Shadow

கவுண்டம்பாளையம் விமர்சனம்

ஓரு சிங்கத்தைக் கொளுத்தி விடுகின்றனர். அது எரிச்சல் தாங்காமல் ஆக்ரோஷமாக ஓடி வந்து கவுண்டம்பாளையம் என்ற தலைப்பில், வலி வேதனை கதறலுடன் பாய்கிறது. இப்படித் தலைப்பிலேயே வன்முறை தொடங்கிவிட, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அமர்ந்தால்,

பசுபதி மே/பா. ராசாக்காபாளையம் படத்தில் இருந்து இன்ஸ்பையராகி முதற்பாதியை ஒப்பேற்றியுள்ளார். ரஞ்சித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘குழந்தை’ ஆகும். வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத வடிகட்டின அப்பாவி. அவர் உடன் வேலை செய்யும் சேச்சி சினுங்கலான குரலில், ‘வா பிசையலாம்’ எனச் சொன்னால், அறிவு முதிர்ச்சியில்லாதவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். அறிவு முதிர்ச்சியுள்ளவர்கள் குணமாகப் பொறுமை காத்தால்தான், அடுத்த காட்சியில் அது பரோட்டா மாவு பிசைவதைப் பற்றிய வசனம் எனத் தெரிய வரும். ‘ங்ண்ணா, பச்சு மண்ணு என்னைப் போய் சந்தேகப்பட்டுப் போட்டீங்களே!’ என அவரது வெள்ளந்தித்தனத்தால் முதிர்ச்சியில்லாதவர்களைச் சங்கோஜப்படுத்தி விடுகிறார்.

இப்படியான குழந்தை, இரண்டாம் படத்தில், ‘சிவன் அடிச்சா உடுக்கை; நான் அடிச்சா படுக்கை’ என ஆவேசம் கொள்கிறார். காரணம், நாடகக்காதல். பெரும் பணக்காரியான மாங்கனி, குழந்தையைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றிவிடுகிறார். இடைவேளை.

ஓ.சி.க. கட்சியின் தலைவர், ‘அழகு முக்கியமில்லடா. மாட்டுக்கறி சாப்ட்டவங்க நாம. ஆம்பளையா இருந்தா போதும். காசுள்ளவளக் கட்டு, ஏன்னு கேட்டா எவனா இருந்தாலும் வெட்டு’ எனச் சொல்லி ஒரு கூட்டத்தை வளர்க்கிறார். அவரது வளர்ப்புத் தம்பிகளில் ஒருவரான வீரா, நாயகனை ஏமாற்றிய நாயகியைப் பணத்துக்காகக் காதலிப்பது போல் ஏமாற்றுகிறான். வீராவையும், ஓ.சி.க. (ஒற்றுமை சிங்கங்கள் கட்சி) தலைவர் இரும்புச்சங்கிலியையும், அவரது தம்பிகளையும் வெட்டுகிறார் குழந்தை. வெட்டிவிட்டு, ட்ரெய்லரில் வரும் கடைசி வசனமான, ‘இனிமே இப்படிச் செய்றவன் எவன்டா? அவனுக்கெல்லாம் நான் எமன்டா’ என்கிறார்.

சினிமா எனும் கலைக்கு நியாயம் கற்பிக்கும்படி ஒரே ஒரு சட்டகம் கூட படத்தில் இல்லை. ரஞ்சித் வசனம் பேசினால் திரை முழுவதும் ரஞ்சித்தின் முகம் மட்டுமே தெரிகிறது. எந்தக் கதாபாத்திரம் பேசினாலும் அப்படித்தான் ஆங்கிள் வைத்துள்ளனர். அதுவும் முழு முகத்தைக் காட்டாமல் நெற்றிக்கு மேல் ஃப்ரேம் இல்லை. இந்தக் கொடுமைக்கு அடாப்ட்டாகிய (adapt) பின், முதற்பாதியில் அவர்கள் போடும் மொக்கையைப் பொருத்துக் கொள்ள முடிகிறது. இரண்டாம் பாதியில், முதற்பாதியளவு மோசம் செய்யாமல் ஒளிப்பதிவில் கொஞ்சம் கவனம் செலுத்தியுள்ளனர்.

கதாநாயகியின் பெயர் அல்ஃபியா (Alfia). அல்பியா என தமிழில் எழுதியுள்ளனர். சுமார் 30 ஆண்டுகள் சினிமா அனுபவமுள்ளவரான ரஞ்சித், திரைப்பட இயக்கம் சார்ந்த எந்த ஒரு விஷயத்திலும் அக்கறை செலுத்தாமல், அறிவு முதிர்ச்சியைப் புறந்தள்ளிவிட்டு, ஜாலியாய்ப் படம் பண்ணியுள்ளார். ஒரே நோக்கம், ‘மண்ணுக்கு ஒன்னுன்னா உயிரைக் கொடுப்பேன்; பொண்ணுக்கு ஒன்னுன்னா உயிரையும் எடுப்பேன்’ என சாதிப் பெருமிதம் பேசிவிட்டு, வில்லனாக ஒரு கட்சியை அடையாளப்படுத்துகிறார். இவருக்கு முன்னத்தி ஏராக திரெளபதி படத்தின் மூலம் ஏற்கெனவே மோகன்ஜி போட்ட அதே பாதையில் பயணித்திருக்கிறார் ரஞ்சித். ஆனால் முனைமுழங்கிய திரைக்கதையால், முன்னத்தி ஏரைக் கூடப் பின்தொடராமல், தொடங்கிய இடத்திலேயே சிக்கிக் கொள்கிறது கவுண்டம்பாளையம். பாதி ஊருக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக வரும் ஆதிக்க சாதி நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் S.சுப்பிரமணியமும், தாய்மாமனாக நடித்திருக்கும் A.பழனிச்சாமியும்தான் படத்தின் தயாரிப்பாளர்கள். பெண்ணின் விருப்பமே முக்கியமென மனதை மாற்றிக் கொள்கிறார்கள். அடடே!

வன்முறையில் தொடங்கி, வன்முறையிலேயே படம் முடிகிறது. ஆணவக்கொலையைப் பெற்றோர்கள் செய்தால் அது வன்முறை இல்லை, ‘அது பெற்றோரின் அக்கறை’ என புது விளக்கம் அளித்துள்ள ரஞ்சித், இப்படத்தில் மூன்றாவது மனிதராகத் தோன்றி, அவரை ஏமாற்றிய பெண்ணிற்காக அரிவாளைத் தூக்கியுள்ளார். அதாவது நாடி நரம்பெல்லாம் வன்மமும் வன்முறையும் இருந்தால் மட்டுமே இப்படியொரு படத்தை எடுக்க இயலும். அந்த வன்முறையைச் செய்வது நாயகன் ரஞ்சித் என்றால், இயக்குநர் ரஞ்சித் அதை நீர்த்துப் போகச் செய்துவிடுகிறார். முதுகில் ஆழமான அரிவாள் வெட்டு வாங்கி நாயகன் சரிந்து விழுகிறார். அதில் ஆச்சரியம் என்னவென்றால், சண்டையில் கிழியாத சட்டையை அவர் போட்டுள்ளார். ரத்தக்கறையும் இல்லை. தயாரிப்பாளர்களுக்கு தக்காளி சட்னி செலவு கூட வைக்கக் கூடாதென்ற இயக்குநரின் நல்லெண்ணத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

‘என்னை வெட்டினா, நாளைக்கு உன்ன ஆணவக்கொலை பண்ண ஜாதிவெறியன்னு சொல்லுவாங்கடா’ என்கிறார் வீராவாக நடித்திருக்கும் அனிஷ். ரஞ்சித்திடம் குடிகொண்டிருக்கும் குழந்தை வெளிவந்துவிடுகிறது. “சாதி, சாதிங்கிற, உலகத்திலேயே ஒசந்த சாதி அம்மா தானடா!” என்கிறார். அறிவு முத்தியவர்களால்தான் இப்படிலாம் வாதம் புரியமுடியும். ஆக, அறிவில்லாதவர்களே, இந்தப் படம் சாதிப் பெருமிதத்தைப் பற்றிய படமெனத் தவறாக எண்ணி விஷமப் பிரச்சாரம் செய்யாதீர்கள். இந்தப் படம் உண்மையில் எதைப் பேசுகிறது என்றால்,

(அதைத் தெரிந்து கொள்ளும் முன், Statutory Warning: பலவீனமான இதயம் கொண்டவர்கள் மேலே படிப்பதைத் தவிர்க்கவும்.)

ஒரு மனக்குமுறலைப் பேசுகிறது; கலாச்சாரத்தைப் பேசுகிறது; உணவின் மீதான பக்தியைப் பேசுகிறது: மனதுக்குகந்த உணவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத யுகாந்திர வேதனையைப் பதிகிறது; அவ்வுணவின் மேன்மையைப் பேசுகிறது.

வில்லன், ‘மாட்டுக்கறி சாப்பிட்டவங்க வலு’ பற்றிச் சொல்லியவண்ணமிருக்க, நாயகனோ தன் மகிழ்ச்சியைச் சொல்லும்பொழுது, “அரிசிம்பருப்புல நெய் விட்டுக் குழைச்சு அடிச்ச மாதிரி இருக்குங்க!” என்கிறார். இங்கேதான், இந்தப் படம் சுட்டிக் காட்டும் தாத்பரியத்தைப் புரிந்து கொள்ள அறிவு முதிர்ச்சி தேவைப்படுகிறது. மாட்டுக்கறியை விட, அரிசிம்பருப்பில் தான் சுவை, மனம், திடம், வலு, தினவு, செருக்கு, அறிவு, முதிர்ச்சி, மருவாதி, மண்ணுப்பாசம், பெண்ணைப் பாதுகாக்கும் வீரம், மானம், ரோஷம், மகிழ்ச்சி, பெருமை அதிகமுள்ளது. அதனால்தான் படத்தில், குழந்தையால் வில்லன்களைப் பந்தாடமுடிகிறது. இதுவே, கவுண்டம்பாளையத்துப் படத்தின் மூலம், ரஞ்சித் இவ்வுலகிற்கு அறிவிக்கும் உன்னத செய்திங்க.!