Shadow

லாந்தர் விமர்சனம்

மின்சாரம் இல்லாத காலத்திலும், மின்சாரமே இன்னும் கிடைக்காத கிராமங்களிலும் இரவின் ஊடான பயணத்திற்கு லாந்தர் விளக்குகள் பெரும் உதவியாக இருக்கும். அது போல் ஓர் இரவில் கோயம்புத்தூர் நகரில் நடக்கும் தொடர் குற்றங்களை தேடிச் செல்லும் போலீஸ் அதிகாரி ACP விதார்த்தின் பயணம் தான் இந்த “லாந்தர்”

சின்ன சின்ன விசயங்களுக்கு கூட பயப்பட்டு மயங்கி விழும் ஒருவித போஃபியாவினால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியுடன் வாழ்ந்து வரும் போலீஸ் அதிகாரி விதார்த் அன்றைய இரவை மனைவியின் அருகாமையில் கழிக்க முற்பட, நகரில் ஒரு மர்ம நபர் எதிர்ப்படும் அத்தனை பேரையும் கொடூரமாக தாக்கியபடி செல்லும் தகவல் வருகிறது. வேறு வழியின்றி தன் மனைவியை தனியாக வீட்டில் விட்டுவிட்டு, அந்த மர்மநபரை தேடிச் செல்கிறார் விதார்த். விதார்த் அந்த மர்ம நபரை கண்டுபிடித்தாரா..? அந்த மர்ம நபருக்கு என்ன பிரச்சனை..? எதனால் அவன் எதிர்ப்படும் அத்தனை பேரையும் தாக்குகிறான்..? அதே நேரம் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வந்த விதார்த்தின் மனைவி பாதுகாப்பாக இருந்தாரா..? இவைகளுக்கு எல்லாம் பதில் சொல்கிறது திரைக்கதை.

முதன்முறை விதார்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கான வேலை என்னவோ மிகவும் குறைவு. அந்த மர்ம நபரைத் தேடி இரவு முழுவதும் அலைவதே அவரின் முழு நேரப் பணியாக இருக்கிறது. மீதி நேரம் மனைவி குறித்தான கவலையில் மிதக்கிறார். சரி அந்த குற்றவாளியை பிடிப்பதிலாவது ஏதாவது புத்திசாலித்தனமாக செயல்படுகிறாரா என்றால், அந்த நபரின் கழுத்தில் இருக்கும் அடையாள அட்டையைக் கொண்டு அவர் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரை கண்டுபிடிக்கிறார். அவ்வளவு தான். மற்றபடி நாயகனின் கதாபாத்திரம் படத்தில் சக போலீஸ்காரர்களுக்கு உத்தரவு கொடுத்தபடி மட்டுமே இருக்கிறது.

விதார்த்தின் மனைவியாக ஸ்வேதா டோரத்தி. இவருக்கும் பெரிதாக நடிப்பதற்கான ஸ்கோஃப் இல்லாத கதாபாத்திரம். பயப்படுவதும், மயங்கி விழுவதுமாக காட்சிகள் தோன்றி மறைகிறார்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சஹானா. முகத்தில் முதிர்ச்சி தெரிவதால் இவரை ரசிக்கவும் முடியவில்லை; நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் விபின் கதாபாத்திரமும் ஓகே ரகம் தான்.

இவர்கள் தவிர்த்து கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன், பசுபதிராஜ் போன்றோரும் இருக்கிறார்கள்.

படத்தின் பின்கதையாக சொல்லப்படும் சிறு குழந்தையின் குணாதிசயம் தொடர்பான கதை விகாரமாக இருக்கிறது. அது தான் படத்தின் மையம் என்பதாலோ என்னவோ படத்துடன் ஒன்றவே முடியவில்லை. அதை மீறி படத்துடன் ஒன்ற நினைத்தாலும் அடுக்கடுக்காக வரும் லாஜிக் மீறல்கள் அதற்கு பெரும் தடைக்கற்களாக நிற்கின்றன.

காட்சிகளில் என்ன நடக்கின்றதோ அதையே வசனங்களாக பேசி கடுப்பேற்றுகிறார்கள் மை லார்ட். மிகமிக சுமாரான இயக்கத்தினால் சாதாரண காட்சிகள் கூட பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்து கேலி செய்யும் காட்சிகளாக மாறி இருக்கின்றன. அதிலும் அந்த சஹானா வீட்டின் முன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பிச்சைக்கார கதாபாத்திரம் படு செயற்கைதனத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பிரவீன் இசையமைக்க, ஞான செளந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷாஜி சலீம் எழுதி இயக்கி இருக்கிறார். அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரான ஷாஜி சலீம் பல்வேறு விதமான மக்களுடன் பழகுவதற்கான வாய்ப்பை பெற்றவர் என்பதால், மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய ஒரு கதையை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது.

கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, நடிப்பு என்று எல்லா ஏரியாக்களிலும் சோடை போயிருக்கிறது “லாந்தர்”.

லாந்தர் – கழிக்கப்பட வேண்டிய பழமை.