‘சாதியும் மதமும் மனித குலத்திற்கு விரோதமானது’ என்ற வாசகத்துடன் படம் தொடங்குகிறது. இப்படத்தில், சாதி எப்படி மனித குலத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறதெனப் பரியேறும் பெருமாளின் வாழ்க்கையில் இருந்து சித்தரிக்கப்படுகிறது.
கருப்புத் திரையில் வெள்ளையெழுத்துகளாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் போடும்பொழுதே சந்தோஷ் நாராயணன் ஒலிக்கத் தொடங்கிவிடுகிறார். படம் தொடங்கியவுடனே, “கருப்பி, அடி கருப்பி!” என்ற பாடலின் மூலமாக ஒரு வாழ்வியலுக்குத் தயார் செய்துவிடுகிறார். படத்தின் நாயகன் அவர்தான்! படத்தின் இசையும், ட்ரோன் மூலம் பறவைக் கோணத்தில் காட்டப்படும் நிலப்பரப்பும், படத்தோடு பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடுகிறது.
சட்டக்கல்லூரி மாணவனாக வரும் யோகி பாவுவின் ஒன்லைன் கவுன்ட்டர்கள் அட்டகாசம். நகைச்சுவைக்காக என்றில்லாமல் ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் வந்து அசத்துகிறார். பரியேறும் பெருமாளாகக் கதிர் வாழ்ந்துள்ளார். அவர் முன் மூன்று வாய்ப்புகள் நிர்பந்திக்கப்படுகிறது. ஒன்று, கல்லூரியை விட்டு அவராக நிற்பது, இரண்டு, தற்கொலை செய்து கொள்வது; இவ்விரண்டில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்காவிட்டால், மூன்றாவதாகக் கொலை செய்யப்படுவாய் என்ற அச்சுறுத்தல். இன்னச் சாதியில் பிறந்ததால் மட்டுமே, அவமானங்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் கதிர், இவற்றையெல்லாம் எப்படிச் சமாளிக்கிறான் என்பதே படத்தின் முடிவு.
கருப்பியை ஏன் தண்டவாளத்தில் கட்டி வைக்கின்றனர்; பரியன் ஏன் வக்கீலுக்குப் படிக்கிறான்; வகுப்புத் தோழியின் வீட்டு விசேஷத்துக்குச் செல்லும் பரியன் ஏன் அவமானப்படுத்தப்படுகிறான்; பேருந்திலிருந்து இளைஞன் தவறி விழுந்தும், ஆற்றில் மாணவன் மூழ்கியும் ஏன் இறக்கின்றனர் என ரஞ்சித் பேச விழையும் அரசியலை, இயக்குநர் மாரி செல்வராஜ் தன் படைப்பில் அழகாகக் கொண்டு வந்துள்ளார். கல்வி ஒருவரை எப்படி உயர்த்தும் என்று சட்டக்கல்லூரியின் பிரின்சிபலாக வரும் ‘பூ’ ராம், தன் அனுபவத்தின் வாயிலாகச் சொல்லும் காட்சி மிக மிக வலுவான தாக்கத்தை இளம் மனங்களில் ஏற்படுத்தும்.
ஆணவக்கொலையைக் குலச்சாமிக்குச் செய்யும் சடங்காகக் கருதிக் கொலை செய்யும் பெரியவர் பாத்திரமொன்று மிகவும் அச்சுறுத்துகிறது. மனித குலத்திற்கு மனிதர்களே எப்படி விரோதம் ஆகின்றனர் எனப் படம் மிக அழுத்தமாகப் பதிகிறது. பெரியவர் பாத்திரத்தில் கராத்தே வெங்கடேசன் குலை நடுங்க வைத்துள்ளார். இதற்கிடையில், ஆனந்திக்கோ தேவதையாகும் கனவிலுள்ள அப்பாவியான பாத்திரம். தன்னைச் சுற்றி நிலவும் யதார்த்தத்தை உள்வாங்காமல், கற்பனை உலகத்தில் வாழும் ஜோ பாத்திரத்தில் ஜொலிக்கிறார். காதலென்ற வார்த்தையை உபயோகிக்காமல் சேர்ந்து வாழ ஆசை மட்டுமே எனக் கூறும் ஆனந்தி, அது காதலில்லை என்ற தெளிவுடன் கதிர், அது காதலாகிவிடும் என்ற மூர்க்கத்தனமான பயத்தில் தவிக்கும் லிஜீஷ் ஆகியோர் படத்தின் இரண்டாம் பாதியைச் செலுத்துகின்றனர்.
ஸ்திரீபார்ட் வேடமிடும் நாயகனின் அப்பாவை லிஜீஷ் அவமானப்படுத்தும் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, எல்லாத் தருணத்தையும் மிகக் கச்சிதமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. சோகமான முடிவோ, அழுவாச்சியோ இல்லை. புரையோடியும், கறை படிந்துமுள்ள சமூகம், தனது கோரக்கசடுகளை நீக்கவேண்டியதன் அவசியம் பற்றி வலுவாகப் பேசியுள்ளது படம்.