Shadow

லீலா (2016) விமர்சனம்

leela

இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக எடுப்பது சாதாரண விஷயமன்று. பெரும்பாலும் இலக்கியம், படைப்பாளியின் கட்டுக்கடங்காச் சுதந்திரத்தையும், எல்லையற்ற கற்பனையையும் சார்ந்து இருக்கக்கூடியது. மேலும் அங்கு ஆல்-இன்-ஆல் படைப்பாளி மட்டுமே க்ரியேட்டராக இருக்கிறார். ஆனால் திரைப்படம் சமூகம், சென்சார், காட்சிப்படுத்தும் வலி, பட்ஜெட் என பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நூற்றுக்கணக்கான மனிதர்களின் கூட்டுச் செயற்பாட்டுடன் இயங்கும் பெருஞ்செயல். இதனாலேயே இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்குவது பெரும்பாலும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

கேரள எழுத்தாளர் உண்ணி. ஆர் அவர்கள் எழுதிய சிறுகதை தான் லீலா. ஒருவகையில் இந்தக் கதையை மனித மனதின் அறம், சமூக ஒழுக்கம் குறித்த சர்ரியலிச விமர்சனம் என்றும் கொள்ளலாம். காட்சிப்படுத்துவதற்கு மிகவும் சிக்கலான கதையைத் திரைப்படமாக எடுக்கத் துணிந்ததற்கே கேரளத் திரைத்துறையின் முக்கிய இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்குப் பெரிய வணக்கம். இந்தப் படம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால், சுவாரசியமான படம்.

பூர்வீக சொத்தும், பணமும் நிறைய இருக்கும், தான்தோன்றியாக வாழ்க்கையை ரசித்து வாழும் குட்டியப்பன், தான் கனவில் கண்ட ஒரு ஃபேன்டசியைச் செய்து பார்க்கப் புறப்படுகிறார். நல்ல பிரம்மாண்டமான ஒரு கொம்பன் யானையை நிற்க வைத்து, அதன் தும்பிக்கையில் ஒரு பெண்ணைச் சாய்த்து உட்கார வைத்து அவளுடன் உறவு கொள்வது போல வந்த மகா அதிர்ச்சியான கனவு. வாழ்க்கையில் பிழைப்பதற்கும், சம்பாதிப்பதற்கும் பெரிய அழுத்தம் இல்லாத குட்டியப்பன், பணம் தேவைக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், சாகசம் செய்வதும், உலகின் கீழ் இருக்கும் எல்லாவற்றையும் அனுபவத்துவிடுவதே வாழ்க்கை என நினைக்கும் குட்டியப்பன் தனது கனவினைச் சாத்தியமாக்க பதின்ம வயது பெண் ஒருவரைக் கண்டறியப் பயணமெடுக்கிறான். கூடவே தனது கனவில் கண்ட காட்சியினைசி சாத்தியபடுத்த ஒரு யானையையும் வயநாட்டில் ஏற்பாடு செய்கிறான்.

படம் மொத்தமும் இதற்காக குட்டியப்பன் எடுக்கும் பிரயத்தனங்களும், அதன் விளைவுமாகவே திரைப்படக் காட்சிகள் விரிகிறது. கடைசியில் தனது கனவைச் செய்து பார்க்க மட்டுமே முயற்சி செய்த குட்டியப்பன் மனம் மாறி, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறான். ஆனால், இயற்கை வேறு முடிவை வைத்திருக்கிறது. அது மனித ஈகோவை வெட்டிச் சாய்க்கிறது.

பேசாப்பொருட்களைப் பேசத் துணிந்த படம். எழுத்தில் இருக்கும் வீரியம் திரைப்படத்தில் சத்தியமாக இல்லை. இத்தனைக்கும் சிறுகதையை எழுதிய உண்ணி அவர்களே இந்தப் படத்தின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். குறிப்பாகக் கடைசிக் காட்சி, சிறுகதையில் பெரிய அதிர்ச்சியையும், அடிப்படை கேள்விகளையும் எழுப்பும். ஆனால் சென்சார் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் கருதி சற்றுமொன்னையாகத் திரைப்படத்தின் கடைசிக் காட்சி அமைந்திருக்கும். சிறுகதையைப் படித்துவிட்டுப் படத்தைப் பார்த்தாலோ, படத்தைப் பார்த்துவிட்டு சிறுகதையைப் படித்தாலோ இதன் வீரியம் விளங்கும். ஒருவகையில் திரைப்படத்தில் க்ளைமேக்ஸை சப்டிலாக வைத்ததே இயக்குநர் சமூகத்தின் போலி விழுமியங்களைக் கிண்டலடிக்கத் தான் என்று நினைக்கிறேன். இந்தப் படம் குறித்த விவாதம் பரவலாக நிகழவேண்டும். நமது அறம், ஈகோ குறித்த பல கேள்விகளை இந்தத் திரைப்படம் புதைத்து வைத்திருக்கிறது.

குட்டியப்பன், நல்லவனா கெட்டவனா என்பதல்ல பிரச்சனை. இயற்கையின் முன் மனிதன் அற்பப் பயல் என்பதைத்தான் திரைப்படம் சொல்ல முயற்சி செய்திருக்கிறது. மனிதன், ‘இந்த உலகமே தனக்கு தான் சொந்தம், பணம் இருந்தால் எதையும் செய்துகொள்ளலாம் ‘என்று நினைத்துக் கொள்கிறான். ஆனால் இயற்கையின் சிறு அசைவு மனிதனைப் பொடிபொடியாக்கும். ‘யாருகிட்ட? சின்னப்பயலே!’ என இயற்கை எனும் மகாசக்தியின் மயிர் நுனியின் சிற்றணு மனிதனை நசுக்கிப் போடும் என்பதையும் கவனிக்க முடிகிறது.

நடிகர்கள் அனைவரும் நேர்மையான உழைப்பைத் தந்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. வாழ்வு என்பது நாம் நினைப்பதை விட மிகப் பெரியது என்பதை உணரமுடிகிறது. மாற்று சினிமாவை விரும்புபவர்கள், கொஞ்சம் போல்டான, சீரியசான சினிமாவை நேசிப்பவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

ஜானகிராமன் நா