ஒரு சூஃபிக்கும், சுஜாதா எனும் வாய் பேசா முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது.
“சூஃபிகள், ஆடவும் பாடவும் தெரிந்த துறவிகள்” என்பார் சுஜாதாவின் பாட்டி. சூஃபியை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராகப் பார்ப்பார் சுஜாதாவின் அப்பா.
உண்மையில், சூஃபிகள் மதங்களைக் கடந்தவர்கள். சூஃபிகளை, இறைச் சிந்தனையில் வாழும் ஞானிகள் என்று சொல்லலாம். பொதுவாகத் துறவு மனநிலை கொண்டவர்களாக இருப்பார்களே அன்றி, கட்டாயமாகத் துறவியாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. மதத்தை மீறிக் கலைகளின் வாயிலாக இறைவனின் ஏகத்துவத்தை விசாலப்படுத்துவதே சூஃபிகளின் தன்மை. கலையின் வழியே எதிலும் கடவுளைக் காணும் எவருமே சூஃபிகள்தான்.
படம் மிகச் சிறந்த பேரானுபவத்தை அளிக்கிறது. வீல் சேரில் அமர்ந்திருக்கும் அபூப் இசைக்க, சுஜாதா நடனமாடும் காட்சி மிக அற்புதமாக உள்ளது. அக்காட்சியைப் பின்னுக்குத் தள்ளும் வகையில், சூஃபியின் கட்டை விரல் நடனம் அசத்துகிறது. இசையும், ஒளிப்பதிவும், நீரோடையும், பள்ளிவாசலும், சுஜாதாவின் வீடும், நடிகர்களின் நடிப்பும், முல்லா பஜாரும் எனப் படத்தில் ரசிக்க ஏராளம் உள்ளன. ‘அடுத்து அடுத்து என்ன?’ என்று சீட்டு நுனியில் அமர்ந்து விறுவிறுப்பை மட்டுமே எதிர்பார்ப்பவர்களுக்கான படமில்லை. படத்தின் டைட்டில் கார்டில் காண்பிக்கப்படும் நீரோடையைப் போலவே படம் பயணிக்கிறது. அதில் விழும் சருகுகளாய்ப் பார்வையாளர்களை நகர்த்திக் கொண்டு போகிறார் இயக்குநர் நாராணிபுழா ஷாநவாஸ்.
‘இறைவனே சிறந்தவன்’ எனும் அரபி மொழிப் பிரார்த்தனை அழைப்புப் பாடலிற்கு சுஜாதாவால் அபிநயிக்க முடிகிறது. கலை மனம், சுஜாதாவை சூஃபியின் மீது காதல் வயப்பட வைக்கிறது. சூஃபியாக நடித்துள்ள தேவ் மோகன் வசீகரிக்கிறார். அந்தப் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாய் உள்ளார். சுஜாதாவாக நடித்துள்ள அதிதி ராவ் ஹைதாரிக்கு, இப்படம் அவரது திரை வாழ்க்கையில் என்றும் நினைவு கூரத்தக்க அளவு சிறப்பான திரைப்படமாக அமைந்துள்ளது. அனு மூதேதத்தின் ஒளிப்பதிவில், சைக்கிள் ஓட்டிக் கொண்டு அதிதி ராவ் வரும் ஃப்ரேம்கள் அனைத்தும் அதிதியின் பேரழகிற்குச் சாட்சிகளாக உள்ளன. பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இழந்தோமே என்ற மனக்குறையைப் படத்தின் ஒளிப்பதிவும், M. ஜெயசந்திரனின் இசையும் கொடுக்கிறது.
திரைப்படம் என்ற மல்ட்டி மீடியத்தை மிகக் கச்சிதமாகத் திரைப்படக் குழு பயன்படுத்தியிருந்தாலும், சுஜாதா பத்தாண்டுகளாகச் சுமந்து வந்த காதலின் கனத்தை எங்கேயும் உணர முடியவில்லை. சூஃபிகளின் இசையைத் தொட்ட படம், அவர்கள் சாமானியர்களில் இருந்து எந்தப் புள்ளியில் வேறுபட்டு, உயரிய ஸ்தானத்தில் உள்ளனர் என்பதில் அக்கறை காட்டவில்லை. குறைந்தபட்சம், ஒரு சூஃபி இளைஞனைச் சுஜாதாவின் எந்த மேன்மையான குணம் ஈர்த்தது என்றளவிலாவது ஒரு காட்சி இருந்திருக்கலாம். அழகான பெண் மீது ஓர் இளைஞனுக்குக் காதல் வருகிறது என்ற வழக்கமான க்ளிஷே கதையில், நாயகனை என்னத்துக்கு சூஃபியாக்கவேண்டும் என்ற நிறைவின்மையைப் படமளிக்கிறது. சுஜாதாவையோ, அல்லது சூஃபித்துவத்தையோ இன்னும் நெருக்கமாக உணர முடிந்திருந்தால், 2020 இன் மிகச் சிறந்த படமாக அமைந்திருக்கும்.