Shadow

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

கிறிஸ்துமஸ் பிறக்க இருக்கும் நள்ளிரவு நேரத்தில் தன் நான்கு வயது மகளைக் கூட்டிக் கொண்டு பம்பாய் நகர வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறாள் படத்தின் நாயகியான மரியா (கத்ரீனா கைஃப்).  எப்படி தன் மகன் இயேசு பிரானை ஏரோது மன்னனின் கொலைக்களத்தில் இருந்து காப்பாற்ற மரியாளும் யோசேப்பும் முயன்று அந்த நடு இரவில் ஒடிக் கொண்டு இருந்தார்களோ, அதே போல் தன் மகளின் நன்மைக்காக இந்த மரியாவும் தன்னந்தனியே ஒடிக் கொண்டிருக்கிறாள்.  இந்த மரியாவின் மகளுக்கு அப்படி என்ன ஆபத்து வந்தது; தன் மகளைக் காக்க மரியா எடுத்த நடவடிக்கை என்ன என்பதே இந்த “மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.

ஒரு திரைப்படத்தில் நாம் எதிர்பார்க்கின்ற திருப்பங்களும்  எதிர்பார்க்கும் திரைக்கதையும் இருக்கும் போது,  பல தருணங்களில் சோர்வாகவும் எரிச்சலாகவும் இருக்கும்.  சில தருணங்களில் கதை போகும் போக்கை கச்சிதமாக கணித்துவிட்டோம் என்கின்ற மமதை நமக்குத் தோன்றும்.  ஆனால் சில திரைப்படங்களில் நாம் எதிர்பார்க்காத திருப்பங்களும், திரைக்கதையும் இருக்கும் போது, ஒரு மெல்லிய ஆச்சரியம் கலந்த சிரிப்பும், பிரமிப்பும் தோன்றும். “மெரி கிறிஸ்துமஸ் “ திரைப்படம் இரண்டாவது வகைமையைச் சேர்ந்தது.

படத்தின் ஒரு காட்சியைக் கூட நம்மால் யூகிக்க முடியவில்லை, அப்படி இருக்க கதையை எப்படி யூகிப்பது.  படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி வரை அடுத்த என்ன நடக்கப் போகிறது என்கின்ற மர்மத்தை தன்னகத்தே ஒளித்து வைத்து நம்மை மெல்லிய புன்சிரிப்பு கலந்த ஆச்சரியத்திற்குள்ளும், பிரமிப்பிற்குள்ளும் தள்ளி இருக்கிறது “மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படம்.

நம்முடைய தவறான முடிவுகள் நம்மை வாழ்க்கைப் பாதையில் எந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்பதை தெள்ளத் தெளிவாக த்ரில்லர் பாணியில் பேசி இருக்கிறது திரைப்படம்.

படத்தின் இரண்டாம் பாதி தொடங்கும் வரை கதையின் மையம் என்ன என்பதை வெளிப்படுத்தாமலே புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைக்கப்பட்டு, சுவாரஸ்யமான காட்சிகளினால் கதையின் முன்பாதி ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.

இரண்டாம் பாதியில் கதையின் மையம் இதுதான் என்று தெரிந்தப் பின்னர், மேற்கொண்டு படத்தில் என்ன நடக்கப் போகிறது என்கின்ற சஸ்பென்ஸ் படத்தின் இறுதிக்காட்சி வரை, இன்னும் சொல்லப்  போனால் படத்தின் இறுதி ப்ரேம் வரை நீடிப்பதே படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

ஐந்து வயது பெண் குழந்தையின் தாய் மரியாவாக கத்ரீனா கைஃப். ஒரு கட்டம் வரை மரியாவின் கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதே கடினமானதாக இருக்கிறது. ஆண்களால் கைவிடப்பட்ட கதாபாத்திரமா..? இல்லை கணவன் மீதுள்ள வெறுப்பில் தவறு செய்ய துணியும் கதாபாத்திரமா..? என பல்வேறு கோணங்களில் நம்மை சிந்திக்க வைக்கும் புதிர் நிறைந்த கதாபாத்திரம்.  சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு குழந்தையாக மாறி ஆல்பர்ட் ஆக வரும் விஜய் சேதுபதியுடன் அந்த இரவை துள்ளலுடன் கடக்க முயலும் போதும், உற்சாகக் கொண்டாட்டம் ஒரு கட்டத்தில் எல்லை மீறுவதை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் போதும், தன் திட்டங்களுக்கு இடையூறாக வந்து நிற்கும் விஜய் சேதுபதியை கொலை வெறியுடன் தாக்க வரும் போதும் என,  ஒரே கதாபாத்திரத்தின் வழியே ஓராயிரம் உணர்வுகளைக் கொட்டி நடித்திருக்கிறார்.  க்ளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் மல்க கை நீட்டி மோதிரத்தைப் பெற்றுக் கொள்ளும் காட்சியில், வசனங்கள் இன்றியே அவரின் நடிப்பினால் நன்றி கூறி கவர்ந்திழுக்கிறார்.

ஆல்பர்ட் ஆக வரும் விஜய் சேதுபதிக்கு தன் கடந்த காலக்கதையைக் கூறும் அந்த ஒற்றைக் காட்சியே கதாபாத்திரத்திற்கான நியாயத்தை செய்து விடுகிறது.  மரியாவுடனான மய்யலுக்கு நாகரீகமாக விண்ணப்பிப்பதும், விடாமல் பின் தொடர்வதுமென ஒரு ரோமியோ போலத் தோன்றி, கையறு நிலையில் இருக்கும் மரியாவிற்கு கண்டிப்பாக உதவி தேவைப்படும்  நேரத்தில் தன்னைப் பற்றிய உண்மையை உரைத்து கைகழுவ முடிவெடுக்கும் கண்ட்ரெடிக்ட் நிறைந்த கதாபாத்திரம். ஆர்பாட்டம் இல்லாமல் இலகுவாக செய்திருக்கிறார்.  அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சியின் பரபர நிமிடங்கள் நிறைந்த தருணத்தில் தன் முக பாவனைகளிலேயே உணர்வுகளை பிரதிபலிக்கும் இடம் க்ளாசிக்.

போலீஸ் விசாரணை அதிகாரியாக வரும் சண்முகபாண்டியனும், ஏட்டம்மாவாக வரும் ராதிகா சரத்குமாரும்  ஏதோ காமெடிப் போலீஸ் போன்று தோற்றம் தந்து, பின்னர் கறார் போலீஸாக மாறும் கதாபாத்திர ஸ்கெட்ச் அருமை. இருவரும் எதிரெதிர் புள்ளிகளில் இருந்து விசாரணையை அணுகும் விதமும், புதியதாக சேர்ந்த கான்ஸ்டேபிளிடம் இந்தியப் போலீஸின் பெருமையைப் பேசும் இடமும், அமர்களம்.  இவர்கள் தவிர்த்து ப்ரெடெரிக் ஆக வரும் கவின் ஜே.பாபு வரும் இடங்கள் எல்லாம் காமெடி கலகலப்பு காட்சிகளில் கைகூடி வருகிறது.  ராஜேஷ், காயத்ரி ஆகியோரோடு ராதிகா ஆப்தேவும் சில காட்சிகளில் வந்து போகிறார்.  கத்ரீனாவின் மகளாக நடித்திருக்கும் சிறுமியும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் சிறப்பாக் நடித்திருக்கிறார்.

படத்தின் திரைக்கதையை அர்ஜித் பிஸ்வாஸ், படத்தின் எடிட்டர் பூஜா லதா சுர்தி மற்றும்  படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். படத்தின் ரியல் ஹீரோவே இந்தத் திரைக்கதை தான்.  படத்தின் தலைப்பான மெரி கிறிஸ்துமஸ், படத்தின் கதை ஏன் கிறிஸ்துமஸ் இரவில் நடக்கிறது என்பதற்கான காரணம், விஜய் சேதுபதி வாங்கும் அந்த சிறைப் பறவை கூண்டு,  படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் ஆரம்பக் காட்சியான இரண்டு மிக்ஸிகள், ஒன்றில் இருக்கும் மாத்திரை, ஒன்றில் இருக்கும் இட்லி பொடி மற்றும் மோதிரம், இந்த இரண்டிற்குமான கவித்துவமான தொடர்பு, அந்த மிக்ஸி அரைப்புக்குப் பின்னர் நடக்கவிருக்கும் துர் சம்பவம், ப்ரெடெரிக் தவறவிடும் மணி பர்ஸ், துரத்தி துரத்தி அடித்தாலும் மீண்டும் மீண்டும் வலிய வந்து பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி கதாபாத்திரம், வாய் பேச முடியாத சிறுமி கதாபாத்திரம் பேசும் ஒற்றை வசனத்தில் படத்தின் கதையே மாறிவிடுவது,  விஜய் சேதுபதி வைத்திருக்கும் மோதிரத்தை இறுதிக்காட்சியில் பயன்படுத்திய விதம் என்று நுவான்ஸஸ் படம் நெடுக இருக்கிறது. அவை அனைத்தையும் கதையோடு கோர்த்து திரைக்கதை அமைத்த வித்தை போற்றுதலுக்குரியது.

வசனங்களும் மிகத் தெளிவாக, துல்லியமாக எழுதப்பட்டு இருக்கின்றன.  முதலில் பார்க்கும் போது அவை ஒரு அர்த்தத்தையும் இரண்டாவது முறை பார்க்கும் போது அவை மற்றொரு அர்த்தத்தையும் கொடுக்கும்படி வசனங்கள் பல இடங்களில் எழுதப்பட்டு இருக்கின்றன.  “மறந்ததும் தூக்கிப் போட்ருவேன், தூக்கிப் போட்டாத்தான மறக்க முடியும்…” ” எது பெரிய துயரம்னு சொல்லத் தெரியலை, ஆச ஆசையாய் செஞ்ச காதல் செத்துப் போறதா…? இல்ல ஆசை ஆசையா  காதலிச்சவுங்க செத்துப் போறதா..? யாராவது அழுகுற மாதிரி போட்டோ எடுத்து வீட்ல மாட்டிப் பாத்திருக்கியா..? என பல இடங்களில் வசனங்கள் கத்தியின் கூர்மையுடன் மனதில் இறங்குகின்றன.

ப்ரீத்தம் இசையில் பாடல்கள் மயிலிறகால் வருடும் சுகத்தைக் கொடுக்க, பி.ஜார்ஜின் பின்னணி இசை காட்சிக்கும் கதைக்கும் தேவையான திகில் மற்றும் மர்மத்தை ஒருங்கே கொடுத்து, காட்சிக்கு வலு சேர்க்கின்றது. மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் பழைய பாம்பேவின் இரவு விடுதிகளும் தெருக்களும் அதுக்கான ஒளிச்சிதறல்களுடன் கண்களுக்கு விருந்து அளிக்கிறது.

‘பட்லாபூர்’ ‘அந்தாதுன்’ போன்ற த்ரில்லர் படங்களை ஹிந்தியில் இயக்கி பெரும் வெற்றிகண்ட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். மகளுக்கு இழைக்கப்பட்ட துயர் என்னவென்பதை கூறாமல் பார்வையாளர்களின் யூகத்திற்கு விட்டதும்,  எந்தக் கதாபாத்திரத்தின் மீதும் ஆத்மார்த்தமான பிணைப்பு எற்படாததும், கொலையை பிரச்சனைக்கு தீர்வாக முன் வைப்பதற்கான சரியான காரணம் கதைவெளியில் சொல்லப்படாததும், போலீஸ் விசாரணை மற்றும்  அரங்கேற்றப்பட்ட அந்த எதிர்பாராத நிகழ்வின் நம்பகத்தன்மையின்மையும் அதில் இருக்கும் குழப்பங்களும், விடையில்லாக் கேள்விகளும் படத்தின் பலவீனங்கள்.

இதைத் தவிர்த்துப் பார்த்தால் “மெரி கிறிஸ்துமஸ்”  சாண்டாக்ளாஸின் ஆச்சரியமூட்டும் பொங்கல் பரிசு தான்…

மதிப்பெண் 3.5 / 5.0