Shadow

மின்மினி விமர்சனம்

கனத்த இருளில் சிக்கி ஒரு புழுவைப் போல் உழன்று கொண்டிருக்கும் ஒருவனை, ஒளிரும் வண்டான மின்மினிப் பூச்சியைப் போல் மாற்ற ஒருத்தி மெனக்கெடுகிறாள்.

பாரிமுகிலன் எனும் பள்ளி மாணவன், தனது நண்பனின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்துவிடுகிறான். பாரிமுகிலனின் உறுப்புகள் கொடையாக அளிக்கப்பட்டதில், பிரவீணா எனும் பள்ளி மாணவிக்கு இதய மாற்று அறுவைச்சிகிச்சை நடைபெறுகிறது. பாரிமுகிலனைப் பற்றி அறிய நினைக்கும் பிரவீனாவிற்கு, பாரியின் மரணத்தால் தன்னியல்பை இழந்து, வாழ்வின் மீதான எந்தப் பிடிப்புமின்றி சுற்றித் திரியும் சபரியைப் பற்றித் தெரிய வருகிறது. சபரியை அதிலிருந்து பிரவீனா மீட்க நினைக்கும் பொழுது, சபரி காணாமல் போய்விடுகிறான். சபரியின் ஒளியை அவனுக்கு பிரவீனாவால் மீட்க முடிந்ததா என்பதே படத்தின் கதை.

பதின் பருவத்து நடிகர்கள், வளர்ந்து வாலிப பருவம் எய்துவதற்காக எட்டு வருடம் காத்திருந்து இப்படத்தை முடித்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். இத்தகைய யோசனையை ஏற்றுக் கொண்டு, அதற்கு உயிரளித்துள்ள தயாரிப்பாளர்கள் மனோஜ் பரமஹம்ஸாவிற்கும், R. முரளி கிருஷ்ணனிற்கும் பிரத்தியேகமான பாராட்டுகள்.

ஊட்டியில் ஒரு பள்ளியில், படத்தின் முதற்பாதி நிகழ்கிறது. பாரிமுகிலனெனும் நட்சத்திர காலபந்தாட்ட வீரன், ஒட்டுமொத்த பள்ளியின் செல்லப்பிள்ளையாகத் திகழ்கிறான். அவன், புதிதாய் வந்து சேரும் சபரியை அடிக்கடி உரண்டைக்கு இழுக்கிறான். மெல்ல நட்பு மலர்கிறது. அதை ஒருவருக்கொருவர் வெளிக்காட்டிக் கொள்ளும் முன்பாகப் பாரிமுகிலன் இறந்துவிடுகிறான்.

இரண்டாம் பாதியில், பாரிமுகிலனின் லட்சியமான இமயமலையில் புல்லட் ஓட்டுவதை இலக்கின்றிச் செய்து கொண்டுள்ளான் வாலிபனாகிவிடும் சபரி. அம்மலைச்சாலையில் சக பயணியாய் சபரியிடன் அறிமுகமாகிக் கொள்கிறாள் பிரவீணா. அப்பயணத்தில் அவர்கள் காணும் இமயத்தின் அச்சமூட்டும் வசீகரமூம், சந்திக்கும் மனிதர்களையும், பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாய்க் கொண்டு வந்துள்ளனர் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும், அறிமுக இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மானும். பின்னணி இசை படத்தின் மிகப் பெரிய பலம். தெரிந்த முகங்களோ, பெரிதாய் கமர்ஷியல் அம்சங்களோ இல்லாத படத்தில், கதாபாத்திரம் சுமக்கும் மனக்கனத்தை மட்டுமே பிரதானமாய்க் கொண்ட சைக்காலஜிக்கல் டிராமா படமிது. உலகிலேயே உயரமான இடத்தை அடைந்தாலும், மனதளவில் எங்கோ ஒரு பாதாளத்தில் இருக்கிறான் நாயகன். இசையால் அதைக் கடத்தியுள்ளார் கதீஜா.

பாரிமுகிலனாக நடித்திருக்கிறர் கெளரவ் காளை. முதல் பாதியின் நாயகனான அவரது நடிப்பு ஈர்க்கிறது. விடுதிக் காப்பாளராக ஷா ரா-வும், ஆசிரியையாக ரேச்சல் ரெபக்கா நடித்துள்ளனர். ஒரு பெரும் பாரத்தைச் சுமக்கும் உடற்மொழியையோ, பாவனைகளையோ சபரியாக நடித்திருக்கும் பிரவீன் கிஷோரிடம் வெளிப்படவில்லை. இயக்குநர் ஹலிதா ஷமீம், சாமர்த்தியமாக பிரவீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில் மூலமாகக் கதையை நகர்த்தியுள்ளார். எஸ்தரின் பரிதவிப்பையும், சபரியை எப்படியாவது மீட்கவேண்டும் என்ற தீர்மானத்தையும் அவரது முகத்தில் அநாயாசமாகக் கொண்டு வந்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதியை அலுப்புத் தட்டாமல் நகர இவரது நடிப்பே முக்கியமான காரணமாகிறது. எஸ்தர், அவரை விட பிரம்மாண்டமாக இருக்கும் புல்லட்டை இமயமலைப்பாதையில் அழகாக ஓட்டுகிறார். புல்லட்டைத் தள்ளுவதிலும், அதன் எடையைச் சமாளிப்பதிலும் எஸ்தருக்கு உள்ள பிரச்சனையையும் ஷாட்களில் நேர்த்தியாக நெருடாதவண்ணம் கொண்டுவந்துள்ளார் ஹலிதா ஷமீம்.

நீர்க்குமிழி வெடிப்பது போல், ஒரு சாதாரண ஆனால் ஓர் அழுத்தமான தருணத்தில் படத்தை முடித்துள்ளார் ஹலிதா ஷமீம். அந்தத் தருணத்தின் கனத்தை இரட்டிப்பாக்கியுள்ளார் கதீஜா ரஹ்மான்.