பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது. ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான். நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார். சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார். இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.
’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’ தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்), “பிகில்” தன் அப்பாவைக் கொன்றவனைப் பழி வாங்கும் ஹீரோ, ஆக கதை மாறவே இல்லை. கதைக்களம் தான் மாறுகிறது. தெறி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை மற்றும் மகளோடு வாழும் தந்தையின் வாழ்க்கை, “மெர்சல்” ஊர் தலைவர், ஐந்து ரூபாய் டாக்டர் மற்றும் மேஜிக் நிபுணரின் வாழ்க்கை, “பிகில்” ரவுடி மற்றும் கால்பந்து விளையாட்டு வீரனின் வாழ்க்கை. இப்படி கதையை அப்படியே வைத்துக் கொண்டு கதை நடக்கும் பின்புலத்தை மட்டும் மாற்றித் தான் பெரும்பாலான பெரிய ஹீரோ திரைப்படங்களும், கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்களும் உருவாகின்றன. ஆக இது போன்ற திரைப்படங்களில் நாம் கேட்க வேண்டிய கேள்வி திரைக்கதை எப்படி இருக்கின்றது..? காட்சிகள் எப்படி இருக்கின்றன..? என்பது மட்டுமே.
திரைக்கதை, ஒரு புள்ளி வரை இந்திய தேசத்தில் இருக்கும் சீர்கேடுகளை களைவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு போராடும் ஒரு குழுவினரின் கதையைப் போல் தோன்றுகிறது. ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் கடன்கள் அடைக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த இந்தியா எங்கும் இருக்கும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் உலகதரத்திற்கு நிகராக உயர்த்தப்படுகின்றன. ஆக கதை நம் அன்றாட பிரச்சனைகளை ஒரு சூப்பர் ஹீரோ மற்றும் அவரின் குழுவின் உதவியுடன் நாம் எப்படி தீர்த்துக் கொள்வது என்பது தான் போல என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே ஹீரோவின் மீதான தாக்குதல் தொடங்க, தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நடக்காது என்கின்ற கதையைப் போல், ஒட்டுமொத்த வாக்குப்பதிவு இயந்திரங்களையும் திருடிக் கொண்டு வந்து வைத்து, மக்களுக்கு ஓட்டுக்கு லஞ்சமாகக் கொடுக்க வேண்டிய பணத்தையும் திருடி, இந்திய அரசை தேர்தல் நடக்காமல் தடுத்துவிடுவோம் என்று மிரட்டி, இந்தியா எங்கும் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த தொழிற்சாலைகளுக்கு எதிராக அதை மூட வேண்டும் என்று போராடியவர்களைக் கொண்டே சீல் வைக்க வைத்து பின்னர் ஹீரோ வில்லனைப் பழிவாங்கி, தன் அப்பா மீதான தேசத் துரோகி என்னும் அவப்பெயரைத் துடைத்தெறிந்து, மீண்டும் சுவிஸ் வங்கி கணக்குகளைக் கண்டறியக் கிளம்பும் அயர்ச்சியூட்டும் திரைக்கதை.
மெட்ரோ ரயிலை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் காட்சி ஐடியா பிரமிக்க வைத்தது. அது போல் அந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அவர்கள் போய் சேரும் இடம் அதைவிட மிரட்டலாகவும் எதிர்பாராததாகவும் இருந்தது. அது போல் விக்ரம் ரத்தோரின் ஆரம்பக் காட்சி ஹாலிவுட் படங்களை மிஞ்சும் தரத்துடன் படமாக்கப்பட்டு இருந்தது. அந்த ஏழை விவசாயியின் தற்கொலை, 52 குழந்தைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் இறந்து போவது, ஆகிய காட்சிகள் இரக்கத்தையோ மனவறுத்தத்தையோ ஏற்படுத்தாமல் வலிய திணிக்கப்பட்ட காட்சிகள் போல் தோற்றமேற்படுத்தி கடந்து போகிறது. பொதுவாகவே அட்லி படத்தில் கதையின் மையமான பழிவாங்கும் உணர்வுக்கு ஆதாரமாக சில உருக்கமான காட்சிகள் இடம்பெறும். அவை நம்மையும் நாயகனுடன் சேர்ந்து பழி வாங்கத் தூண்டும் மன உள் எழுச்சிகள் நம்மிள் ஏற்படும். உதாரணமாக தெறி படத்தில் சமந்தா, மெர்சல் மற்றும் பிகில் படத்தில் அப்பா விஜய் இறக்கும் காட்சிகள், பிகில் படத்தில் ஆசிட் வீச்சின் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் கதை, போன்றவை. அதுபோல ஒரு வலுவான எமோஷ்னல் கனெக்ட் கொடுக்கக்கூடிய காட்சி ஜவானில் இல்லை.
அமைச்சரைக் கடத்தும் காட்சியும், அமைச்சரின் உயிரைக் காப்பாற்ற அனைவருமே தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்ளும் காட்சியும் ஏற்புடையதாக இல்லை. தீபிகா படுகோன் சிறைக் கைதியாக தன் மகனோடு வாழும் வாழ்க்கை ஈர்ப்புடையதாகவும், கண்ணில் ஈரத்தை வரவழைக்கும் பகுதியாகவும் இருந்தது. விக்ரம் ரத்தோர் ராணுவத்தை அழைத்துக் கொண்டு பாகிஸ்தான் செல்லும் காட்சிகள் ஆரம்பம் திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றது.
ஆக்சன் காட்சிகள் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டு இருக்கின்றன. நயன் தாரா சண்டையிடும் காட்சிகள் கூட பிரமாண்டமான முறையில் நம்பகத்தன்மை எற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
ஆக, திரைக்கதை பல இடங்களில் சுவாரஸ்யமாகவும் சில இடங்களில் யூகிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. பல காட்சிகள் புதுமையாகவும் நடைமுறைக்கு ஒவ்வாத சினிமாத்தனத்துடனும், சில காட்சிகள் பழமையாகவும் ஷங்கர் திரைப்படங்களை நினைவுபடுத்துவதாகவும் இருக்கின்றன.
படத்தின் மிகப்பெரிய பலமே ஷாருக்கான் தான். அவரின் திரை ஆளுமை ஒவ்வொரு ப்ரேமிலும் எதிரொலிக்கிறது. அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்புகளுக்கு ஏற்றார் போன்ற அவரது முகபாவனைகளும் படத்தை காண்கின்ற அனுபவத்தை மகிழ்வாக்குகின்றன. தன் தாய் தந்தையரை எண்ணிக் கண்கலங்கும் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கின்றது. தீபிகா படுகோன் மற்றும் நயன்தாராவுடனான நெருக்கமான காதல் மொழி பேசும் காட்சிகளில் விண்டேஜ் ஷாருக்கை மீண்டும் திரையில் பார்க்கும் உணர்வு. காரில் இருக்கும் குழந்தை தன்னை அப்பா என்று அழைத்ததும், இதுவும் என்னோட குழந்தையா…? என்று கேட்கும் இடத்தில் அவரின் இயல்பான துடுக்குத்தனம் வெளிப்படுகிறது.
இந்த வயதிலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு அவரது உடல் இந்த அளவிற்கு ஒத்துழைப்பது ஆச்சரியம் ஏற்படுத்துகிறது. கடத்தப்பட்ட மெட்ரோ ரயிலுக்குள் ஷாருக் நுழையும் ஓப்பனிங் காட்சி மிகுந்த ஆரவாரங்களுக்கு ஏற்ற முறையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஷாருக்கான் காதல், காமெடி, அன்பு, ஆக்ஷன், மாஸ் என்று எல்லா காட்சிகளிலும் ஜொலிக்கிறார்.
விஜய் சேதுபதியின் துடுக்குத்தனத்துடன் கூடிய வில்லத்தனம் நம் பார்வையாளர்களுக்கு பழக்கப்பட்டதாக இருந்தாலும் வட இந்திய ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும். முதல் பாதியில் சற்றே அடக்கி வாசிக்கும் அவர் இரண்டாம் பாதியில் அதிலும் குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் தன் ரைமிங்கான டைமிங் காமெடிகள் மூலம் அப்ளாஸ் அள்ளுகிறார். மிக சீரியஸான வில்லன் கதாபாத்திரத்தை மிக இலகுவாக கையாண்டு மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.
நர்மதா என்னும் உயர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நயன்தாரா. கதாபாத்திரத்திற்கு ஏற்ற சிறப்பான பங்களிப்பு. காதல் காட்சிகளில் உடல்மொழியில் ஒரு செயற்கைத்தனம் தெரிந்தாலும் விசாரணை மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மிடுக்கான உடல்ழொழியில் மனதை கவர்கிறார். முதல்பாதியில் ஆங்காங்கே வந்து கதையை ஆக்ரமித்துக் கொள்ளும் அவர் இரண்டாம் பாதியில் பெரும்பாலும் காணாமல் போகிறார். ஓரிரு காட்சிகளில் வந்தாலும் சஞ்சய் தத் தன் வித்தியாசமான நடிப்பின் மூலம் ஈர்க்கிறார்.
இயக்குநர் அட்லி காட்சிகளை சிறப்பாக பிரம்மாண்டமான முறையில் உருவாக்குவதில் வித்தகர். அது ஜவானிலும் கண்கூடாகத் தெரிகின்றது. ஸ்டேஜிங்கும், காட்சி அமைப்புகளும், அதை படமாக்கிய விதமும் ஹாலிவுட் தரத்தை மிஞ்சுகிறது. அதுபோல் ஷாருக் மற்றும் அந்த ஆறு பெண்களின் பின்புலம் அவர்கள் இருக்கும் இடங்கள் ஆகியவை மிகச்சிறப்பாக புத்திசாலித்தனத்துடன் தர்க்கரீதியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல் விக்ரம் ரத்தோர் தன் இழந்த ஞாபகங்களை மீட்கும் இடத்தில் இருக்கும் அந்த கனெக்டிவிட்டியும் மிகச் சிறப்பு.
படம் சற்று நீளமாக இருந்தாலும் படம் பார்க்கும் போது அந்த உணர்வு எழாமல் இருப்பதே படத்தின் வெற்றி. காட்சிகள் பகுதி பகுதியாக இருந்தாலும் விறுவிறுப்பாக நகர்கின்றன. அதற்கு ஒளிப்பதிவாளர் விஷ்ணுவின் கேமரா மிகவும் உதவி இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளிலும் ஒளியமைப்பு தன்மையில் வித்தியாசத்தைக் காட்டி காட்சி அனுபவத்தை சிறப்பாக்கி இருக்கிறார். மேலும் அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசையே சில காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பாடல்கள் தனியாக கேட்கும் போது கொடுத்த உணர்வை படமாக பார்க்கும் போது கொடுக்கவில்லை. அவை படத்தில் கதையோட்டத்திற்கான தடைக்கல்லாகவே தெரிகிறது.
மொத்தத்தில் “ஜவான்” திரைப்படம் கதை மற்றும் திரைக்கதையில் பெரிதாக ஜொலித்து மனதிற்கு நெருக்கமான படைப்பாக மாறவில்லை என்றாலும் கூட, ஷாருக்கான், விஜய் சேதுபதி நயன் தாரா போன்றோரின் அற்புதமான நடிப்பாலும், ஷாருக்கானின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸாலும், மிக அற்புதமான மேக்கிங்காலும், ஹாலிவுட் தரத்திலான சண்டைக் காட்சிகளினாலும், அனிருத்-தின் இசையினாலும் பார்க்க வேண்டிய படமாக மாறுகிறது.