Shadow

Mission: Impossible – The Final Reckoning விமர்சனம்

இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ‘மிஷன் இம்பாசிபள் (1996 – 2025)’ படத்தொடர் அதன் கடைசி அத்தியாயத்தை எட்டியுள்ளது என்று கசிந்த செய்தியே படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்தியிருந்தது. அதற்கேற்ற வகையில், ஈத்தன் ஹன்ட்க்கு ட்ரிப்யூட் செய்வது போல், படத்தலைப்பிற்கு முன்பே பழைய படங்களில் இருந்து கையாளப்பட்ட ஷாட்ஸ்களைக் காட்டுகின்றனர். படம் நெடுகேவும், நண்பர்களுக்காக அவர் மிஷனில் எடுத்த ரிஸ்க்களைப் பற்றி மற்ற கதாபாத்திரங்கள் அங்கலாய்த்துக் கொண்டே உள்ளனர். ‘இப்படியாப்பட்ட உன்னை வழிக்குக் கொண்டு வருவது ரொம்பச் சுலபம்’ என வில்லன் தீர்க்கமாக நம்புகிறார். அதை ஈத்தனிடமே சொல்கிறார். அப்படியே ஈத்தனை வழிக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்கிறார்.

உலகையே தனது ஆளுகைக்குள் கொண்டு வரும் உருபொருளை (Entity) எப்படியாவது தடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் அமெரிக்க அரசு தள்ளப்படுகிறது. இல்லையேல் மூன்றாம் உலகப்போரைத் தொடங்கிய அவப்பெயரை அமெரிக்கா சுமக்கவேண்டி வந்துவிடும் என்பது போல் நெருக்கடியை உருவாக்கி விடுகிறது உருபொருள். அதற்குள் உருவமற்ற உருபொருளைத் தடுத்தழிக்க வேண்டுமென்ற நிபந்தனையை ஈத்தன் ஹன்ட்க்கு விதிக்கிறார் அமெரிக்க ஜனாதிபதியான எரிகா. கடலின் ஆழத்தில் எங்கயோ புதைந்திருக்கும் ருஷ்ய நீழ்மூழ்கிக் கப்பலான செவஸ்டபோலைக் கண்டுபிடித்து, அதிலிருந்து போட்கோவா எனும் பெட்டகத்தை (Module) எடுத்து அதில் விஷ வைரஸை ஏற்றி உருபொருளை 5டி ட்ரைவில் சிறைபிடிக்க வேண்டும். கேட்பதற்கே தலைசுற்றும் இந்த மிஷனை ஈத்தன் எப்படி செய்து முடித்தார் என்பதே படத்தின் கதை.

மற்ற பாகங்களில் உள்ளது போன்ற அட்டகாசமான ஸ்டன்ட் சாகசங்கள் இப்படத்தில் மிஸ்ஸிங். எனினும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாத திரைக்கதைக்கு உத்திரவாதமளித்துள்ளனர். தொடக்கம் முதலே, ஈத்தன் ஹன்ட்டை நாயகனாக டீல் செய்யாமல், ‘உலகத்தைக் காப்பாத்த வந்த அந்த தியாகியே நீங்க தான் சார்!’ என்ற எல்லாப் பாத்திரங்களும் டீல் செய்கின்றனர். ஆக்ஷன் ஹீரோ மறைந்து, தனது கடைசி மிஷனைச் செய்து முடிக்கும் ஒரு சோர்வான தியாகியாகவே டாம் க்ரூஸின் கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்து வில்லியம் டோன்லேவைக் கதைக்குள் கச்சிதமாகக் கோண்டு வந்தது, மிக நெருக்கடியான சூழலில் அமெரிக்க ஜனாதிபதி எரிகா எடுக்கும் முடிவு, கொலையாளினி பாரிஸ், பென்ஜி டன்னைக் காப்பாற்றும் காட்சி, டோன்லோவின் மனைவி தப்பீஸா எடுக்கும் முடிவுகள், க்ரேஸின் வேகமான கைகள் செய்யும் மாயம் என படம் சில அற்புதமான கணங்களை ஆங்காங்கே கொண்டுள்ளன. ஆழ்கடலில் மூழ்கி, தரையில் ஓடி, அந்தரத்தில் தொங்கி, பாராசூட்டில் தளர்ந்து என ஈத்தன் ஹன்ட் தலைக்கீழாய் தண்ணீர் குடிக்கிறார் என்ற போதிலும், உலகைக் காப்பாற்றியது அனைவரின் குழு முயற்சியென்பதால் ஈத்தன் ஹன்ட்டில் சிக்னேச்சர் ஸ்டன்ட்களை மிஸ் செய்கின்றனர் பார்வையாளர்கள்.