Shadow

குலேபகாவலி விமர்சனம்

Kulebagavali movie review

முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண்.

குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் பழி வாங்குவது தான் அவரது வாழ்நாள் லட்சியமென்பதாக ஒரு தனி அத்தியாயமே வைத்துள்ளனர் படத்தில். சபதத்தை எடுக்கவிட்டு சத்யனைக் கதையில் இருந்து ஓரங்கட்டி விடுகின்றனர் கதையில்.

இப்படி, கதாபாத்திர அறிமுகங்கள் கோர்வையில்லாமல் தனித்தனியே தொக்கி நிற்கின்றன. காரணம் படத்தில் அத்தனை கதாபாத்திரங்கள். பிரதான கதாபாத்திரங்கள் நால்வரும் இணைந்தவுடன் படம் சூடு பிடிக்கிறது. படம் சீரியசான காமெடியாகவோ, டார்க் காமெடியாகவோ, இயல்பான காமெடியாகவோ இல்லாமல், மிக மேம்போக்கவே நகைச்சுவையை அணுகியுள்ளது.

Kulebagavali Prabhu Devaசிலை கடத்தல் குழுத் தலைவர் நம்பியாக மன்சூர் அலி கான், அவரிடம் பணி புரிபவராக யோகி பாபு, ‘டான்’ ஆக ஆனந்த்ராஜ், அவரிடம் பணி புரிபவராக முனீஷ்காந்த், என்ன சொன்னாலும் நம்பும் அண்ணாச்சியாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். க்ளைமேக்ஸ் காமெடிக் கலாட்டாவிற்கு இவர்கள் அனைவரும் உதவி இருந்தாலும், இவர்கள் கதாபாத்திரங்களை இன்னும் அழுத்தமாகச் சித்தரித்திருக்கலாம். பிரதான மெக்ஸிகோ வில்லனாக மதுசூதனராவ் எடுபடவில்லை. அதற்குப் பதில், ஆனந்தராஜையே இன்னும் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

ஹன்சிகாவைக் கவர்ச்சிக்கு என முடிவெடுத்து படத்தில் உபயோகித்துக் கொண்டிருந்தாலும், விஜி என்று அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தைக் கதையில் எப்படி உபயோகிக்கலாம் என்று

ரேவதி நடித்துள்ளார் என்பதை ட்ரெய்லரில் கூடக் காட்டாமல் மிக சர்ப்ரைஸாக வைத்துள்ளனர். கார் திருடர் மாஷாவாக வருகிறார் அவர். படத்தின் மெயின் நாயகியே அவர் தான், அதன் பின் தான் பிரபுதேவா என்றாலும் கூட, அப்படியொன்றும் சர்ப்ரைஸான கதாபாத்திரம் இல்லை அவருக்கு. பாடல் காட்சிகளைத் தவிர்த்து, பிரபுதேவாவிடம் வழக்கமாகத் தெரியும் குதூகலமும் எனர்ஜியிம் மிஸ் ஆகிறது. ஆக, படத்தில் நிறைவாக நடித்துள்ளது ரேவதி மட்டுமே! மெனக்கெடலின்றி மிகச் சுலபமாய், ரேவதி கார் திருடுவார், பிரபுதேவா சிலை திருடுவார், இயக்குநர் கல்யாண் கதை விடுகிறார். அவ்வளவுதான்!

கதைக்கு உதவவில்லை எனினும் வில்லன் மெக்ஸிகோ என்பதைக் கவனிக்க வேண்டும். படத்தின் கலர் டோனுக்கான குறியீடாக அதைக் கொள்ளலாம். எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் படம் மிக கலர்ஃபுல்லாக உள்ளது. விவேக் – மெர்வின் இசையில் பாடல்களும் துள்ள வைக்கின்றன.

படத்தில் இரண்டு விஷயங்கள் சிலாகிக்கும்படி உள்ளது. அவை, 1945இல் நடப்பதாகக் காட்டப்படும் ஃப்ளாஷ்-பேக் அத்தியாயமும், குலேபகாவலி ஊர்த்தலைவராக வரும் வேலா ராமமூர்த்தியை அவரது டெம்ப்ளட் முறுக்கில் இருந்து வித்தியாசமாகக் காட்டியிருப்பதுமே! அம்பாசிடர் கார் கவிழ்ந்ததும் அதிலிருந்து யோகி பாபுவைக் கொண்டு இடைவேளை விடும் காட்சியும் கூடத் திரையரங்கில் சிரிப்பொலியை எழுப்புகின்றன.