Shadow

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

Marainthirunhthu-Paarkkum-Marmam-Enna-movie-review

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்ற தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாட்டு, ஒரு அழகான காதல் பாடல். அந்தப் பாடலின் தொடக்கத்தைத் தலைப்பாக வைத்திருக்கும் இப்படமோ, ‘செயின் ஸ்னாட்சிங்’ பற்றிய படம். சுலபமாய் உருக்கிவிடக்கூடிய தங்கம் தான், மறைந்திருந்து பெண்களின் கழுத்தை மர்ம கும்பல் நோட்டமிடக் காரணம்.

பெண்களின் செயினை அறுப்பது வெறும் கொள்ளைக் குற்றம் மட்டுமில்லை, அது அட்டெம்ப்டட் மர்டரில் வரும் என்பதைப் படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. நகை அணிந்து கொண்டு, இரவில் ஒரு பெண் தனியாக, என்று நடக்கிறாளோ அன்று தான் உண்மையாகச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் எனக் காந்தி சொன்னதை மாற்றி, என்று ஒரு பெண் பகலில் தைரியமாக நகையணிந்து நடக்க ஆரம்பிக்கிறளோ, அன்று தான் சுதந்திரம் எனப் படத்தின் இறுதியில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளார் இயக்குநர்.

பெண்களின் தங்கச்சங்கிலியை அறுக்கும் கும்பலிடம் இருந்து சங்கிலியைப் பறிக்கிறான் ஐயப்பன். அவனது செயல்வேகத்தை உபயோகித்துக் கொள்ள நினைக்கிறது சங்கிலி பறிக்கும் குழு. யாரிந்த ஐயப்பன், ஏன் அந்தக் குழுவில் இணைந்தான், இணைந்து என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் சிலரது மிகக் கேவலமான எண்ணத்தால், தங்கள் வாழ்நாள் முதலீட்டைப் பறி கொடுப்பதோடு, சில சமயம் கொடூரமாகத் தங்கள் உயிரையும் இழக்கின்றனர் பெண்கள். அப்படித் தனது உயிரைக் கழுத்தெலும்பு உடைப்பட்டு இழக்கிறாள் பாரதி. அந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் திலீப் சக்கரவர்த்தி, ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க ஒரு வியூகம் அமைக்கிறார். அதாவது எய்தவன் யாரெனக் கண்டுபிடித்து கைது செய்துவிட்டு, அம்புகளை என்கவுன்ட்டர் செய்யும் வழக்கமான போலீஸ் வியூகம்.

முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்று விடுகிறார் இயக்குநர் ராகேஷ். அதனாலேயே இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான கால அளவு கொண்ட படமாக வயிற்றில் பாலை வார்க்கிறது. பக்காவான டீட்டெயிலிங்கோடு படம் தொடங்குகிறது. காவலராக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, பெயர் போடும் பொழுது வரும் காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அசத்தியுள்ளார்.

மகனுக்காக அழகான மருமகளைத் தேடும் கதாபாத்திரத்தில் மீண்டும் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் க்ளிஷேவாக இருந்தாலும் கலகலப்பாக இருப்பதால் குறையொன்றும் இல்லை. அஞ்சனா ப்ரேமைப் பார்த்ததுமே, தன் மகனைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்கிறார் சரண்யா. அஞ்சனா ப்ரேம் தான் படத்தின் உண்மையான நாயகி. என்றாலும், படத்தின் தொடக்கத்தில் இருந்தே குலுங்கிக் குலுங்கி ஓடி வரும் ஐஸ்வர்யா தத்தாவைத்தான் நாயகி என நம்பவேண்டியுள்ளது.

ஜப்பான் எனும் ஐயப்பனாகத் துருவா நடித்துள்ளார். ஹீரோயிசம் ஏதும் இல்லாமல் கதையின் நாயகனாக வந்தாலும், படத்தின் முடிவில் வழக்கமான தமிழ் சினிமாவாக அவரை மாற்றாமல் விட்டிருந்திருக்கலாம் இயக்குநர். இன்ஸ்பெக்டராக நடித்துள்ள ஜே.டி.சக்கரவர்த்தி, அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். ராம்ஸ் எனும் ராமசந்திரன், அருள்தாஸ், மைம் கோபி, வளவன், ராதா ரவி எனப் படத்தில் நிறைய வில்லன்கள்.

இரவுக் காட்சிகளையும் மிகப் பளீச்சென மிளிர விட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா. இயக்குநர் ராகேஷ், தன் முதற்படத்திலேயே மர்மத்தைச் சுவாரசியமாக அவிழ்த்துள்ளது சிறப்பு.