Shadow

மற்றபடி மனிதர்கள் – வெ.த. புகழேந்தி

otherwise-humans

அன்ன சத்திரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்பதுதான் இந்த நாவலின் அடிநாதம். எத்தனை பேர் இந்த நாவலை படித்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இந்தப் புத்தகம் கிடைத்ததே என் கிராமத்து ஊரிலுள்ள அந்தக் குட்டி நூலகத்தின் மூலமாய்த்தான். அங்கே ஒரு நாள் க்ரைம் கதைகளைத் தேடித் தேடிக் களைத்துப் போய், விதியே என்று நொந்த படியே கையில் கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதுதான் இந்த “மற்றபடி மனிதர்கள்”.

“வெ.த.புகழேந்தி” என்பவரால் எழுதப் பட்ட ஒரு சமூக நாவல் இது. எனக்குத் தெரிந்து நான் படித்த முதல் சமூக நாவலும் இதுதான். என்ன காரணத்தினாலோ அந்தக் கதை என்னை வெகுவாக ஆட்கொண்டு விட்டது.

1981 இல் மீனாட்சி புரம் எனும் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிற்கு மாறியதைப் பிண்ணணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. இந்தக் கதையில் இது அஹமதுபுரமாக பெயர் மாற்றம் அடைந்திருக்கிறது.

இந்து – முஸ்லீம் கலவரத்தால் ஒரு ஊரே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

கலவரத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலாக்கப் பட்ட ஒரு ஊரில், தனது தோல் தொழிற்சாலையை மூடிவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான் ஒரு இஸ்லாமிய இளைஞன். அவன் மீது ஒரு கல் (வெங்காயம்) எறியப்படுகிறது. அதை எறிந்தது ஜவுளிக்கடை முதலியாரின் மகள் இந்து. மூன்று நாட்களிற்கு முன்னர்தான் அந்த இளைஞனின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் அந்த ஜவுளிக்கடை முழுதாய் எரிக்கப்பட்டிருந்தது. “நாளை இரவு உங்கள் தொழிற்சாலையை அழிக்கத் திட்டம் போட்டிருக்கிறார்கள்” என்ற எச்சரிக்கையைத் தாங்கிய கடிதத்துடன் அந்த வெங்காயம் வந்து விழுந்திருக்கும். இப்படித்தான் ஆரம்பிக்கிறது கதையும். அதைத் தொடர்ந்து தனது தொழிற்சாலையை முஹம்மது எனும் அந்த இளைஞன் எப்படி காத்துக் கொள்கிறான் என்பதையும், அவன் மனதில் இந்துவைப் பற்றிய ஒரு மரியாதை கலந்த காதல் எழுவதையும் அதே வேகத்துடன் அடுத்த சில அத்தியாயங்கள் நம்மை இழுத்துக் கொண்டு போகின்றன.

சரி வழக்கம் போல இரண்டு வேறு வேறு மதத்தினர்க்கு இடையில் நடக்கும் காதல் கதைதான் என்று தொடர்ந்து படிக்க ஆரம்பித்த எனக்கு அடி மேல் அடி.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் வசிக்கும் ஊரிலிருந்து சற்றுத் தள்ளியுள்ள காலணி எனும் இடத்தில் ஒரு கூட்டம் நடை பெறுகிறது. அது சாம்பசிவம் எனும் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் முன்னிலையில், ஒட்டு மொத்தமாக அந்தக் காலணி மக்கள் எல்லோருமே முஸ்லிமாக மாற வேண்டும் என்று ஒரு முடிவெடுக்கிறது. அதை சாமிநாதன் எனும் ஒரு சாதாரண மெக்கானிக் எதிர்க்கிறான். காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு சமுதாயத்தின் கோபம், அதிலிருந்து மீள மத மாற்றமே அதற்குச் சரியான வழி என்று முடிவெடுக்க, அதை ஒரு தெளிவான கண்ணோட்டத்தோடு எதிர்க்கும் ஒரு கோபக்கார இளைஞனாக அறிமுகமாகும் சாமிநாதன் என்ற இளைஞன் தான் இந்தக் கதையின் நாயகன்.

இந்தக் கலவரத்தை அடக்க புதிதாய் வரும் உயர் காவல் அதிகாரியாக ஜலீல் என்பவரும், அவர்க்கு உதவி காவல் அதிகாரியாக வரும் அலெக்ஸாண்டர் என்பவரும் இந்த நாவலின் குறிப்பிடத்தக்க இரண்டு கதாபாத்திரங்கள். இதைத் தவிர ஜவுளிக்கடை முதலியார், முஹம்மதுவின் வாப்பா இவர்களைச் சுற்றி கதை நகருகிறது.

ஏற்கெனவே சில கதை நாயகிகளைப் பார்த்துப் பார்த்து வெறுப்பாகிப் போயிருந்த எனக்கு இக்கதையின் நாயகி இந்து ஒரு பெரிய சந்தோஷத்தைத் தந்தாள். சுயமாய்ச் சிந்திக்கும் திறனும், நல்லது என்று தனக்குப் பட்டதை தயங்காமல் செய்யும் பாரதி கண்ட புதுமைப் பெண் போல அமைந்துள்ள அவளது கேரக்ட்ரைசேஷன் என்னை மிகவும் கவர்ந்தது.

Matrapadi-manithargalகதையின் ஒரு பகுதியில், மேற்கு வங்கப் பிரிவின் போது ஏற்படும் கலவரத்தில், இந்துக்களால் துரத்தப்படும் ஒரு முஸ்லீம் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தனது இந்து நண்பனது வீட்டில் அடைக்கலம் ஆகிறார். வீட்டிற்கு வெளியே அவரைத் துரத்திய மத வெறியர்கள், அவரை வெளியே விடும் படி கூச்சலிடுகிறார்கள். அப்போது தனது நண்பருக்கு அடைக்கலம் தந்த அந்த இந்து வெளியே வந்து பகவத் கீதையை அவர்கள் முன்னே வைத்து, “நீங்கள் எல்லாம் உண்மையான ஹிந்துக்கள். அதனால்தானே அந்த முஸ்லிமைக் கொல்லத் துடிக்கிறீர்கள். இதோ பகவத் கீதை. இதில் உள்ள ஏதேனும் ஒரு முழு ஸ்லோகத்தை சொல்லி அதன் அர்த்தம் சொல்லும் உங்களில் எவனும் என்னைத் தாண்டி உள்ளே செல்லலாம்” என்று சொல்கிறார். கூட்டம் மௌனம் சாதிக்கிறது. “உங்களுக்கு பகவத் கீதை தெரியாதா? பின் என்ன நீங்கள் எல்லாம் என்ன ஹிந்து?” என்று கேட்டு, தனது முஸ்லீம் நண்பனை அழைத்துச் சொல்லச் சொல்கிறார். அடைக்கலம் புகுந்த அந்த முஸ்லீம் பகவத் கீதையின் ஒரு சுலோகத்தைச் சொல்லி அதன் விளக்கத்தையும் சொல்கிறார். கூட்டம் வெட்கித் திரும்புகிறது.

ஒரு சிலர் இதை ரொம்ப க்ளிஷேவாகா இருக்கிறது என்று சொல்லக் கூடும். ஆனால் எந்த வித முகாந்திரமும் இல்லாமல், வெறும் பிறப்பினால் வேற்றுமைப்படுத்தப் பட்டதற்காகவே ஒருவரையொருவர் மாற்றி மாற்றிக் கொல்லத் துடிக்கும் மத வெறியர்களின் முகத்திலறைந்தது போன்று இந்த அத்தியாயங்களை எழுதியிருப்பார்.

வெறுமனே மதமாற்றமும், இந்து முஸ்லிம் பிரச்சினைகள் மட்டும் இல்லாமல், இந்த நாவல் இன்னொரு முக்கிய விஷயத்தையும் தொட்டுச் செல்கிறது.

அது,

அன்ன சத்திரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

ஆம். கதையின் தொடக்க வரிகளாக இவையே உள்ளன. இதுதான் இக்கதையின் மையக்கருத்தும் கூட.

‘கோவிலுக்கு எல்லோரும் வர்றது போறதுதான பிரச்சினை? பேசாம காலணிக்குன்னு ஒரு கோயில் இருந்தா எதுக்கு பிரச்சினை?’ என்று அவர்களுக்காக ஒரு கோயில் கட்ட முனைவார்கள். நாயகன் சாமிநாதன் உட்பட எல்லாருமே அதில் பங்கு பெறுவார்கள். அதில் சாதி இந்துக்கள் தாராளாமாகப் பணம் வழங்குவார்கள். இந்த இடம் ரொம்ப முக்கியமானது. ‘என் கோயிலுக்குள்ள எல்லாம் வராத. ஆனா உனக்காக, உன் கோயிலுக்காக எவ்ளோ வேணா காசு போடரேன். அதுக்காக நன்றியுணர்ச்சியோட இரு’ என்று பழக்கப்படுத்தி இருக்கும் இந்தச் சமுதாய கட்டமைப்புகளை நாம் புரிந்து கொள்ள வைக்கும் இடம் இது.

நாயகி இந்துவே கடைசியில் கேட்பாள். “நீங்களும் என்ன செஞ்சிட்டிருக்கீங்க? காலணிக்கு ஒரு கோயில் வேணும்னுதான் அலைஞ்சிட்டிருக்கீங்க? நம்ம ஊருல ஒரு மேல்நிலைப்பள்ளி இல்லை. அதுதான் முக்கியம்ன்னு உங்களுக்குத் தோணுச்சா?” என நாயகனிடம் கேட்பாள். சாமிநாதன் மனதில் நாயகி இந்து ஒரு தேவதையாக உயர்வு பெறும் இடம் அது.

இதைத் தவிர்த்து மனிதரின் மனதில் ஏற்படும் எண்ணங்களை உளவியல் ரீதியாக ஓரளவு அணுகி அதை வார்த்தைகளால் ஆசிரியர் வடித்திருப்பார். இந்தப் புத்தகத்தில் எந்த வித விதிகளுக்கும் கட்டுபடாத நான்-லீனியர் வகை உரைநடையோ, திடீர் திருப்பங்களோ இல்லாமல் வாக்கிய அமைப்புகள் ஒரு தெளிவான நீரோடையைப் போன்று அமைக்கப்பட்டுள்ளன. ரொம்ப ரொம்ப லைட் ரீடிங் வகை நாவல்தான் இது.

இதில் உள்ள ஒரு வரி இன்னமும் மனதில் ஒட்டிக் கொண்டே இருக்கிறது.

“இன்றைய சூழ்நிலையில் நாட்டைத் திருத்த மகாத்மாக்கள் கூட தேவையில்லை. மனிதர்களே போதும்!”

நாட்குறிப்பில் பார்த்தால் ஜூன் 2007 என்று போட்டிருந்தது. ஏறக்குறைய 13 வருடங்களுக்கு முன்பு இந்தப் பதிவை எழுதி இருக்கிறேன். பள்ளிப் பருவத்தில் அதற்கும் பல வருடங்களுக்கு முன்பு படித்த நினைவில் எழுதியது. புத்தகம் தோராயமாக 1987இல் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். இந்த 33 வருடங்களில் எதுவும் மாறி விட வில்லை. இன்னமும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோயில் பணியை விடச் சிறந்தது என்றால் கல்லடி படத்தான் வேண்டி இருக்கிறது.

பி.கு: நான் படித்த முதல் சமூக நாவல் என்ற அடிப்படையில் இதன் ஆசிரியர் வெ.த. புகழேந்தி குறித்தான விவரங்கள் தேடிச் சலித்து விட்டேன். மின் மடல் முகவரியோ, தொலைபேசி எண்ணோ எதுவும் கிடைக்கவில்லை. தப்பித் தவறி கிடைத்தால் அவரிடம் சொல்லவேண்டும். ‘நீங்க ரொம்ப சாதாரணமா எழுதிட்டுப் போயிட்டீங்க. அதைப் பிடிச்சுக்கிட்டு ஒருத்தன் எங்கெங்கோ பயணப்பட்டுக்கிட்டிருக்கேன்’ என்பதைச் சொல்ல வேண்டும்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: Common Folks

– நந்தகுமார் நாகராஜன்