவும் யதார்த்தமானது. எந்தப் படத்திலும் பார்க்காத புது அனுபவத்தை வினோத்ராஜ் கொடுத்துள்ளார். ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என அவர்களாகவே நினைத்துக் கொண்டு செல்லும் பயணம்தான் ‘கொட்டுக்காளி’. உண்மையிலேயே யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது என்பதுதான் கதை. இது எல்லாமே நாம் பக்கத்தில் வாழ்வில் பார்த்த அனுபவம்தான். முந்தைய படங்களை விட சூரி சிறப்பாக நடித்துள்ளார். எல்லா நடிகர்களும் தங்களுடைய ஆத்ம திருப்திக்காக வினோத்ராஜூடன் ஒரு படம் நடிக்க வேண்டும் எனச் சொல்வேன். அந்த அளவுக்கு கலை மீது பக்தி வைத்துள்ளார். இதைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கும் படக்குழுவுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் லிங்குசாமி, “உலகத்தில் உள்ள எந்த ஒரு நல்ல படத்தோடு ஒப்பிடும்போதும் இந்தப் படத்தில் அதன் சாயல் இல்லை. வேறுமாதிரியாக உள்ளது. பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றிமாறன் என எந்த இயக்குநரோடு வினோத்ராஜை ஒப்பிட வேண்டும் எனத் தெரியவில்லை. அவர் யார் மாதிரியும் இல்லாமல் தனித்துவமானவர். படத்தை அவ்வளவு சிறப்பாக எடுத்துள்ளார். சூரி நடிப்பில் ‘கருடன்’, ‘விடுதலை’ படங்கள் வெற்றி அடைந்தது. அதுபோலவே, ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன். அன்னாபென்னும் சிறப்பாக நடித்திருக்கிறார். உலக சினிமாவுக்கே அடையாளமாக இந்தப் படம் அமையும்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின், “’கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்தேன். இயக்குநர் வினோத்ராஜ் என்னைச் செருப்பால் அடித்தது போல இந்தப் படம் இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன் நான். அவரது காலில் விழுந்து முத்தமிடத் தயாராக இருக்கிறேன். அதற்கடுத்து வினோத்தின் காலில் விழத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தை புரோமோட் செய்ய நிர்வாணமாக நடனம் ஆட வேண்டும் என்றாலும் தயார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. ’கொட்டுக்காளி’ படம் அவனுக்கு மற்றுமொரு குழந்தை. விஜய்சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். விஜய்சேதுபதியை அடுத்து சூரியின் நடிப்பைப் பார்த்து மிரண்டு விட்டேன். காமெடியனாக இருந்து அசுர நாயகனாக வளர்ந்து வரும் சூரியைப் பார்க்க பிரமிப்பாக உள்ளது. படத்தில் கதாநாயகி அன்னா பென் ஒன்றரை வார்த்தைத்தான் பேசியிருப்பார். ஆனால், நிச்சயம் அவரது நடிப்பிற்குத் தேசிய விருது கிடைக்கும். சத்தமே இல்லாமல் பெரிய அரசியல் கருத்துடன் ‘கொட்டுக்காளி’ உருவாகி இருக்கிறது” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன், “சர்வதேச தரத்தில் படம் உருவாக்கக்கூடிய நம்ம ஊர் பையன்தான் வினோத்ராஜ். சூரி போன்ற மெயின் ஸ்ட்ரீம் நடிகர் வினோத்ராஜ் படத்தில் நடிப்பது அவருக்கு ப்ளஸ். அதேசமயம், சவாலும் கூட! ‘கூழாங்கல்’, ‘கொட்டுக்காளி’ என வினோத்தின் இரண்டு படங்களும் சர்வதேச அளவில் பேசப்பட்டு இருக்கிறது. பெண்களுக்கான படம், அரசியல் கருத்துகள் பேசும் படம், இலக்கியம் பேசும் படம் என அத்தனையும் இருக்கிறது. சூரி, அன்னாபென், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் அந்தந்தக் கதாபாத்திரமாகவே இருக்கிறார்கள். அந்தளவு நேர்மையான படைப்பு ‘கொட்டுக்காளி’” என்றார்.

நடிகர் சூரி, “நான் பல படங்களில் நடித்து பாராட்டுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால், இந்தப் படத்திற்கு கிடைத்த பாராட்டு எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்னுடைய அம்மா, அப்பா செய்த புண்ணியம்தான் இப்படியான நல்ல இயக்குநர்களையும் ரசிகர்களையும் எனக்குக் கொடுத்திருக்கிறது. ‘கூழாங்கல்’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த இயக்குநரது படத்திலேயே நான் கதாநாயகன் ஆகியிருப்பதற்கு இறைவனுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக அமெரிக்காவுக்குச் செல்வதற்காக விசாவுக்காக நான் காத்திருந்த ஒரு வாரத்தில் பயந்து விட்டேன். இந்தந்தக் கேள்விகள் கேட்பார்கள் இப்படி பதில் சொல்ல வேண்டும் என எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், எனக்கு எல்லாமே பதட்டத்தில் மறந்து விட்டது. அதுபோலவே, இத்தனை இயக்குநர்கள் ‘கொட்டுக்காளி’ படத்தைப் பாத்தபோது எனக்குப் பதட்டமாகி விட்டது. இப்படி ஒரு படத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் வினோத்ராஜ், தம்பி சிவகார்த்திகேயனுக்கு நன்றி. அன்னா பென் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார்” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “நான் முதலில் ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். அதைப் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருந்தது. நான் அதிகம் உலக சினிமாக்கள் பார்த்ததில்லை. அறிமுக இயக்குநர்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள் ராட்டர்டம் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் தேர்வாகும். முன்பு கிறிஸ்டோபர் நோலன் தனது படத்திற்காக இந்த விழாவில் விருது வாங்கி இருக்கிறார். அந்த விருதை ‘கூழாங்கல்’ படத்திற்காக வினோத்ராஜ் வாங்கினார் எனக் கேள்விப்பட்ட போது எனக்குப் புல்லரித்தது. வினோத்ராஜைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவருடைய அடுத்தப் படத்தை நான் தயாரிப்பதாகச் சொன்னேன். இந்தப் படம் வெற்றியடைந்து நான் முதலீடு செய்ததுபோக எனக்கு லாபம் வந்தால், அதை முதலில் எடுத்து இயக்குநர் வினோத்தின் அடுத்தப் படத்திற்கு முன்பணமாகக் கொடுத்துவிடுவேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் போன்ற இரண்டு இயக்குநர்களுக்குப் படம் செய்ய முன்பணம் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதைப் பார்க்கிறேன்.

நான் காலேஜ் படிக்கும்போதுதான் அதிக சினிமா பார்த்தேன். அப்போது பாலாஜி சக்திவேல், கெளதம் மேனன் எனப் பலரது படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். இவர்களுக்கான ட்ரிபியூட்டாக ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்க்கிறேன். இந்தப் படத்திற்கு இசை இல்லை என்று வினோத்ராஜ் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. சூரி, அன்னா படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ’விடுதலை’ படத்தை விட ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரியின் நடிப்பு நிச்சயம் ஒரு மார்க் அதிகம் வாங்கும் என நம்புகிறேன். ’விடுதலை2’, கருடன், ‘கொட்டுக்காளி’ என இந்த வருடம் சூரிக்கு ரொம்பவே ஸ்பெஷல். பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றிமாறன் என அனைவரும் இந்தப் படத்தை இவ்வளவு பாராட்டி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.