Shadow

பயமறியா பிரமை விமர்சனம்

கொலையை கலையாகக் கருதி 25 வருடங்களில் 96 கொலைகள் செய்த ஒரு கைதியை பேட்டி எடுத்து, அதை கதையாக எழுதும் ஒரு எழுத்தாளரும், அதை படிக்கும் வாசகர்களும் அந்த கொலையாளியைப் போல் கொலையை கலையாகக் கருதி கொலைகள் செய்யத் துவங்கினால் அதுதான் “பயமறியா பிரமை” படத்தின் கதை.

இதுதான் கதையா என்று கேட்டால், படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்லைடு அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அதற்கு எதிர்மாறாக காட்சிகள் காட்டப்படுகின்றன. படத்தில் எழுத்தாளர் புத்தகம் எழுதுவதாகவோ, அல்லது அவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறினார் என்பதோ காட்சிகளில் இல்லவே இல்லை. அவர் வெறுமனே படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பேட்டி என்கின்ற பெயரில் உப்பு சப்பில்லாத ஏன்..? எப்படி..? என்கின்ற கேள்விகளை கேப்பதும், இது மனிதாபிமானமற்ற செயல் என்று கொலையாளியை சபிப்பதுமாகவே இருக்கிறார்.

இதற்கு இடையில் வேறு வேறு கதைமாந்தர்களாக வரும் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் போன்றோரும் சகட்டு மேனிக்கு கொலைகள் செய்கிறார்கள். இவர்களில் சிலர் ‘பயமறியா பிரமை’ என்கின்ற புத்தகத்தை படிப்பது போன்ற காட்சிகளும் இருக்கின்றன. சரி இவர்கள் எல்லாம் அப்புத்தகத்தால் பாதிப்புக்குள்ளான வாசகர்கள் என்று நினைத்தால், ஒரு இடத்தில் இயக்குநர் அவர்கள் எல்லோரும் கொலையாளி ஜெகதீஷின் வேறு வயது கதாபாத்திரங்கள் என்று குழப்புகிறார்.

சரி அப்படியானால் அப்புத்தகத்தை படித்து கொலைகாரன் ஜெகதீஸை போலவே மாறிப் போன எழுத்தாளன் மற்றும் வாசகர்கள் எங்கே, என்று கேட்டால் அந்த கேள்விக்கு ஒட்டு மொத்த படத்தில் பதில் இல்லவே இல்லை. பின்பு எதற்காக படத்தின் துவக்கத்தில் அந்த ஸ்லைடு காட்டப்பட்டது என்பதும் இயக்குநருக்கே வெளிச்சம்.

இவைகள் தவிர்த்து ஒரு கொலை செய்துவிட்டு, அந்த கொலையாளியின் உடலில் இருந்து வடியும் குருதியைக் கொண்டு இயற்பியல், கணிதவியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் சமூக இந்திய வரைபடத்தின் ரோடு மேப் போன்ற வரைபடங்களை எல்லாம் வரைந்துவிட்டால், அந்த கொலை கலையாகிவிடுமா என்ன…?

சரி. அந்த கொலைகள் எதற்காக நடத்தப்படுகின்றன, அதன் பின்னணியில் உள்ள மன உளவியல் என்ன என்பதையாவது திரைப்படம் ஏதாவது ஒரு புள்ளியில் பேசுகிறதா..? என்றால் அது துளியும் இல்லை.

இறுதியில் நான் சற்று பொறுமையாக இருந்திருந்தால் இந்த கொலைகளை எல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று வியாக்கியானம் வேறு பேசுகிறார்கள்.

ஆக, கொலைகளை கலையாகப் பார்ப்பவனின் கதை என்று கூறி, கொலை என்றால் என்ன என்றும் தெரியாமல், கலை என்றால் என்னவென்றும் புரியாமல் ஏதோவொன்றை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

நாம் பார்ப்பது திரைப்படம் தானா என்கின்ற பிரம்மை எழுவதை தவிர்க்க முடியவில்லை.,

பயமறிமா பிரமை – பேதமை