Shadow

மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்

Mehandi-circus---a-simple-love-story

ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கனத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர்.

படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், “ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு (தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜாவின் தந்தை) நன்றி. இந்தப் படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப் படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதைப் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்

படத்திற்குக் கதை வசனம் எழுதிய ராஜு முருகன், “இந்தப் படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும், ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப் படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப் பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

பாடலாசிரியர் யுகபாரதி, “ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப் படம் உண்மையாக வந்திருக்கிறது. ரொம்ப சின்ன வயதில் வெட்டா ஆற்றங்கரையில் நான் சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல், இலக்கியம் என்று பேசிக்கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னார். ராஜு முருகன் கதை எழுதி, நீ பாட்டெழுதி, நான் படம் இயக்கணும் என்று. அன்று விளையாட்டாக பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும், ‘இயக்குநர் நிதானமானவர்’ என்று சொன்னார்கள். இந்த நிதானம் நேர்மையான நிதானம் சத்தியமான நிதானம். உண்மையைச் சொல்கிறேன். இந்தப் படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.