Shadow

“அருண் என் உதவியாளர்” – இயக்குநர் பி.வாசு | மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இயக்குநர் அருண் ரவிச்சந்திரன், “இது என் முதல் மேடை, 12 ஆவது படிக்கும் போது பாலா சாரின் தாரை தப்பட்டை ஷூட்டிங் நடந்தது. அதை வேடிக்கை பார்த்தபோது அங்கு அவ்ளோ பேர் கூடியிருந்தார்கள். வெற்றியைத் தாண்டி, அந்தக் கூட்டமே தனியாகத் தெரிந்தது. அன்று என்னிடம் இருந்த கோனார் தமிழ் உரையில் எழுத்து இயக்கம் என என் பெயரை எழுதினேன். 10 வருடத்தில் இந்த இடத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி. வாசு சாரின் கோ டைரக்டர் சுகுமார் அண்ணன் ஒரு ஷூட்டிங்கில் எனக்கு அறிமுகமானார். அவர் மூலம் தான் இதெல்லாம் நடந்தது. அவர் தான் வாசு சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவரிடம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். முரளி சாரிடம் இந்தக் கதை சொன்ன போது அவர் ரியாக்ட் செய்யவே இல்லை சைலன்டாகவே இருந்தார். எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் இந்தப் படத்தை நாம் செய்யலாம் என்றார். இவ்வளவு பெரிய வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. நிதின் சாரை முதன் முதலில் வீடியோ காலில் தான் பார்த்தேன். கதை அவருக்கும் பிடித்திருந்தது. இந்தப் படம் செய்ய எனக்கு சப்போர்ட் தேவைப்பட்டது. சுகுமார் அண்ணாவிடம் கேட்டேன். அவர் முழுமையாக வந்து வேலை பார்த்துத் தந்தார். லாஸ்லியாவின் இன்ஸ்டா போஸ்ட் பார்த்துத் தான் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். மிக நன்றாக நடித்துள்ளார். இளவரசு சார் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய கிஃப்ட். அவருடன் வேலை பார்த்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் ரீ-ரெக்கார்டிங் வந்த பிறகு கண்டிப்பாக இசையமைப்பாளர் பெரிய ஹீரோ படத்தில் வேலை செய்வார். ஹரி பாஸ்கர் என் நண்பர் அவர் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்” என்றார்.

இயக்குநர் வாசு, “அருண் என் உதவியாளர். அவர் படம் செய்கிறேன் என்றவுடன் யார் புரோடியூசர் யாரென்று கேட்டேன், தேனாண்டாள் பிலிம்ஸ் என்றார். அந்தக் கம்பெனியில் படம் செய்வது பெரிய விசயம், இதுவே பெரிய வெற்றி என்றேன். தேனாண்டாள் பிலிம்ஸ் இராம நாராயணன் மிகப் பெரிய ஆளுமை, அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். ரஜினி, விஜயகாந்த் எல்லாம் அவரைப் பற்றி அவ்வளவு சொல்வார்கள். அவரின் மகன் தான் முரளி. அப்படிப்பட்ட கம்பெனியில் அருண் படம் செய்வது மகிழ்ச்சி. நான் பாடல்கள் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது, இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல வருடம் கழித்து வந்த மதகஜராஜா ஜெயித்துள்ளது. நடிகர் விஜய் என்னுடைய நடிகன் படம் நடிக்க ஆசைப்பட்டார். அது மிகச்சிறந்த கமர்ஷியல் படம். ஆனால் கவுண்டமணி, மனோரமா இல்லாமல் இப்போது அந்தப் படத்தை எடுக்க முடியாது. லாஸ்லியா தமிழ் பேசும் நடிகை, அவர் இன்னும் உயரம் தொட வாழ்த்துகள்” என்றார்.

யூட்யூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இளம் நடிகையாக இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த லாஸ்லியா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைக்கும்படியான கதைக்களத்தில், கலக்கலான கமர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.