அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். ‘அந்தாதுன்’ எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன்.
பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் கிரிஷ். எப்படி அப்பிரச்சனையில் இருந்து மீள்கிறார் என்பதே படத்தின் கதை.
ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் முரளி எனும் பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். சிம்ரனை, ‘ஆம்பளப் பொறுக்கி’ எனத் திட்டுகிறார். சின்ன பாத்திரம்தான் என்றாலும் வழக்கம் போல் அவரது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துவிடுகிறார். லாட்டரி டிக்கெட் விற்கும் சரசுவாகப் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் ஊர்வசி.
டாக்டர் சாமியாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அதாவது டீசன்ட்டான கெட்டவர் கதாபாத்திரம் அவருக்கு. தன் மனைவி ரிவால்வர் ரீட்டாவிற்கு அஞ்சி நடுங்கும் காவல்துறை அதிகாரி மனோகர் எனும் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். சமூகத்திற்கு அட்வைஸ் செய்யும் முறுக்கான கதாபாத்திரத்திற்கு அவர் இப்படி அடிக்கடி ஓய்வு கொடுத்தால் மிக நன்றாக இருக்கும். மிடுக்குடன் எதற்கும் தோளை இறக்காத சமுத்திரக்கனியையே நடுக்கமுறச் செய்யும் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் வனிதா விஜயகுமார்.
ஜூலி பாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ஹாசினி எனும் இறவாக் கதாபாத்திரத்தை ஆங்காங்கே நினைவுப்படுத்துகிறார். சிமி எனும் கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தை அழகாக தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சிம்ரன். ஒப்பீட்டளவில் ஹிந்திப்படத்தில், தபு தன் நடிப்பால் அன்றி பார்வையாலேயே அந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும், யூகிக்க முடியாத ஒரு மர்மத்தையும் வெளிப்படுத்தியிருப்பார்.
கிரிஷாக பிரஷாந்த். ஐந்து வருடங்களுக்கு முன், ராம்சரணின் அண்ணனாக ஒரு படத்தில் நடித்திருந்தாலும், சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு நாயகனாகத் திரையேறியுள்ளார். திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் அழகாகக் கதையின் நாயகனாகப் பொருந்திப் போகிறார். வசனத்தைப் பட்டுக்கோட்டை பிரபாகரும், கூடுதல் வசனத்தை தியாகராஜனும் எழுதியுள்ளனர். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், பாடல்களும் திரைக்கதை ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தைத் தக்கவைக்க உதவுகின்றன.
பிரஷாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் நினைத்தபடி அமைய அவருக்கு வாழ்த்துகள்.