தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி, தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார். அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல், தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும் ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார். அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது. இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டியின் கதை.
நாயகியாக அனுஷ்கா. பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அனுஷ்காவை திரையில் பார்க்க தவமிருந்த கூட்டத்தின் ஒரு பகுதியை தியேட்டரில் பார்க்க முடிந்தது. பல வருட இடைவெளிக்குப் பின்னர் நடிக்க வந்தாலும் நடிப்பிலும் முகபாவங்களிலும் எந்தவொரு தடுமாற்றமும் இல்லை. எங்கே விட்டுச் சென்றாரோ அங்கிருந்தே மீண்டும் தன் அட்டகாசமான நடிப்பை தொடர்ந்திருக்கிறார். ஒரு உயர் நட்சத்திர ஹோட்டலில் காரியமே கண்ணாக இருக்கும் ஷெஃப் ஆக, தன் தாயின் மறைவுக்குப் பின்னர், தானே தாயாக மாறி தனக்கான ஒரு துணையை உருவாக்கிக் கொள்ள துணியும் அந்த துணிச்சலும், தன் குழந்தைக்கு உயிர் கொடுக்கப் போகின்றவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சல்லடைப் போட்டுத் தேடும் அந்த முனைப்பும் , நாயகனை சந்தித்தப் பின்னர் அவனிடம் எமோஷ்னலாக கனெக்ட் ஆகாமல் தன் காரியத்தை மட்டும் சாதித்துக் கொள்ள காட்டும் ஆர்வமும், ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் நாயகனுடன் எமோஷ்னல் கனெக்ட் ஆகி அவனை இழந்து விட்டோமே என்று ஏங்கும் ஏக்கமும் என காட்சிக்கு காட்சி உணர்வோடு உரையாடுகிறார்.
நாயகன் நவீன் இப்படத்தின் மற்றொரு பலம். துருதுரு உடல்மொழியுடன், படபட பேச்சுக்களுடன், பேச்சில் தெறிக்கும் சமகால வாழ்வியல் மற்றும் நகைச்சுவையுடன் அப்படியே அச்சு அசலாக ஒரு STAND UP COMEDIANயை கண் முன் நிறுத்துகிறார். தன் அப்பா அம்மாவிற்கு தெரியாமல் ஸ்டேண்ட் அஃப் காமெடி செய்வதும், அனுஷ்கா தன்னை அவர்களின் ஹோட்டலில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்ய அழைப்பது எதற்காக என்று தெரியாமல் அவர் மேல் காதலில் விழுவது, பின்னர் அவர் தன்னை விட வயதில் மூத்தவர் என்று தெரிந்ததும், தன் பெற்றோரை வயதில் மூத்த ஜோடிகளை உதாரணம் காட்டி அவர்களை சரிகட்ட முயல்வது, அனுஷ்கா திருமணம் செய்யாமல் தன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார் என்பதை தவறான அர்த்தத்துடன் புரிந்து கொண்டு நவீன் பொலிஷெட்டி செய்யும் காரியங்கள் ஏ-1 ரகம். அதை நாசுக்காக அனுஷ்கா தவிர்க்கும் விதம் அதைவிட க்ளாசிக்.
மிக எளிமையான ஒரு கதை. கதை தொடங்கும் போதே அதன் முடிவு இப்படித் தான் இருக்கப் போகிறது என்பதும் தெரிந்துவிடுகிறது. இருப்பினும் அந்த ஆரம்பப்புள்ளி மற்றும் முடிவுப் புள்ளிக்கு இடையே கதை நகர்ந்து செல்லும் விதம் சுவாரஸ்யம் இல்லாததாக இருந்தாலும் கூட ஆங்காங்கே நம்மை களிப்பூட்டுகிறது.
நாயகனாக இருக்கும் சித்துவின் வீடு, அவரின் ஆச்சாரியமான அம்மா, கண்டிப்பான அப்பாவாக வரும் முரளி ஷர்மா, தனக்கான டோனாரை அன்விதா தேடுவதில் நடக்கும் குட்டி குட்டி சுவாரஸ்யமான, காமெடியான தருணங்கள், சித்துவை அன்விகாவும் அவளது தோழியும் பெண் வீட்டிலிருந்து விசாரிப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று அலுவலக நண்பர்கள் எண்ணிக் கொண்டு அடிக்கும் லூட்டிகள், தான் நிராகரிக்கப்பட்டு தன் இடத்திற்கு இன்னொருவன் வந்ததும் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் சித்து படும் அவஸ்தைகள், என ஆங்காங்கே குதூகலங்களும், அன்விதாவின் அறிவுரையைக் கேட்டு சித்து தன் வேலையை விட்டுவிட்டு முழு நேர ஸ்டேண்ட்-அப் காமெடியன் ஆக மாறுவதும், அன்விதாவிற்கு ஆரோக்கியமான ஸ்பேம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தன் அன்றாட வாழ்க்கையின் பழக்கவழக்கங்களை மாற்றிவிட்டு, அதை மீண்டும் மாற்றிக் கொள்ள மனமில்லாமல் தன் வாழ்க்கையில் அந்த பழக்கவழக்கங்களை அப்படியே தொடர்வது, தான் கருவுற்றுவிட்டோம் என்பதை அறிந்ததும் அனுஷ்கா முகத்தில் பூக்கும் அந்த தாய்மை, அந்த கணமே சித்து மீது அவருக்கு ஏற்படும் அலாதியான அந்த உணர்வு, சித்துவின் வாழ்க்கையை கெடுக்க விரும்பாமல் சொல்லிக் கொள்ளாமலே லண்டன் கிளம்பிச் செல்வது, அங்கு சென்று பின்னர் சித்துவை மறக்கமுடியாமல் தவிப்பது என்று உணர்வுபூர்வமான தருணங்களையும் திரைக்கதை உள்ளடக்கி இருக்கிறது.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் லண்டனின் குளுமையும் ஹைதராபாத்தின் வெம்மையும் ஒரு சேரக் காணக் கிடைக்கிறது. ராதனின் இசை காட்சிகளுக்கான உணர்வுகளை மிகக் கச்சிதமாக கடத்துகிறது. பாடல்கள் பெரிதாக எதுவும் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை அற்புதம். மகேஷ் பாபு இயக்கி இருக்கிறார். UV CREATIONS சார்பாக வம்சி பிரமோத் தயாரித்துள்ளார். ஸ்டுடியோ கிரின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மொத்தத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் ஒரளவிற்கு குதூகலமான உணர்வுபூர்வமான திரைப்படம், அது பெரிதாக உங்களை கவரவில்லை என்றாலும் கூட கண்டிப்பாக ஏமாற்றாது.