Shadow

மயூரன் – உன்னைக் காப்பவன்

mayuran---the-saviour

கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

மயூரன் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன், “மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணியாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலிகளைவிடப் போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவருக்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை. யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான். சொல்லிக் கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறு விதமாகத்தான் பார்க்கிறது.

கல்லூரி விடுதி தான் கதைக்களம். என்னால் எதுவும் செய்ய முடியும் என எழுச்சியூட்டும் பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம். ஒரு தேசம் அது. அவர்கள் அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். செடிகளும் மரங்களும் ஒரே நிலத்தில் ஒன்று கூடி வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய்ப் பழகும் நட்பையும் உருவாக்குகிறது, எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும் பகையும் வளர்க்கிறது.

என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லியிருக்கும் படம் தான் மயூரன்” என்றார்.

வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன் (தாரை தப்பட்டை ), அஸ்மிதா (மிஸ் ஃபெமினா வின்னர்) மற்றும் பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

>> ஒளிப்பதிவு – பரமேஷ்வர் (சந்தோஷ் சிவனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்)
>> இசை – ஜுபின் (பழைய வண்ணாரப்பேட்டை ) & ஜெரார்ட்
>> பாடல் – குகை மா.புகழேந்தி
>> ஒளிப்பதிவு – அஸ்வின்
>> சண்டை – டான் அசோக்
>> நடனம் – ஜாய்மதி
>> மக்கள் தொடர்பு – மணவை புவன்
>> தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்
>> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன் (இயக்குநர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்)

படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தயாரிப்பாளர் H.முரளி அவர்களின் நிறுவனம் மூலமாக வெளியிடப்படவுள்ளது.