
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
பத்திரிகையளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி எனும் தேனாண்டாள் முரளி, “இயக்குநர் அருண் இந்தக் கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக் கால ட்ரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான் என எல்லோரும் இளமையானவர்கள். புதிய இளைஞர்கள் எப்போதும் சாதிக்கும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வரும் போது கண்டிப்பாகப் பன்மடங்கு உழைப்பார்கள் என்பது, என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டது. இயக்குநர் வாசு சாரிடம் இருந்து வந்தவர் அருண். மிக நன்றாகப் படத்தை உருவாக்கியுள்ளார்” என்றார்.
நடிகர் இளவரசு, “தேனாண்டாள் பிலிம்ஸ் 100 படம் முடித்து, 101ஆவது படமாக இதனைத் தயாரித்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் 100ஐக் கடப்பது அத்தனை சாதாரண விசயமல்ல. இந்தக் கம்பெனியில் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. ராமநாரயணன் சார் மிகப் பெரிய தயாரிப்பாளராகப் புகழ் பெற்றவர். விஜயகாந்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். அப்படியான கம்பெனியில் பி.வாசு பள்ளியிலிருந்து வந்த அருண் இப்படத்தை இயக்கியுள்ளார். அவர் எனக்கு அப்பா பாத்திரம் எனச் சொன்னபோது, ‘எனக்கு எல்லாம் அப்பாவாகத்தான் வருகிறது. இதைச்செய்ய வேண்டுமா?’ எனத் தயங்கினேன். ஆனால் அருண் கதையையே ஷாட் ஆர்டராகத் தான் சொன்னார். அவரிடம் இருந்த தெளிவு எனக்குப் பிடித்திருந்தது. இன்றைக்குத் திட்டமிட்டு ஷூட் முடித்தால் அதுவே சாதனை தான். அந்த வகையில் அருண் மிக அருமையாகத் திட்டமிட்டு எடுத்தார். வாசு சார் அந்த வகையில் ஜாம்பவான். அவரிடமிருந்த திறமை இந்த தலைமுறைக்கு வரவேண்டும். இந்தப் படத்தில் ஹரிபாஸ்கர் நாயகன் அவர் ஒரு யூடுபர் ஆனால், படத்தில் நடிக்க கேமராவை அணுகி நடிப்பதில் திறமை வேண்டும். முதல் நாளிலேயே ஹரிபாஸ்கர் வெகு இயல்பாக நடித்தார். களவாணியில் விமலிடம் நான் பார்த்த திறமையை ஹரிபாஸ்கரிடம் பார்த்தேன். அவருக்கு வாழ்த்துகள். தமிழ் பேசத் தெரிந்த மேற்கத்திய அழகி லாஸ்லியா. நல்ல கதாபாத்திரம் நன்றாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட் ரொம்ப சின்ன பையன் அருமையான பாடல்கள் தந்துள்ளார்” என்றார்.
இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட், “எனக்கு இந்தப் படத்தில் 6 பாடல்கள். பாட்டே இல்லாமல் படம் வரும் காலத்தில், எனக்கு இந்தப்பட வாய்ப்பை தந்து என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அருண் மிகச் சுறுசுறுப்பானவர். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. லாஸ்லியா என் முதல் ஆல்பத்தில் நடித்திருந்தார் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கேட்ட அனைத்தையும் தந்து, முழு ஆதரவு தந்த நிதின் சார், முரளி சாருக்கு நன்றி. ஹரி பாஸ்கர் யூட்யூபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல, அவர் இந்த இடத்திற்கு வர நிறையக் கஷ்டப்பட்டுள்ளார். அவர் இந்தப் படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவர் என் நண்பர். படம் செய்ய வேண்டுமென்பது எங்கள் கனவு. அது இப்படத்தில் நிறைவேறியுள்ளது” என்றார்.
நடிகர் ஹரிபாஸ்கர், “இந்தத் திரைப்படம் மிக அற்புதமான பயணம், எங்கிருந்து ஆரம்பித்தது என்று நினைத்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. கனவு பலித்த தருணமாக உள்ளது. வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது. என்னை அறிமுகப்படுத்தும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி சாருக்கு வாழ்த்துகள். முரளி சார் அறிமுகமானதிலிருந்து, 1 வருடமாக தொடர்ந்து ஃபாலோ செய்தேன். அருணும் நானும் நண்பர்கள், அவர் சொன்ன லைனை முரளி சாரிடம் சொன்னோம். அவருக்குப் பிடித்திருந்தது. நிதின் சாரும் எங்களுடன் இணைந்து பயணித்தார். அவர் டெக்னிகலாக எல்லாவற்றையும் பிரித்து அலசி விடுவார். அவரிடம் அடுத்துச் சிக்கும் இயக்குநர் தான் பாவம். எல்லோரும் இணைந்து அர்ப்பணிப்போடு இப்படத்தை எடுத்துள்ளோம். லாஸ்லியா ஃபர்ஸ்ட் இரண்டு நாள் அமைதியாக இருந்தார். ஆனால் இரண்டாவது நாளிலிருந்து செம்ம கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார். மிக அருமையாக நடித்துள்ளார். சாரா அண்ணன் யூடுப்பில் கலக்கிவிட்டு இப்போது சினிமாவில் கலக்குகிறார். அவர் என் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இளவரசு ஒரு லெஜெண்ட், அவர் எங்களுக்கு காட்ஃபாதர் மாதிரி, அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. அருண் என் நண்பர் எல்லாவற்றையும் மிகத் தெளிவாக அணுகுவார். இப்படத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டது சுகுமார் அண்ணன் தான்” என்றார்.
யூட்யூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இளம் நடிகையாக இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த லாஸ்லியா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைக்கும்படியான கதைக்களத்தில், கலக்கலான கமர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.