
அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா, 76 ஆவது குடியரசு தினத்தன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. Bad Girl, பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.
டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் & அனுராக் காஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தொகுப்பாளரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இயக்குநர் மிஷ்கின், “இந்தப் படத்தின் ட்ரைலர் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வர்ஷா பரத் எப்படிப்பட்ட ஆளுமை என்று பார்க்கும் பொழுது, வெற்றிமாறன் போன்ற மிகப் பெரிய ஆளுமையிடம் ஏதோ இரண்டு வருடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து ஒரு படம் பண்ணினோம் என்று இல்லாமல், முழுக்க முழுக்க சினிமாவை உயிராக நேசித்து, அதை ஒவ்வொரு இடத்திலும் கற்றுத் தெரிந்து, தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் ஆளுமையாகத்தான் இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்க்கும் பொழுது வர்ஷா பரத் தெரிகிறார். பொதுவாக க்ளோஸ்-அப் ஷாட்ஸ் எடுப்பது மிகவும் கடினம். ஆனால் இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் பொழுது, க்ளோஸ்-அப் ஷாட்ஸ் நிறைய உள்ளது. ஹீரோயின் அஞ்சலி சிவராமனின் கண் அழகாக உள்ளது. இந்த மாதிரியான படங்கள் தான் சினிமாவிற்கு வரவேண்டும். ஏனெனில் Bad Girl என்ற பெண் சார்ந்த உளவியல் படத்தை, ஒரு ஆண் இயக்குனரால் எடுக்க முடியாது. பெண்ணிய இயக்குனரால் மட்டுமே எடுக்க முடியும். மேலும் இந்த மாதிரியான கதையை எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
டாப்சி, “15 வருடத்தில், வெற்றிமாறன் சார் இந்தப் படத்திற்கு தான் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். நான் எப்பொழுதுமே நினைப்பதுண்டு, ஏன் எப்பொழுதுமே ஆண்களைப் பற்றிய படங்களே வருகிறது? ஏன் பெண்களைப் பற்றிய படம் பெரிதாக வரவில்லை என்று யோசிப்பேன். ஆனால் இந்த படம் பெண்களைப் பற்றிப் பேசும் படமாக மட்டும் இல்லாமல், படத்தின் இயக்குநரே பெண்ணாக இருப்பது தனிச்சிறப்பு” என்று கூறினார்.
அனுராக் காஷ்யப், “விடுதலை படப்பிடிப்பின் போதுதான் வெற்றிமாறன் இந்தப் படத்தின் கதையைப் பற்றிக் கூறினார். படத்தின் முதல் பாதியைப் பார்த்து, நான் பிரமித்துப் போயிட்டேன். பொதுவாக ஏதாவது ஒரு படத்தின் கதையைப் பார்க்கும் பொழுது, இதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எனக்குத் தோன்றும். ஆனால் இந்தப் படத்தை பார்க்கும் பொழுது இயக்குநர் வர்ஷா பரத்தால் மட்டுமே இப்படி எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. மேலும் பெண்கள் உலகம் எப்படிப்பட்டது என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டது போல் இருந்தது” என்று கூறினார்.
படத்தின் இயக்குநர் வர்ஷா பரத், “பொதுவாக வெற்றிமாறன் சாரிடம், நாங்கள் ஏதாவது ஒரு ஐடியாவைச் சொல்லிக் கொண்டே இருப்போம். அதைக் கேட்டு, அவர், ‘இந்த கதை தேறும், தேறுது! படமாக வரும், வராது!’ என்று ஃபீட்பேக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையைப் பற்றிக் கூறும் பொழுது, இது ஒரு படமாக வரும் என்று கூறினார். இப்படித்தான் Bad Girl படத்தின் கதை உருவானது.
நம் தமிழ் சினிமாவில் பெண் என்றால் தாய், கடவுள், தேவதை இப்படி பல விதமாகக் காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்ன நினைக்கிறாள், அவளின் உண்மையான உணர்வு என்ன என்பதைச் சொல்லக்கூடிய கதை தான் இந்த Bad Girl. பெண்களைப் புனிதர்களாக பார்க்காதீர்கள், மனிதர்களாகப் பாருங்கள் என்று தான் இந்தப் படம் கூறுகிறது” என்று கூறினார்.