மிக மிக அவசரம் – பெண் காவலர்கள் சந்திக்கும் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. ஆனால் இந்தப்படம் போலீஸாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படமாக இருக்குமோ என்கிற எண்ணம் பலர் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் அதை தனது வித்தியாசமான அணுகுமுறையால் உடைத்தெறிந்து விட்டார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.
காவலர் தினமான நேற்று, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் சுமார் 200 பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி. இந்நிகழ்வு குறித்த விரிவாகப் பகிர்ந்துகொண்ட சுரேஷ் காமாட்சி,
“இது ஏதோ பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் கதைதான். அந்தவகையில் இந்தப்படத்தின் கதைக்களமாக போலீஸ் துறையைப் பின்னணியில் வைத்துள்ளோம். அவ்வளவுதான்!
இந்தப்படம் தொடர்பாக அமைச்சர்கள், முதலைமைச்சர் ஆகியோரை எளிதில் அணுக முடிந்தது. நானும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இந்தப்படத்தை முதலில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு இருவரையும் சந்தித்து படம் பற்றிக் கோரியதுடன், அவர்களுக்குத் திரையிட்டும் காட்டினோம். அவர்கள் இருவரும் தமிழக முதலமைச்சரிடம் இந்தப்படம் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர் இந்தப்படத்தை பார்த்தவிட்டு, இந்தப்படத்தில் சொல்லியிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கலாமே எனக் கூறி கமிஷ்னர் விஸ்வநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரிடம் இந்தப்படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்தார்.
முதல்வரின் பரிந்துரையின் பேரில் கமிஷ்னரும் அவரின் கீழ் உள்ள உயரதிகாரிகளைப் படம் பார்க்கச் சொல்லிவிட்டு, அதன்பின் சுமார் 200 பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்ட அனுமதித்தார்.
படம் பார்த்த அனைத்து பெண் காவலர்களும் இது தங்களுக்கான படம் என ஆராவரமாகப் படத்தை ரசித்து பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதை பெண் காவலர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான படமாக மட்டும் அவர்கள் பார்க்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிரான படமாகத்தான் பார்த்தார்கள். மேலும் பெருந்தன்மையுடன், ‘இது உண்மையிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை’ என உயரதிகாரிகள் நினைத்ததால் பெண் காவலர்களை இந்தப்படத்தை பார்க்க வைத்தார்கள். தங்களுக்கு எதிரான படம் என அவர்கள் நினைத்திருந்தால் இதை பெண் காவலர்கள் பார்க்க அனுமதித்திருக்கவே மாட்டார்கள் அல்லவா?
ஒரு படத்தில் சொல்லப்பட்ட பிரச்னைகளைக் கவனித்துவிட்டு, இதற்கு உடனே நாங்கள் தீர்வு கொடுக்கிறோம் என ஒரு முதலமைச்சர் சொல்லியிருப்பது இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அந்த வகையில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு, கமிஷ்னர் விஸ்வநாதன், டிஜிபி ராஜேந்திரன், துணை ஆணையர் பாபு ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்.