Shadow

“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்

(Image Courtesy: https://detechter.com/)

கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமே முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும், காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றதா எனப் பார்ப்போம்.

பெற்றவர் பிள்ளையை வீதியில் விட்டெறிந்தால்
குற்றம் உடையோர் குழந்தைகளா? பெற்ற மக்கள்
சுற்றமும் அற்றுச் சுயமதிப்பும் விட்டனரே!
அர்ப்பணம் செய்தோம் அவர்க்கு.

என்ற வெண்பாவுடன் ஆரம்பிக்கும் படம்.

கர்ணன் தேர்த்தட்டில் சாய்ந்திருக்க, கிருஷ்ணன் அந்தணனாய் வந்து கையேந்தி நிற்கும் போது, இந்தக் குரலில், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைக் கேட்டு கண்ணில் நீர் வழியாதோர் குறைவாகவே இருக்க முடியும்.

படம் முழுக்க வசனங்கள் அப்படி விளையாடும்.

“வளர்த்த தந்தையே, வளர்த்த தாய் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தான் வந்தேன். வளர்த்த வேண்டாம். உண்மையைs சொல்லுங்கள். “

“தோல்வி மனிதனுக்கு வெறிமூட்டும்
வெறியில் மதி மாரும்
எதிரி அதுசமயம் இடம் கண்டு இடிப்பான்
வெறி மேலும் வீங்கும்
நெறி கெட்டு, அறம் விட்டு, தடம் மாறி படிகுழியில் விழுவான்
இல்லை, எதிரி விழ வைப்பான்!”

”புலிபோல்…. என்றால் புலியாகிவிட முடியுமா..”

“ப்போ… புல்லுருவி…. ஹாஹஹா புல்லுருவி.. “

“தருமத்திற்கென்று ஒரு மகன் இருந்தான் என்று நினைத்திருந்தேனே! கண்ணா, நீ வாழ்வாயா?“

வசனங்கள் மறக்கக் கூடியவையா என்ன ? கர்ணன் இறக்கும் போது கதறி அழுத உள்ளங்களும் உள்ளனவே!

கன்னடத்திலும், ‘தான வீர சூரன் கர்ணன்’ என்றால் தனி மதிப்புத்தான். எல்லாம் சரி. பாஞ்சாலி சபதத்தில் துகிலுரியும் பாடலைப் பாருங்கள்.

பெண்ணிவள் தூண்ட லெண்ணிப் பசுமையால் பிதற்றுகின்றாய்;
எண்ணிலா துரைக்க லுற்றாய்; இவளைநாம் வென்ற தாலே
நண்ணிடும் பாவ மென்றாய், நாணிலாய்! பொறையு மில்லாய்!
கண்ணிய நிலைமை யோராய்; நீதிநீ காண்ப துண்டோ? 85

மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கங்கீ ழடியார்க் கில்லை.
சீரிய மகளு மல்லள்;
ஐவரைக் கலந்த தேவி.
யாரடா, பணியாள்! வாராய்;
பாண்டவர் மார்பி லேந்தும்
சீரையுங் களைவாய்; தையல்
சேலையுங் களைவாய்’ என்றான்.

தன்னை வீரமகனாவும், மானமுள்ளவனாகவும் கருதிக் கொள்ளும் ‘தான சூர வீர கர்ணன்’ இப்படிச் சொல்வானா? அவனின் பெருமைக்கல்லவா அது இழுக்கு? பாரதி ஏன் இப்படி எழுதினார் என்ற அடிப்படையில் எழுந்த கேள்விகளூடே இன்னொரு கிளைக்கதை (வில்லி பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது) ஒன்று மற்றொரு கேள்வியையும் தூண்டியது.

அதாவது அமித்ர முனிவருக்கான பழத்தை அதன் மரத்தினின்று அருச்சுனன் துண்டித்துவிடுகிறான், பாஞ்சாலி கேட்டால் என்பதற்காக. அப்படி என்ன அந்தப் பழத்தில் பெருமை என்றால் அந்த நெல்லிக் கணி பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பழுக்கும். அமித்ர முனிவர் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே தன் தவத்தினின்று எழுந்து அப்பழத்தைப் புசித்து பின் மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விடுவார். ஆக, அருச்சுனன் பறித்த அந்தப் பழம் மீண்டும் மரத்தில் சென்று ஒட்டிக் கொள்ள வேண்டும் இல்லையேல், அமித்ர முனிவர் விழித்து பழம் இல்லை என்றால் பாண்டவர்களைச் சபித்துவிடுவார்.

ஆங்கே, துணைக்கு வருகிறான் கண்ணன். ‘ஐவரின் மனத்தினுடைய கருத்துகளை உண்மையாக உரைக்க அற்றது பொருந்தும்’ என்கிறான். எல்லோரும் தங்கள் கருத்துகளைச் சொல்கிறார்கள். கடைசியாகப் பாஞ்சாலி ‘ஐம்புலன்களைப் போல் ஐம்பொறிகளைப் போல் ஐந்து கணவர்கள் இருந்தும், ஆறாவதாய் ஒரு கணவன் இல்லையே என்று என் மனம் வருந்தும்!’ என்று சொல்லிவிடுகிறாள் (வில்லி பாரதத்தின் படி).

இதைச் சொற்பொழிவாளர்களில் சிலர் தங்களின் கற்பனை வளத்தால் அந்த ஆறாவது புருஷன் கர்ணன் என்று சொல்லி விட்டார்கள்.

‘அடிமைக்கு ஏன் மேலாடை?’ என்று பணியாளை அழைத்து பாஞ்சாலியின் மேலாடையைக் களைய பணித்தவனையா அவள் நினைத்திருப்பாள்?

இவ்விரு கேள்விகளும் மெதுவாக கர்ணனைப் பற்றி இதுவரைக்கும் அறிந்திருந்த பிம்பத்தை அசைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

இதுவரை நாம் கர்ணனின் குணங்களாகக் கண்டவை:

> கர்ணன் மாவீரன்;
> கர்ணன் பீஷ்மரால் வஞ்சிக்கப் பட்டு பத்து நாட்கள் போரிடாமல் தடுக்கப் பட்டான்;
> கர்ணன் தருமவான்;
> கர்ணன் கொடையாளி;
> கர்ணன் சூதன், ஆகையால் அவனுக்கு துரோணரால் கல்வி மறுக்கப் பட்டது;
> கர்ணனின் நட்பு மிக உயர்ந்தது (எடுக்கவோ கோர்க்கவோ?);
> கர்ணன் பொய்யுரைத்து பரசுராமரிடம் கல்வி பயின்றான், ஏனென்றால் அவனுக்கு உரிய கல்வி மறுக்கப் பட்டது தான் காரணம்.

கர்ணனின் இக்குணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். கடைசியில் நாம் கொண்ட கர்ண பிம்பம் அப்படியே இருக்கிறதா மாறுகிறதா என்பது உண்மையின் அடிப்படை கொண்டு பார்ப்போம்.

தொடரும்..

– ஐயப்பன் கிருஷ்ணன்

(அடுத்த பகுதி: கர்ணன் துரியோதனன் நட்பு)