Shadow

லால் சலாம் விமர்சனம்

தங்கள் அரசியல் லாபத்திற்காக ஒரே ஊரில் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்து இஸ்லாமிய மக்களிடையே பிரச்சனையைத் தூண்டிவிடப் பார்க்கும் அரசியல்வாதிகள். இது தெரியாமல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எழும் போட்டியில் அடித்துக் கொள்ளும் இந்து, இஸ்லாம் விளையாட்டு வீரர்கள், இதற்கு மத்தியில் ஊரில் தடைபட்டுப் போன கோவில் திருவிழா, முறைத்துக் கொண்டு திரியும் இரு வேறு சமயத்தைச் சேர்ந்த நாயகர்களின் அப்பாக்கள் இருவரும் உயிர் தோழர்கள் இப்படியிருக்கும் ஒவ்வொரு ஒன்லைன் –களுக்கும் சினிமாத்தனமான முடிவுகள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு எழுதத் தெரியும் என்றால் அதுதான் ஒட்டு மொத்த லால் சலாம் திரைப்படம்.

தன் தந்தை மீது சங்கி என்னும் முத்திரை விழுவதை அவமானமாகக் கருதும் மகள் கிடைப்பது ஒரு கொடுப்பினை தான்.  அந்த முத்திரை அவமானகரமானது, என் தந்தை அப்படி இல்லை என்று சொல்லத் துடித்து இப்படி ஒரு திரைப்படத்தை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்தாரா..? இல்லை அந்த உண்மையை கண்டு கொண்ட மக்களை எப்படியாவது மீண்டும் ஏமாற்றிவிட வேண்டும் என்கின்ற புத்திசாலித்தனத்துடன் இப்படத்தை இயக்குநர் ஐஸ்வர்யா எடுத்தாரா…? என்பது அவருக்கே வெளிச்சம். அது எந்த அடிப்படையிலான நோக்கமாக இருந்தாலும், இந்த காலத்தின், சூழலின் தேவை கருதி “லால் சலாம்”-யை அதன் கருத்தாக்கம் மற்றும் சொல்லவரும் செய்தி கூறுகளுக்காக தூக்கிப் பிடிக்கலாம் தப்பில்லை.

ஒரு படம் அது பேச வரும் கருத்தாக்கம் மற்றும் அரசியலுக்காகவே நல்ல திரைப்படம் என்கின்ற பெயரை பெற்றுவிட முடியாது. அதையும் தாண்டி அப்படத்தின் கலை நேர்த்தி, காட்சியமைப்புகள், கதாபாத்திர வார்ப்புகள், கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்ட விதத்தில் இருக்கும் சுவாரஸ்யம் தொடர்பான கூறுகள் இவைகளைப் பொறுத்துத்தான் அது சிறந்த படமாகவோ அல்லது மிகச்சிறந்த படமாகவோ மாறும். அவைகளையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, லால் சலாம் ஒரு சராசரி படமாகவே சுருங்கிவிடுகிறது.

அதற்கு மிக முக்கிய காரணம், பேசிய கருத்தாக்கம் வீரியமானது என்றாலும் கூட, அது பார்வையாளர்களுடன் எமோஷ்னலாக கனெக்ட் ஆவதில் பிரச்சனை இருக்கிறது. ரஞ்சிக் கோப்பையில் ஆடி, தன் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று விரும்பும் ஒருவனான வரும் விக்ராந்தின் கனவு உடையும் இடமும், அந்த வலியை அவர் சுமக்கும் விதமும் கடத்தப்பட்ட அளவிற்கு, தந்தைகளாக வரும் லிவிங்க்ஸ்டன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமான நட்பின் பந்தமும், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவருக்குமான விரோதத்தின் முடிச்சுகளும்,  முரண்பாடுகளும், விஷ்ணு விஷாலுக்கும் அவரது குடும்பத்திற்குமான உறவுநிலையும் பார்வையாளர்களுக்கு சரியாகக் கடத்தப்படவில்லை.

அது போக திரைப்படம் கிரிக்கெட் தொடர்பான வெற்றி என்கின்ற கணக்கில் இருந்து விலகி திருவிழா கொண்டாட விடாமல் தடுப்பது என்கின்ற லட்சியத்திற்குள் செல்லும் போது, மையப் பிரச்சனையாக இருக்கும் ஓட்டு அரசியல் வலுவிழந்துவிடுவதால் அது திரைக்கதைப் போக்கில் தொய்வை ஏற்படுத்துகிறது. இந்து இஸ்லாமிய மக்களை இரண்டாகப் பிரித்துவிட்டு, ஒட்டு மொத்தமாக இந்து மக்களின் ஓட்டைப் பெறத் துடிக்கும் கட்சியைச் சேர்ந்த விவேக் பிரசன்னா எப்படி தன் சுயவிரோதத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தன் நெடுநாளைய கனவான மாமனை அரசியலில் ஜெயிக்க வைக்கும் கனவை விட்டுக் கொடுக்கிறார் என்று புரியவில்லை.

1996 காலகட்டத்தில் நடக்கும் திரைப்படம் என்பதால் அந்த காலகட்டத்து வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான விசயங்களை ஆங்காங்கே சேர்த்து இருப்பது பாராட்டத்தக்கது. அது கதைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. ஆனாலும் அந்த காலகட்டத்தில் காதலின் எதிரியாக இருக்கும் ஜாதியை வைத்துக் கொண்டு கட்டமைக்கப்பட்ட காட்சிகளில் உண்மை இருந்தாலும் புதுமை இல்லாததால் சுவாரஸ்யமும் இல்லை.

மும்பை பாயாக வரும் ரஜினியின் உடலில் ஒரு சோர்வு குடியேறி இருப்பதை உணர முடிகிறது. அவரது வேகமான மூவ்மெண்டுகள் மெதுவாக மாறி இருப்பதை ஆங்காங்கே உணர முடிகிறது. அப்பாவாக தன் மகனையும், தன் நண்பனின் மகனையும் ஒரு சேரப் பார்த்து, அவர்கள் அடித்துக் கொள்வதை தீர்க்க வழி தெரியாமல் தவிக்கும் இடங்களில் விண்டேஜ் ரஜினியைப் பார்க்க முடிகிறது. “அலே கும் சலாம்”-ற்கு அர்த்தம் சொல்லும் காட்சியிலும், கிரிக்கெட் வர்ணனையில் வன்மத்தைக் கலந்து பேசுவதை கண்டு பொங்குவதுமாக  ரஜினிக்கே உரித்தான சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.  அதே நேரம் அதற்கு கவுண்டர் கொடுப்பது போல், “ஜெய் ஸ்ரீராம்” என்று ஸ்டேடியத்தில் நம்மவர்கள் கோஷம் எழுப்பியதை நீலச்சட்டை மாறன் கொக்கிப் பிடியாகப் பிடித்து கேள்வி கேட்டதும் நினைவுவருகின்றது.

சண்டைக்காட்சிகள்  ரஜினியின் வயோதிகத்தை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் ஆடி ஓட வேண்டிய தேவை இல்லாத அளவிற்குத் தான் சண்டைக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் அதையும் தவிர்த்து இருக்கலாம்.

ரஜினியின் ப்ரசன்ஸ் படத்திற்கு பெரும் அளவிற்கு உதவி இருக்கிறது. கெளரவத் தோற்றம் என்று கூறிக் கொண்டாலும் படத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடத்திற்கும் மேலாகவே வருகிறார். மும்பை பாய் வேடத்தில் குல்லாவையும் குர்தாவையும் போட்டுக் கொண்டு, அதை விறைப்பாக இழுத்து விட்டுக் கொண்டு குறுக்கும் மறுக்குமாக நடக்கும் தோரணையில் இன்னும் ஸ்டைல் குறையவே இல்லை என்பது உண்மைதான்.  தன் நண்பனின் மகனையும் விட்டுக் கொடுக்காமல் பேசும் காட்சிகளிலும், விஷ்ணு விஷாலில் அம்மா வந்து அழுது கெஞ்சும் காட்சிகளிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சலாம் அலே கும் மற்றும் அலே கும் சலாமிற்கு அர்த்தம் சொல்லும் இடத்திலும் நச் –செனும் நடிப்பு.

விஷ்ணு விஷால், குடியும் அடியுமாகவே அலைந்து கொண்டிருக்கிறார். குடித்து விட்டு கிரிக்கெட் மட்டையுடன் மைதானத்தில் இறங்கும் போது, அவர் கிரிக்கெட் மீது கொண்ட மரியாதையும், அடிக்க மாட்டேன், குடிக்க மாட்டேன் என்று அம்மாவிடம் சத்தியம் செய்து கூறிவிட்டு குடித்துவிட்டும் அடித்துவிட்டும் வரும் இடங்களின் மூலம் அம்மா மீதும், கடவுள் மீதும் கொண்ட மரியாதை புலனாகிறது. தான் தோன்றித்தனமாக திரியும் கதாபாத்திரம் என்பதாலும், அதற்கான வலுவான காரணம் படத்தில் இல்லாததாலும் அக்கதாபாத்திரத்தை ரசிக்கவும் முடியவில்லை, பின் தொடரவும் முடியவில்லை.

விக்ராந்த் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அவருடைய வலியை ஆடியன்ஸ்க்கு கடத்தும் இடங்களில் அநாயசமாக நடித்திருக்கிறார்.  பூசாரியாக வரும் காமெடி நடிகர் செந்திலின் கதை ஒரு குட்டி சிறுகதையைப் போல் காத்திரத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வில்லத்தனம் செய்தில் ஹீரோ என்று பெயர் பெற்றிருக்கும் விவேக் பிரசன்னாவின் நடிப்பு படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஆனால் அவர் ஒற்றைக் கத்தி மிரட்டலில் பயந்து திருந்திவிடுவது நம்பும்படி இல்லை.

அப்பா ஸ்தானத்தில் இருந்து அறிவுரை கூறுபவராக வரும் தம்பி ராமையா கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அவர் தொடர்பான காட்சிகளில் எமோஷ்னல் கனெக்ட் கிடைக்கிறது. இவர்கள் தவிர்த்து சில காட்சிகளில் வரும் கபில்தேவ், அம்மாவாக வரும் ஜீவிதா, ரஜினியின் ஜோடியாக வரும் நிரோஷா போன்றோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தங்கள் நடிப்பால் நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.  தான்யா பாலகிருஷ்ணன், டைகர் தங்கதுரை ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. காட்சிகளில் இல்லாத உணர்வலைகளை பெரும்பாலான காட்சிகளில் உருவெடுக்கச் செய்வதில் நேர்த்தியாக செயல்பட்டிருக்கிறது பின்னணி இசை. பாடல்கள் பின்னணி இசையை ஒப்பிடும் போது கவனம் ஈர்க்கத் தவறுகிறது.

விஷ்ணு ராமசாமியின் ஒளிப்பதிவில் பம்பாயும், கற்பனை நகரமான முரார்பாத்தின் 90 காலகட்டமும் சிறப்பாக படம்பிடிக்கப்பட்டு இருக்கிறது. காட்சிகளுக்கான பின்னோக்கிய ஓட்டத்தை கண்களில் தெரியும் வண்ணங்கள் மூலம் கண்டு கொள்ள முடிகிறது.  பிரவீன் பாஸ்கரின் எடிட்டிங்கும் ஒருங்கமைவுடன் இருந்து கதையை நேர்த்தியாக சொல்ல உதவி இருக்கிறது.

இருப்பினும் திரைக்கதை இன்னும் கொஞ்சம் சற்று கூர்மையாக எழுதப்பட்டு இருக்கலாம்.  தெரிந்த விடயங்களையே சஸ்பென்ஸ் என்று சொல்லி மறைப்பதும், திரைக்கதையின் வழியே கதை போகும் சூழலை எளிதாக யூகிக்க முடிவதும், முழுமையற்ற கதாபாத்திரங்களும், எமோஷ்னல் கனெக்ட் கிடைக்காத காட்சிகளும் பலவீனங்கள்.

இருப்பினும் கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தாலும் மதநல்லிணக்கத்தை தூக்கிப் பிடிக்கும் அந்த க்ளைமாக்ஸ் காட்சிக்காகவும், படம் பேசி இருக்கும் பேசு பொருளுக்காகவும் ரஜினிகாந்த் என்னும் உச்ச நடிகரின் ஸ்கிரீன் பிரசன்ஸ்- ஆகியவற்றிற்காகவும் சராசரியான படம் என்கின்ற இடத்தை எட்டிப் பிடிக்கிறது லால் சலாம்.