Search

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

Merku-thodarchi-malai-movie-review

குறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர்.

கும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது.

தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த உணர்வையும், கோம்பையில் இருந்து கேரள எல்லை இடுக்கி மாவட்டம் வரை மலையைச் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியையும் தருகிறது படத்தின் விஷுவல். மனம் பிசகிய பாட்டி ஒருவர் தன் கையிலுள்ள வளையல்களை எண்ணிக் கொண்டிருப்பார். தகதகக்கும் பொன்னிற சூரிய வெளிச்சத்தின் பின்னணியில் வரும் அந்த ஷாட்டு ரசனையின் உச்சம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில் மிகச் சிலரைத் தவிர அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ரங்கசாமி எனும் பிரதான கதாபாத்திரத்தில் ஆண்டனி நடித்துள்ளார். இவரைப் படப்பிடிப்புத் தொடங்கும் இரண்டு மாதத்திற்கு முன்பே, மலைக்கிராமத்தில் தங்க வைத்துச் சுமை தூக்கும் வேலையைச் செய்யவைத்து இயக்குநர் லெனின் பாரதி. கதையெழுதி, அதில் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு படம் எடுப்பது என்றில்லாமல், யதார்த்தமான ஒரு படம் என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்துள்ளார் இயக்குநர் லெனின் பாரதி. அதன் பலனைப் பார்வையாளர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்.

இளையராஜா. மேற்குத் தொடர்ச்சி மலையில் வீசும் காற்றே இசைதான். அந்த இசையைப் படத்திற்குள் கொண்டு வர இசைஞானியை விட்டால் பொருத்தமான நபர் யாராவது உள்ளார்களா? சுமைத்தூக்கி வரும் ஒருவரின் ஏலக்காய் மூட்டை, பாறையில் இருந்து உருண்டு கிழிப்பட்டு ஏலக்காய்கள் சிதறக் கீழே அதர பாதாளத்தில் விழுகிறது. இசையோ மனதை அடைக்கச் செய்யும்படி எழுகிறது. படத்தின் கனத்தைக் கூட்டியுள்ளார் இளையராஜா.

கம்யூனிசம். தோட்டத்தில் உழைப்பவர்களை, ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சி போன்ற முதலாளிகளிடம் இருந்து எப்படிப் போராடிக் காப்பாற்றுகின்றன எனப் படம் நேரடியாகவும் துல்லியமாகவும் சித்தரிக்கிறது. படத்தில் திராவிடம் பேசப்படவில்லை எனினும், நாயகனின் வீட்டில் கலைஞர் தொலைக்காட்சியும், அம்மா மின்விசிறியும் இருப்பது நல்ல குறியீடு. சகாவுவாக வரும் அபு வளையங்குளம் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார். தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் சட்டத்தைத் தனக்குச் சாதகமானதாய் மாற்றி, தொழிலாளர்களைக் காவு வாங்கும் கேரள முதலாளியாக ஆறுபாலா நடித்துள்ளார். தொழிலாளர்கள் மேல் அக்கறையுள்ள கங்காணியாக அந்தோணி வாத்தியார் நடித்துள்ளார். ‘நிலம் நாளைக்குத்தான ரெஜிஸ்ட்ரேஷன் ரெங்கு?’ என்று கேட்கும் பொழுது அவர் முகத்தில் உள்ளார்ந்த அக்கறையும் அன்பும் தெரிகிறது. படம் முழுவதுமே இப்படி அசலான மனிதர்கள். 

நிலம் வாங்கக் கடன் வாங்குவது குறித்துக் கணவனும் மனைவியும் பேசுகிறார்கள். கடன் வாங்கத் தயங்கும் கணவனிடம், “இதுல யோசிக்க என்ன இருக்கு? நாம் கடன் வாங்குவதால் ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆகும்ன்னா வாங்கித்தானே ஆகணும்” எனச் சமாதானம் சொல்கிறாள் மனைவி. மற்றவர்களுக்காக யோசிக்கும் அந்த எளிய மனம் தான் படத்தின் அடிநாதம். ‘கடன் அடைக்கிறனாம் கடன்’ எனச் சொல்லும் முஸ்லிம் பெரியவர் மீது பார்வையாளர்களுக்கு நிச்சயமாகக் காதலெழும். நாடகத்தன்மை இன்றி, மற்றவருக்காக யோசிப்பது, நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்துவது போன்றவற்றை மிகச் சாதாரணமாகக் காட்டியுள்ளார் இயக்குநர். அதாவது, இதில் ரொமன்டிசைஸ் செய்ய என்ன உள்ளது? இதுதான் அவர்களின் வாழ்வியல் என்கிறார் இயக்குநர். பண்ணைப்புரத்து இளையராஜாவும் அதை ஏற்றுக் கொண்டு, அங்கே இசையை நிறுத்தியுள்ளார். ஜோக்கர் படத்தில், காம்ரேட் இசையாகக் கலக்கிய காயத்ரி கிருஷ்ணா தான் ரங்கசாமியின் மனைவி ஈஸ்வரியாக நடித்துள்ளார். காயத்ரி இந்தப் படத்தில்தான் அறிமுகமாகியுள்ளார்.

தத்தித் தத்தி நடக்கும் ஒரு குழந்தைக்கு நடை பழக்குகிறார் தாத்தா. துண்டால் குழந்தையின் இடுப்பைச் சுற்றிக் குழந்தை தடுமாறி விழுந்துவிடாத வண்ணம் துண்டின் மறுபுறத்தைக் கையால் பிடித்துக் கொள்கிறார். குழந்தை, ‘தத்தக்கா பித்தக்கா’ என நடக்கிறது. இந்தக் காட்சி தரும் பரவசத்திற்கு ஈடே இல்லை. அதை உணர்ந்தோ என்னவோ, படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் கொஞ்சம் கருணையோடு சில நொடிகள் அக்காட்சியை நீட்டியுள்ளார்.

விஜய் சேதுபதி. இந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் தானொரு உண்மையான கலைஞன் என்பதை அழுத்தமாக நிரூபணம் செய்துள்ளார். ஆவணப்படமோ என்ற பிம்பத்தை ஏற்படுத்தினாலும், படம் பார்வையாளர்களை அமைதியாக இழுத்துக் கொள்கிறது. சிறப்பான படங்களை ரசிகர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்வார்கள் என்பதற்குச் சான்று, படம் முடிந்ததும் எழும் கைத்தட்டல்களே!! இப்படத்தில் அது மிகப் பலமாய் எழுகிறது.