
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில், A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr. X)’ ஆகும்.
வெற்றிப் படமான எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது.
இயக்குநர் மனு ஆனந்த், “ஒரு இயக்குநருக்கு இரண்டாவது படம் கிடைக்க வேண்டும் என்றால் அந்த முதல் படம் வெற்றி அடைந்திருக்க வேண்டும். அப்படி ஒரு படத்தைத் தயாரித்து. அதில் நடித்து. எனக்கு இயக்குநராக வாய்ப்பு கொடுத்து கோவிட் காலகட்டத்தில் அந்தப் படத்தை திரையரங்குகளில் தைரியமாக ரிலீஸ் செய்த விஷ்ணு விஷாலுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எஃப்ஐஆர் இல்லையென்றால் எனக்கு மிஸ்டர் எக்ஸ் வாய்ப்பு கிடைத்திருக்காது. இன்னும் சொல்லப்போனால் எஃப்ஐஆர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோதே பிரின்ஸ் பிக்சர்ஸில் இருந்து எனக்கு அழைப்பு வந்து விட்டது. சில கதைகள் பேசிய போது அது சரிவர அமையவில்லை. அதன் பிறகு தான் வேறு கதை முடிவு செய்தோம்.
ஆர்யாவுக்காக கதை இருக்கிறதா என்று கேட்டார்கள். ஆனால் ஆர்யா ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. திரையுலகில் எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் வட்டாரத்தில் ஆர்யா பற்றி விசாரித்தபோது அவரிடம் கதை சொல்வது வேஸ்ட். ஏனென்றால் கதையைக் கேட்டுக் கொள்வார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவார் என்று கூறினார்கள். அந்த எண்ணத்தில் தான் அவரிடம் கதை சொல்லச் சென்றேன். ஆனால் கதை கேட்க ஆரம்பித்த 20ஆவது நிமிடத்தில், ‘இந்தப் படத்தை நாம் பண்ணுகிறோம்’ என உறுதி அளித்து விட்டார்.
இந்தப் படத்திற்காகக் கேட்டதெல்லாம் கொடுத்ததற்குத் தயாரிப்பாளர் டீம் கொடுத்த ஒத்துழைப்பு தான். இவ்வளவு பிரம்மாண்டமாக படத்தை எடுக்க உதவியது. இந்தப் படத்தில் நான் அதிகம் சண்டை போட்டது என்றால் சில்வா மாஸ்டருடன் தான். அந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகளை நிறைய விவாதித்து கடைசியில் புதிய ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருவோம். இசை அமைப்பாளர் திபு நிணன் நாம் போதும் என்று சொன்னாலும் அதையும் தாண்டி நம்மைத் திருப்திப்படுத்தும் விதமாக ஒன்றைக் கொடுப்பார். அவர் ஒரு மியூசிக்கல் ஜீனியஸ் என்றே சொல்லலாம். இந்தப் படம் எஃப்ஐஆர்-ஐ விட ரொம்பவே கடினமான ஒரு படம் தான். ஆனால் பிரசன்னா அதை ரசிகர்களுக்கு எளிதாகக் கடத்தும் விதமாக அழகாகப் படத்தொகுப்பு செய்துள்ளார். விஎஃப்எக்ஸ் காட்சிகளும் இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும். இன்று நான் இந்த இடத்தில் ஒரு இயக்குநராக நிற்கிறேன் என்றால் அதற்கு என் மனைவியின் தொடர்ந்த 14 வருட முழு ஆதரவு தான் காரணம்” என்று கூறினார்.