
மெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள் கொள்ளலாம். இந்தத் தலைப்பை அட்லி, இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தின் மெர்சலாயிட்டேன் பாடலின் வரிகளில் இருந்து ‘இன்ஸ்பையர்’ ஆகி எடுத்திருக்கச் சாத்தியங்கள் உள்ளன. கபிலனின் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தால், பயத்தால் மிரள்வது மெர்சல் அல்ல என்று புரியும். ஒரு திகைப்பில், ஆச்சரியத்தில் எழும் பரவச உணர்வு என்பதாக மெர்சலுக்குப் பொருள் வருகிறது.
படத்தில் அத்தகைய மெர்சல் உணர்வு மூன்று நபர்களுக்கு எழுகிறது. முதலாவதாக, ஃபிரான்ஸ் கேஃபே-வில் காஜல் அகர்வாலுக்கு. கையிலிருக்கும் ஒரு பணத் தாளில் இருந்து, விஜய் நிறைய பணம் வர வைக்கும் பொழுது. இரண்டாவதாக, நியூஸ் சேனல் வாசலில் நிற்கும் சமந்தாவிற்கு. பந்து பொறுக்கிப் போடும் தம்பி தான் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் எனத் தெரிய வரும் பொழுது. மூன்றாவதாக, கிராமத்தில் பெரிய மருத்துவமனைக் கட்டடத்தை டீன் எஸ்.ஜே.சூர்யா பார்க்கும் பொழுது. கால வரிசைப்படி நோக்கினால், இது தான் முதல் மெர்சல் மொமன்ட். இதைத் தவிர்த்து, விஜயைப் பார்த்துப் பரவசப்பட மட்டுமே வரும் சத்யராஜையும் கூடச் சேர்க்கலாம். ஆனால் தமிழ் சினிமா வழக்கத்தின்படி, அவர் ஒரு டம்மி போலீஸ் என்பதால் சிலாக்கி டும்மாகக் கருதி, அவரை டீலில் விட்டுவிடலாம். இன்னொன்று காட்சி மெர்சல் மொமன்ட் ஆகியிருக்க வேண்டியது. ‘தன்னைப் போலவே இருக்கும் ஒருவனால் காப்பாற்றப்படும் பொழுது’ இயல்பாய் எழுந்திருக்க வேண்டிய மிரட்சியும் பரவசமும் டாக்டர் மாறனுக்கு மிஸ்ஸிங்.
டாக்டர் டேனியல், மல்யுத்த மாவீரர் வெற்றிமாறனைப் பின்னாலிருந்து குத்திக் கொல்கிறார். அவர் இறக்கும் முன், ‘இரண்டு பேராக வருவேன். அப்போ என் கை ஓங்கி உயரும்’ எனச் சூளுரைக்கிறார். அந்த மெடிக்கல் மேஜிக் எப்படி நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
170 நிமிடங்கள் சேர்ந்தாற்போல் மேஜிக் ஷோ பார்ப்பதைப் போல் அயற்சியாக உள்ளது. போஸ்டரையும், இயக்குநரின் பெயரையும் பார்த்து மட்டுமே கதையை யூகித்து விடும் தலைமுறைக்கு சினிமா வந்து விட்டது. அவர்களுக்கான தீனியாக ஸ்டைலான டான்ஸ், மாஸ் ஃபைட், சென்ட்டிமென்ட் சீன்ஸ் எல்லாத்தையும் சரியாகக் கலந்தால் போதும் என்ற பொன்னான மனநிலையில் இருந்து இயக்குநர்கள் மீண்டு வர வேண்டிய கட்டாயமும் அவசியமும் எப்பொழுதையும் விட இப்பொழுது அதிகமாகிவிட்டது. ஆனாலும், அட்லி மிக்ஸிங்கில் தேர்ந்த அனுபவஸ்தர் போல் தன் படங்களைக் கரையேத்தி விடுகிறார்.
பாடல்கள் நன்றாக இருந்தும், காட்சிகளின் இடையே அவை வைக்கப்பட்ட இடம் சரியில்லாததால், ரஹ்மானின் பாடல்கள் செய்திருக்க வேண்டிய மேஜிக் படத்தில் மிஸ் ஆகிறது. மாஸ் படம் என்றால் பார்வையாளர்களில் காதுகளை ஒரு வழி செய்து வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. ஆனால், ரஹ்மான் மிக அருமையான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார். மாஸ் சீன்களையும், ரொமான்ஸ் சீன்களையும் தன் இசையால் மெருகேற்றியுள்ளார்.
‘பிரதர்’ நஸ்ரியாவை, ‘தம்பி’ சமந்தாவாக்கி உள்ளார் அட்லி. காஜல் அகர்வால் காதலில் விழுந்து டான்ஸ் ஆட மட்டுமே எனக் காணாமல் போகிறார். பட்டையைக் கிளப்புவது நித்யா மேனன் மட்டுமே! வடிவேலுவைத் திரையில் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். ஆனால், வாழ்ந்து கெட்டவர் போல் திரையில் சுணங்கி விடுகிறார் வடிவேலு. ஆனால், நோலனாக வரும் யோகி பாபு ஒந்றிரண்டு காட்சிகளில் வந்தாலும், வழக்கம் போல் கவுன்ட்டரில் கலகலக்க வைக்கிறார். சின்னஞ்சிறு வேடத்தில் வரும் காளி வெங்கட் கூட அழுத்தமாகத் தன் பாத்திரத்தினைப் பதிக்கிறார். ஆனால் வடிவேலு? அவர் மீண்டும் தன் ஸ்க்ரீன் பிரசென்ஸ் மூலம் மேஜிக்கை நிகழ்த்த வேண்டுமென எதிர்பார்ப்பு எழுகிறது.
மூன்று வேடங்களில் விஜய் இளமையாக துறுதுறுவென ரசிக்க வைக்கிறார். திரையில் தான் எப்படித் தெரிய வேண்டும் என்பதில் அதீத கவனம் எடுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. படத்தின் நீளம் தரும் அயற்சியைச் சமன்படுத்துவதும் அவர்தான். இவருக்குச் சமமான வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் கட்டமைக்கப்படாதது மிகப் பெரும் குறை. அரவிந்த் சாமி எப்படித் தனி ஒருவராக அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமாக இருப்பார் என்று சொல்லியிருப்பார்கள். அது போல், எஸ்.ஜே.சூர்யா என ஒரு மருத்துவரை அகற்றினால் மருத்துவத்துறை எப்படிச் சுத்தமாகும் எனப் படத்தில் தெளிவில்லை. ஆனால், நாயகனோ தன் தனிப்பட்ட பழி வாங்கல் உணர்ச்சியைப் பெரிதுபடுத்தி, நரகாசூரனை வதம் செய்த அவதார புருஷன் அளவுக்கு தன்னைப் பற்றி ஃபீல் செய்து செய்கிறார். ஷங்கர் படப் பாணியில், கொடூரமாகக் கொலை செய்வதை ஹீரோயிசமாகவும், பிரச்சனைகளின் தீர்வாகவும் முன் வைக்கும் கருத்தாக்கத்திற்குக் கடும் கண்டனங்கள். சிறுமிக்கு ஏற்படும் விபத்தை இவ்வளவு டீட்டெயிலிங்கோடு ரத்தம் கொப்பளிக்கக் காட்டியிருக்க வேண்டாம்.
விஜய் பேசும் திணிக்கப்பட்ட அரசியல் வசனங்களை விட, ஃபிரான்ஸ் கொள்ளைக்காரர்களிடம், ‘ஒன்லி டிஜிட்டல் மணி இன் இந்தியா. நோ மணி வித் பீப்பிள்’ என புறங்கையை நாக்கால் வழித்துக் காட்டும் வடிவேலுவின் அரசியல் பகடி ரசிக்க வைக்கிறது. அட்லிக்குள்ளும் என்னமோ இருக்கு பாரேன் என மெர்சல் கொள்ள வைக்கும் காட்சி அது!