சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் பி.எம்.எம் துறைகள் இணைந்து, இன்று ஆகஸ்ட் 12, 2024 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை விஸ்காம் ப்ரிவியூ தியேட்டரில் “டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங் (AI) பிரான்ஸ்” என்ற பிரீமியம் படிப்பைத் தொடங்குவதைப் பெருமையுடன் அறிவித்தது.
இந்தத் தனித்துவமான பாடத்திட்டம் கலர் கார்பென்டர் எனும் நிறுவனத்தின் இயக்குநர்கள் லயோலா விஸ்காம் முன்னாள் மாணவர்களான திருமதி மாதவி இளங்கோவன் மற்றும் திரு. ஜான் விஜய் ஜெபராஜ் ஆகிய இருவரால் வழிநடத்தப்படவிருக்கிறது. படைப்புத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இவர்கள் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில், பிரான்ஸ், பாரிஸில் உள்ள டான் பாஸ்கோ இன்டர்நேஷனல் மீடியா அகாடமியுடன் இணைந்து, பாரம்பரியம் மிக்க விஸ்காம் துறைக்காக இந்தப் பாடத்திட்டத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட விஸ்காம் துறை, இந்தப் பாடத்திட்டத்தைச் சென்னையில் எட்டு மாத தீவிர பயிற்சித் திட்டமாகத் தொடங்கி, பாரிஸில் இறுதி திட்டப்பணியுடன் நிறைவு செய்ய, முடிவு செய்யப் பட்டுள்ளது. திரைப்பட ஆக்கத்தின் மூன்று கட்டமான முன் தயாரிப்பு, ஸ்கிரிப்டிங் மற்றும் பிந்தைய தயாரிப்பிலும் Al பயன்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள். இந்தப் பாடநெறி ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களை அத்தியாவசிய திறன்களுடன் பயிற்சி அளிப்பதையும், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு செயல்முறைகளில் மாணவர்கள் திரைப்படத் தயாரிப்பில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதையும், AI தொழில்நுட்பங்களைத் தடையின்றி ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய மற்றும் சர்வதேச திரைப்படத் தயாரிப்பைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் சர்வதேச நிதி மேலாண்மை பற்றிய புரிதல்களை மாணவர்களுக்கு வழங்கும். இந்தப் பாடநெறியை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பிரான்சில் உள்ள டான் பாஸ்கோ சர்வதேச ஊடக அகாடமியில் மேற்படிப்பைத் தொடர எராளமான வாய்ப்புகள் உள்ளன.
சிறப்பு விருந்தினர்களாக லயோலா கல்வி நிறுவனங்களின் ரெக்டர் அருள்முனைவர் ஜெ.அந்தோணி ராபின்சன், பிரபல திரைப்பட நடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான திரு. நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பிரான்சின் டான் பாஸ்கோ சர்வதேச ஊடக அகாடமியின் மதிப்புமிக்க தலைமை நிர்வாக அதிகாரி அருட்தந்தை ஜான் பால் சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
ஒளிப்பதிவாளர் திரு.பி.சி.ஸ்ரீராம், திரைப்படப் படத்தொகுப்பாளர் திரு. லெனின், ஓவியர் திரு. டிராட்ஸ்கி மருது ஆகியோரால் இந்நிகழ்வு மேலும் சிறப்படைந்தது.
இந்த நிகழ்ச்சியில் லயோலா கல்லூரி நிர்வாகிகள் அருள்முனைவர் பி.ஜெயராஜ்(கல்லூரிசெயலாளர்), அருள்முனைவர் ஏ.லூயிஸ் ஆரோக்கியராஜ் சே.சு(கல்லூரி முதல்வர்), முனைவர் ஜே.ஏ.சார்லஸ் (கல்லூரி துணை முதல்வர்), முனைவர் எம்.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேசு சபை உறுப்பினர்கள், விஸ்காம் துறையின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள், கல்லூரியின் கல்வி நிர்வாகிகள், பிற நிறுவனங்களின் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை விஸ்காம் துறைத் தலைவர் அருள்முனைவர் ஜஸ்டின் பிரபு சே.ச., மற்றும் விஸ்காம் துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.பாரதி ஆகியோர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.