நேரடியாக கமலின் நுழைவில் இருந்து தொடங்கியது. வீட்டுக்குள் ஒரு மறைவான இடத்தில் இருந்து பேசிக் கொண்டிஇருந்தார். இந்த சீசனோட ரகசிய அறையைக் காண்பித்து விளக்கிக் கொண்டிருந்தார். யாருக்கு உபயோகப்படப் போகிறதெனத் தெரியவில்லை. அதற்கப்புறம் இந்த வாரத்தை பற்றிய வர்ணனைகள் அவரது பாணியில் செய்தார் கமல்.
வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம். போன வியாழன் இரவில் இருந்தே ஆரம்பித்தது. ‘தன்னோட மேக்கப் கிட்டைத் திருடிட்டாங்க, எல்லார் பொருளும் திரும்பி வந்துருச்சு, ஆனா என்னோடது மட்டும் வரல, இதுக்குக் காரணம் சாக்ஷி தான்’ என கவினிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மீரா. பெண்களுக்கு ஒன்றெனில் துடித்துப் போவதில் கவினுக்கு இணையாக யார் இருக்கிறார்கள்? உடனே சாக்ஷியிடம் போய் இதைப் பற்றிக் கேட்கிறான். சாக்ஷி எதுவும் திருடியது போல் நமக்குக் காட்டப்படவில்லை. அதுவும் இல்லாமல், மாட்டிக்காமல் திருடும் அளவுக்கு சாக்ஷிக்கு மூளை இருந்தால் கவினையெல்லாம் எப்பவோ பத்தி விட்ருப்பார். பேச்சு மெல்ல மொழிப்பிரச்சினைக்கே போனது. ‘நீயும், மீராவும் பேசி வச்சுட்டுச் செஞ்ச மாதிரி தோணுச்சு’ என சாக்ஷி சொல்ல கவின் எழுந்து போய்விட்டான்.
பெண்கள் கெஞ்சினால் மிஞ்சுவர், மிஞ்சினால் கெஞ்சுவர் எனச் சொல்வார்கள் அல்லவா? கவின் இரண்டு நாளாகக் கத்திக் கொண்டே இருக்கார். சாக்ஷியோ கெஞ்சிக் கொண்டிருக்கார்.
மறுநாள் சிம்புவின் ஒரு பாடலோடு விடிந்தது. முதல் நிகழ்ச்சியே தலைவரைத் தேர்ந்தெடுப்பது தான். ஒரு மொக்கையான டாஸ்க், அதையும் மொக்கையாக விளையாடியதால் தர்ஷன் வென்றதாகச் சொல்லி, அவரே இந்த வார அணியையும் அறிவித்தார்.
நேற்றைய முதல் பாதியின் ஹைலைட்டே சிறையில் இருந்த லியாவும் அபியும் தான். நானும் ஜெயிலுக்குப் போறேன் என பந்தாவாகப் போனவர்கள், நேரமாக ஆக டயர்ட் ஆகி, அழுகின்ற நிலைமைக்குப் போய்விட்டனர். வான்டட்டாக ஜெயிலுக்குப் போனவர்களுக்கு கஞ்சி, ராகி களி என அனுப்பி இன்னும் வைத்துச் செய்தார் பிக் பாஸ். கூடவே மாவை அனுப்பி எல்லோருக்கும் சப்பாத்திக்கு உருட்டிக் கொடுக்கவேண்டும், ஆனால் அதை அவர்கள் சாப்பிடக்கூடாதென ஆர்டர் போட்டார். அபி முதல் ஆளாக, ‘நாங்க சும்மா தான் வந்தோம், எங்களை விட்டுடுங்க’ என மன்னிப்பு கேட்டுக் கதற, அந்தப் பக்கம் லியா சாரி கேட்காமல் டபாய்த்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக வெளியில்விட்டார் பிக் பாஸ்.
யார் வெளியே போவாங்க என மதுவும் ரேஷ்மாவும் விவாதித்துக் கொண்டிருந்தனர். மது சாக்ஷி பேரைச் சொல்ல, கவின் பேரைச் சொன்னார் ரேஷ்மா. கவின், சாண்டி, சரவணன், மீரா கூட்டணி ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார். அன்றைய நாள் முடிகிறது.
நேரடியாக வீட்டுக்குள் போனார் கமல். போன வார டாஸ்க் பற்றிப் பேசி எல்லோரையும் பாராட்டினார். மைனர், தர்ஷன் ஸ்பெஷல் மென்ஷன். மொழிப் பிரச்சினைக்கு ஷெரின், சாக்ஷிக்கு கொஞ்சம் தட்டிக் கொடுத்தார். திருட்டுக்கிழவி ரேஷ்மாவையும் ஸ்பெஷலாகப் பாராட்டினார். ‘தலைவர் பதவிக்கு வர்றவங்க எல்லாம் திருடறது சகஜம் தான்’ என பிட்டு போட்டது அக்மார்க் கமல் குறும்பு.
அப்படியே மது, சாண்டி சண்டைக்கு வந்து நின்றது. ‘நான் சொல்றதை கேளுங்க’ எனும் டயலாக்கை பல மாடுலேஷனில் சொல்லி எல்லோரையும் கலாய்த்தார். மது – சாண்டி பிரச்சினையைக் காமெடியாகப் பார்த்திருப்பார் போல. இல்ல பிக் பாஸ் டீம் அப்படி சொல்லிவிட்டார்களா எனத் தெரியவில்லை. மதுவிடமும் காமெடியாகவே டீல் பண்ணிட்டு இருந்தார். ‘வீட்டுக்குப் போய் பார்த்தீங்கன்னா நீங்களே சிரிப்பீங்க!’ எனச் சொன்ன போதும், மதுவுக்குப் புரியவில்லை. தனக்கு நீதி கிடைக்கும் என அப்பொழுதும் சீரியசாக நடந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். கமலும் சாண்டியை அதட்டுவது போல் நடித்துக் கொண்டிருந்தார். ‘சாண்டி செஞ்சது சரின்னும், மது மேல தான் தப்பு’ எனச் சொல்வது மாதிரி இருந்தது. இது கண்டிப்பாக மதுவுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.
அடுத்து, சேரன் – மீரா பிரச்சினைக்கு வந்தார். மீரா மறுபடியும் அதே கதையைச் சொன்னார். ‘நாங்க அதை டிவில பார்த்துருக்கோம்’ என ஹின்ட் கொடுத்த போதும் மீராவுக்குப் புரியவில்லை. எப்பவும் போல சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தவரை, அங்கே நடந்ததை நடித்துக் காண்பிக்கச் சொன்னார் கமல். சாண்டியைக் கூப்பிட்டு நடித்துக் காண்பித்தார் மீரா. ‘ஒருத்தர் மேல் குற்றச்சாட்டு சொல்லும்போது, அதைச் சொல்வதற்கென ஒரு முறை இருக்கு, நீங்க அப்படி சொல்லலை’ எனகமல் சொல்லும்போதும் மறுத்து பேசுவதை மட்டுமே செய்தார் மீரா.
மொத்தமாக லாக் பண்ணதுக்கு அப்புறம், ‘நீங்க அடிக்கடி கேக்கற குறும்படம் பாருங்க’ என ஆக்ஷனில் காண்பித்தார் கமல். இந்தக் குறும்படம் தேவையா எனக் கேட்டால், இது பார்வையாளர்களுக்குத் தேவையில்லை, சக ஹவுஸ்மேட்ஸ்க்கு தான் இது தேவை. ஏனெனில் மீரா அவ்வளவு அழுத்தமாகத் தன்னோட குற்றச்சாட்டை வைக்கும் போது, அனைவர் மனதிலும், ‘ஒருவேளை இப்படி நடந்திருக்கலாமோ?’ ஒரு சந்தேகம் இருக்கும். சேரனே அன்னிக்குச் சொன்ன மாதிரி, ‘என்னைப் பிடிச்சவன், அவரு அப்படியிலைன்னு நம்புவான், என்னைப் பிடிக்காதவன், அவன் அப்படித்தான்னு சொல்லிட்டுப் போய்டுவான்’. ஆக, வீட்டுக்குள் இருக்கிறவர்களுக்கு, பார்வையாலர்கள் என்ன பார்த்தார்களெனப் போட்டுக் காண்பிப்பது தேவையானது.
குறும்படம் இந்தத் தடவை ரிவர்ஸில் போனது. அதாவது முதலில் மீரா குற்றச்சாட்டு வைக்கிறார். அதற்கப்புறம் சாண்டியிடம் என்ன நடந்ததென செய்து காண்பிக்கிறார். அப்ப இரண்டு கையாலேயும் சாண்டியைப் பிடித்துத் தள்ளி விடுகிறார். அதற்கப்புறம் தான் அந்த மொமென்ட்ஸ் வந்தது. 10 செகன்ட் கூட இருக்காத அந்தக் காட்சியைப் பார்த்த ஹவுஸ்மேட்ஸிடம் அவங்க கருத்தை கேட்டார். அதுவும் பெண்களிடம் மட்டும்.
சாக்ஷி: இதுவரைக்கும் அவரை அப்பா ஸ்தானத்துல தான் வச்சுருக்கோம். (ஆனா அப்பப்போ எதிர்த்துப் பேசுவோம் சார்) எங்களுக்கு எதுவும் தவறா படலை.
அபி.: ஜஸ்ட் தள்ளி விட்ருக்காங்க, அந்த மொமென்ட்ல மீராவும் சிரிச்சிட்டே தான் வராங்க. ஆனா இதுக்கு எப்படி இப்படி ஒரு கதை வந்ததுன்னு தெரிலை.
ஷெரின்: இது ஒரு கற்பனை கதை.
ரேஷ்மா: எனக்கு ஒன்னும் தப்பா தெரில (ஆனாலும் அவரு என்னைக் கத்தினது தப்பு சார்).
மது: ஒரு குறும்படம் தனக்குச் சாதகமா இருந்ததால, எல்லாக் குறும்படமும் தனக்கு சாதகமா இருக்கும்ன்னு நினைச்சுட்டாங்க.
லாஸ்லியா: தினமும் என்னை ஹக் பண்ணிட்டு இருக்கார். அவரைப் போய்…….. (ஏய்…. நடிக்காத).
மீரா: நடந்தது என்னன்னு கடவுளுக்கு தெரியும் சார். உண்மை ஒரு நாள் வெளிய வரும்.
கமல் : ஙே….
கமலே ஷாக் ஆன மொமென்ட் அது. இதுக்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பதென ஒரு மகா கலைஞனே திகைத்து நின்ற போது அபிராமி தான் கை கொடுத்தார். தேங்க்ஸ் அபிராமி.
இந்த நிகழ்ச்சிக்கு கமல் எதுக்கு எனக் கேட்டவர்களுக்கு, நேற்றைய நிகழ்ச்சி ஒரு கிளாசிக் எக்சாம்பிள். சென்சிட்டாவான ஒரு பிரச்சினை, அதை அவ்வளவு அழகாக ஹாண்டில் பண்ணினார். ஆனால் மது விஷயத்தில் அதையே சொல்ல முடியவில்லை.
இந்த வாரம் சேஃப் ஆனது சேரன் எனச் சொன்ன இடமும் அட்டகாசமாக இருந்தது.
ஆட்டம் தொடரும் என்ற ஆவலோடு..
– மகாதேவன் CM