Shadow

ஃபர்ஸ்ட் மேன் விமர்சனம்

First-man-movie-review

“இது, மனிதனுக்கு ஒரு சின்ன அடி எடுத்து வைத்தல், மனித குலத்திற்கோ இது மிகப் பெரும் நகர்வு” என்ற வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை நிலவில் கால் வைக்கும்பொழுது சொன்னார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங். மனித குலம், பூமியில் நீடிக்கும் நாள் வரை அவரது பெயர் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கும். அவரது சரிதத்தை, 2005 ஆம் ஆண்டு, ‘ஃபர்ஸ்ட் மேன்: தி லைஃப் ஆஃப் நீல் A.ஆர்ம்ஸ்ட்ராங்’ எனும் நூலாகக் கொண்டு வந்தார் ஜேம்ஸ் R.ஹன்ஸென். அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘லா லா லேண்ட்’ படத்தை இயக்கிய டேமியன் சஸெல், “ஃபர்ஸ்ட் மேன்” படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில், அமெரிக்கக் கொடியை நடுவது போல் காட்சியை வைக்கவில்லை இயக்குநர் டேமியன். அதனால் பலத்த சர்ச்சைகள் எழுந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட, “மிகவும் துரதிர்ஷ்டவசமானது இது. அமெரிக்காவின் சாதனையைச் சொல்வதைக் கூடப் படக்குழுவினர் சங்கடமாகக் கருதுகின்றனர். மிகவும் மோசமான செயல் இது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கைப் பற்றியும், நிலவில் அவர் காலடி எடுத்து வச்சது பற்றியும் நினைத்தாலே, அமெரிக்கக் கொடிதான் கண் நினைவிற்கு வரும். இந்த ஒரு காரணத்திற்காகவே நான் படத்தைப் பார்க்கப் போவதில்லை” எனக் காட்டமுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

டேமியன் சஸெல் இந்தச் சலசலப்புகளுக்கு அலட்டிக் கொள்ளாமல், “படத்தில் அமெரிக்கக் கொடி வருகிறது. ஆனால், அது நடப்படும் காட்சிதான் இல்லை. எனது குவிமையம், பார்வையாளர்களுக்கு அமெரிக்காவின் நிலவுப்பயணத்தின் சொல்லப்படாத விஷயங்களைக் காண்பிப்பதே!” எனத் தெளிவாகப் பதிலுரைத்துள்ளார். தொழில்நுட்ப விஷயங்களை, இயக்குநர் தொட்டிருந்தாலும், படம் அமெரிக்காவின் விண்வெளி சாகசங்களைப் பற்றிச் சிலாகிக்கவில்லை. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் எனும் தனி மனிதனின் மனோ நிலையையும், அவரது குடும்பத்தினரின் மனநிலையையுமே படம் பிரதிபலிக்கிறது. 1961 முதல் 1969 வரை, நிலவில் நீல் காலடி பதிக்க நாசா எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களைப் பற்றிப் படத்தில் காட்டுகின்றனர்.

பறப்பதில் பெரும் ஆர்வமுள்ள நீல் ஆர்ம்ஸ்ட்ராங், 1962 இல், இரண்டரை வயதாகும் தன் பிரியத்துக்குரிய மகள் கரென் ஆன்னை (Karen Anne) இழக்கிறார். அது அவரைத் தீவிரமாகச் சோகத்தில் ஆழ்த்துகிறது. அந்தச் சோகத்தினோடு தன்னை அனைத்துச் சோதனைகளுக்கும் உட்படுத்திக் கொண்டு அவர் நிலவில் தன் மகளின் நினைவோடு நிற்கும் வரை, நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் தனிப்பட்ட மனப்போராட்டத்தைப் படம் பதிகிறது. ரையன் காஸ்லிங், நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பாத்திரத்திற்கு வேறு முகம் கொடுத்துள்ளார் என்றே சொல்லவேண்டும். ரையனின் தீர்க்கமான அமைதி ததும்பும் முகம், மனதைக் கனக்க வைப்பதாக உள்ளது. பிளேட் ரன்னர் போல் அவரது இந்தப் படமும் விருதுகளைக் குவிக்கும்.

ரஷ்யாவை முந்திக் கொள்ளவேண்டும் என்ற வேகத்தில் நாசா விஞ்ஞானிகள் ஒரு பக்கமும், ‘நான் பசியில் வாடுகிறேன்’ என்ற பதாகைகளோடு போராடும் சாமானிய மக்கள் ஒரு பக்கமும் போராடுகின்றனர். அக்காட்சி, அறம் படத்தில் வரும் காட்சியை நினைவுப்படுத்தியது. ‘ஸ்பேஸ் ரிசர்ச் என்ற பெயரில் இன்னும் எத்தனை பேர் காவு வாங்குவீர்கள்?’ என்று அமெரிக்க அரசுக்கு எதிராகவும் மக்கள் ஒன்று திரள்கிறார்கள். அதே சமயம் லூனார் வாகனத்தைத் தரையிறக்கும் சோதனையில், மயிரிழையில் உயிர் தப்புகிறார் ஆர்ம்ஸ்ட்ராங். அவரது மனைவிக்குப் பதற்றம் உண்டாகிறது. ஒரு பெண் குழந்தையை இழந்த அந்தக் குடும்பம், நீல் ஆம்ஸ்ட்ராங்கையும் இழந்தால் என்னாகும்? “நீ உன் மகனிடம் பேசிப் புரிய வச்சுட்டுப் போ” என அழத் தொடங்குகிறார். நிலவில் காலடி எடுத்து வைத்த பின், ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சோதனைக்காக மூன்று வாரம் தனிமைப்படுத்தப்படுகிறார். படத்தின் க்ளைமேக்ஸில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவியாக நடித்திருக்கும் க்ளெயர் ஃபோய், கண்ணாடி சுவரின் மறுபுறம் இருக்கும் ரையன் காஸ்லிங்கைச் சந்திக்கும் அழகான காட்சியோடு படம் முடிகிறது.

படம் பார்த்தவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங்கை மட்டுமில்லாமல், அவரது மகள் கரென் ஆன்னையும் இனி மறக்கமாட்டார்கள். விஞ்ஞான சாதனை என இதுகாறும் பார்க்கப்பட்ட ஒரு விஷயத்தைத் தனி மனிதனின் அகப்பயணமாகக் காட்டி அசத்தியுள்ளார் டேமியன் சஸெல்.