32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“பல முதல் விஷயங்கள் இருக்கு” – இயக்குநர் வெற்றிமாறன் | Bad Girl

Dinesh R சேலம் Published: 26/01/2025 4 நிமிட வாசிப்பு Updated: 28/01/2025 இது புதிது
எழுத்து அளவு:

அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா, 76 ஆவது குடியரசு தினத்தன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. Bad Girl, பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் & அனுராக் காஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தொகுப்பாளரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெற்றிமாறன், “கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில், எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் காஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளும் போதே நாங்கள் இருவரும் சேர்ந்து பண்ணும் ஐடியா இருந்தது. வேறு சில காரணங்களுக்காகத் தள்ளிப் போனது. ஆனால் விடுதலை 2 படப்பிடிப்பின் போது, இந்தப் படத்தின் முதல் பாதியைப் பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன் என்று கூறினார். ஆக அனுராக் காஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான். மேலும் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தின் இசைக்காக, ‘அமித் திருவேதியை நானே தொடர்பு கொண்டு பேசுகிறேன்’ என்று கூறி, அமித் திரிவேதியை இந்தப் படத்தின் இசைக்கு கொண்டு வந்தார். ஆக அமித் திரிவேதிக்கும் இதுதான் முதல் படம். மேலும் ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதில் முக்கிய பிரிவான Tiger Competetion பிரிவில், முதல் பெண் இயக்குநரான வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம்பெற்று இருப்பது தனிச்சிறப்பு . இப்படி பல ‘முதல்’ விஷயங்கள் இருப்பதால் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்த நிகழ்வைப் பெரிதாக நடத்துகிறது” என்று கூறினார்.

மூத்த நடிகை சாந்தி பிரியா, “ ‘செண்பகமே செண்பகமே’ பாடல் மூலம் இன்னும் என்னை மக்கள் ஞாபகம் வைத்துக் கொண்டுள்ளதற்கு நன்றி. இப்பொழுது ‘Bad Girl’ படத்தின் மூலம் மீண்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். நான் மீண்டும் சினிமாவில் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில், வர்ஷாவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறியதும், நானும் உடனே சரி என்று ஒத்துக் கொண்டேன். ஆனால் படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும், ஒரே ஒரு ஃபோட்டோ மட்டும் அனுப்ப முடியுமா என்று கூறியதும் ஒரு நிமிடம் திடுக்கிட்டேன். பின் சன்லைட்டில் ஒரே ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்து அனுப்பினேன். பின் இயக்குநர் வர்ஷா பரத் இந்தக் கதையைச் சொல்லி முடித்த பின், நான் அவரிடம், ‘இந்தப் படம் ரிலீஸ் ஆனவுடன் உங்களுக்குச் சிகப்புக் கம்பளம் காத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறினேன். ஏனெனில் இந்தப் படம், அப்படி ஒரு கதையைத்தான் அழுத்தமாகக் கூறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தக் கதை, எனக்கும் எனது பெற்றோருக்கும் உள்ள உறவு, மற்றும் எனக்கும் எனது மகனுக்கும் உள்ள உறவு என்று பல நிகழ்வுகளை சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. படம் வெளிவந்தவுடன், பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையிலும் இந்தக் கதை கனெக்ட் பண்ணக்கூடியதாகவே இருக்கும்” என்று கூறினார்.

படத்தின் கதை நாயகி அஞ்சலி சிவராமன், “இயக்குநர் இந்தக் கதையை எனக்குச் சொல்லும் பொழுது, ஒரு உண்மைத்தன்மை இருப்பதை உணர்ந்தேன். மேலும் இந்தக் கதையில் வரும் ரம்யா கதாபாத்திரம், எனது ரியல் லைஃப் கதாபாத்திரத்தைப் பிரதிபலிப்பது போல் இருந்தது. முதல்முறையாக ‘ஒரு முழுக் கதையும் என்னை வைத்து நகர்கிறது’ எனும்போது எனக்கு சிறிது தயக்கமாக இருந்தது. ஆனால் வெற்றிமாறன் சார் மற்றும் வர்ஷா பரத் என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது. என் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி” என்று கூறினார்.

விழாவின் நிறைவாக இயக்குநர் வெற்றிமாறன், “இந்தக் கதை எனக்கு முன்பே தெரிந்தாலும் கூட, கடைசியாக தான் இந்தப் படத்தில் இணைந்தோம். இந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு செல்லும் பொழுது, முதல்முறையாக சாந்தி பிரியா மேடமைச் சந்தித்தேன். அப்பொழுது அவர், ‘சார், இந்த படம் எல்லா ஃபெஸ்டிவலிலும் ஹிட் அடிக்கும் சார். நேஷனல் அவார்டு கூடக் கிடைக்கும் சார்’ என்று கூறினார். அப்பொழுது நான் வர்ஷாவிடம், ‘இந்தப் படத்தை உன்ன விட, உன் படத்துல நடிக்கிறவங்க ரொம்ப அதிகமா நம்புறாங்க. அதனால இந்தப் படத்தை நல்லா எடுத்துடுமா?’ என்று கூறினேன். வர்ஷாவும் எனக்குக் கொடுத்த கமிட்மென்டை விட 100% அதிகமாகவே கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படம் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனிய பெருமைப்பட வைக்கும்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.