
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில், A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr. X)’ ஆகும்.
வெற்றிப் படமான எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது.
மஞ்சு வாரியர், “மிஸ்டர் எக்ஸ் படத்தைப் பொறுத்தவரை எனக்கு இன்ட்ரஸ்டிங்கான படம். அந்தப் படம் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்குப் புதுசு தான். இயக்குநர் மனு இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியை எடுக்கும் போதும் இந்தப் படத்தின் கதை என்ன என்று ஒவ்வொரு முறையும் விவரித்துக் கூறுவார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் நிறைய கடுமையான சவால்கள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்தப் படத்தை முடிக்க படக்குழுவினர் மிக பக்கபலமாக இருந்தார்கள். இந்தப் படத்தில் பணியாற்றும்போது எங்களுக்குக் கிடைத்த உற்சாக அனுபவம் போல, படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் திரையரங்குகளில் அதே போன்று கிடைக்கும்” என்றார்.
நடிகர் காளி வெங்கட், “எப்போதுமே ஒரு படத்தில் காளி வெங்கட் என பெயர் எழுதி விட்டால் எனக்கான உடை லுங்கி அல்லது வேட்டி என்று எழுதி விடுவார்கள். மனு ஆனந்த்தின் குருநாதர் கெளதம் மேனனிடம் இருந்து எனக்கு ஒரு வாய்ப்பு கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இவரிடம் இருந்து எனக்கு வாய்ப்பு வந்ததும் ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு என்னுடைய கதாபாத்திரம் பற்றி அவர் கூறியதும் இன்னும் எனக்கு சந்தேகம் வந்தது. எப்படி என்னை இதற்காகத் தேர்வு செய்தார்கள் என்று. ஆனால் என்னை இந்தப் படத்தில் வேறு விதமாகக் காட்டியிருக்கிறார். கெளதம் கார்த்திக் நடித்த சில காட்சிகளை இயக்குநர் போட்டுக் காட்டினார். மிகவும் பிரமிப்பாக இருந்தது. ஒரு முறை நானும் ஆர்யாவும் படப்பிடிப்பில் இருந்தபோது நான் அவசரமாக விமானத்திற்குக் கிளம்ப வேண்டி இருந்தது. சாப்பிடுவதற்குக் கூட நேரம் இல்லை. ஆனால் அதைப் புரிந்து கொண்டு நான் கார் பயணத்தில் சாப்பிடுவதற்காகவே எனக்காக விதவிதமான அசைவ உணவுகளை கொடுத்து அனுப்பினார் ஆர்யா. அதை எப்போதும் மறக்க முடியாது” என்று கூறினார்
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், “தயாரிப்பாளர்கள் S. லஷ்மன் குமார், A. வெங்கடேஷ் இருவரும் இரு துருவங்கள் என்றாலும் ஒரு அழகான காம்பினேஷன் என்பதை மறுக்க முடியாது. மஞ்சு வாரியர் இந்திய சினிமாவின் பெருமை என்று சொல்லலாம். ராஜஸ்தான் வெயிலில் காட்சிகளைப் படமாக்கிய சமயத்தில் கூட சரத்குமார் தனது ஷாட் முடிந்தாலும் கேரவன் பக்கம் போக மாட்டார். கேட்டால், ‘சூரியன் படத்தில் நடித்த சமயத்தில் எல்லாம் கேரவனா பயன்படுத்திக் கொண்டிருந்தோம்’ என்று கூலாகச் சொல்வார். பஞ்சபூதங்கள் இந்தப் படத்திலும் இருக்கிறது. எங்களுக்குப் படப்பிடிப்பு சமயத்தில் தொடர்ந்தும் வந்தது. அதிலும் குறிப்பாக மழை நாங்கள் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வந்தது” என்று கூறினார்.
ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா, “என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றிய காலத்தில் இருந்து இயக்குநர் மனு ஆனந்த் எனக்கு நல்ல பழக்கம். எப்போதுமே ஒவ்வொரு டீமுக்கும் என்ன தேவை என்பதைத் தெரிந்துகொண்டு தங்களுடைய குழுவினரை வருத்தி பக்காவாகத் தயார் செய்து கொடுத்து விடுவார் மனு ஆனந்த். இந்தியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சென்று இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சிங்கிள் சாட்டில் சரத்குமார் சார் ஒரு காட்சியை நடித்து முடித்த போது பிரமித்துப் போனேன். அந்த அளவிற்கு தன்னை ஃபிட்டாகத் தயார்படுத்தி வைத்துக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் மழை கொட்டி வெள்ளம் போய்க் கொண்டிருந்த போது கூட தனது அறையில் இரண்டு நாற்காலிகளை போட்டுக்கொண்டு விடாமல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் ஆர்யா. இந்தப் படம் பார்க்கும் அனைவருமே கெளதம் கார்த்திக்கை லவ் பண்ணுவார்கள். மஞ்சு வாரியர் உள்ளிட்ட அனைத்து நடிகைகளுமே ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளனர். அதற்காக கடுமையான ரிகர்சலிலும் ஈடுபட்டனர்” என்று கூறினார்.
சரத்குமார், “கதையைப் பற்றி தயாரிப்பாளர் இங்கே பேசும்போது எனக்கே ஷாக்காக இருந்தது. இயக்குநர் இப்படி எல்லாம் ஒரு விஷயம் தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறாரா என்று. நாளை இது பற்றி விசாரணை வந்தால் நீங்கள் இதெல்லாம் தெரிந்துதான் நடித்தீர்களா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? நாளை பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசும் அளவிற்கு செய்தியைக் கொடுத்து விட்டார். படத்தின் கதையைக் கேட்டு அவ்வளவு பிரம்மாண்டமாகத் தயாரிக்க ஒப்புக்கொண்டதற்கே தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் உளவுத்துறையில் பணியாற்றுபவர்கள் தான் வெளியே தெரியாத கதாநாயகர்கள். அவர்களது தியாகம் அளவிட முடியாதது. வெறும் ஆக்சன் படமாக மட்டும் அல்லாமல் இதில் நிறைய உணர்வுகளும் பின்னிப் பிணைந்து இருக்கிறது.
ஆர்யா எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தார். எனக்கு மட்டும் கொடுக்கவில்லை. ஸ்வீட் கொடுத்தார் என்று கூட சொன்னார்கள். ஒருவேளை ஸ்வீட் பாயாக இருந்திருக்கலாம். கெளதம் கார்த்திக் கூட இணைந்து நடிக்கும் போது அவருடைய பல ரியாக்சன்களைப் பார்க்கும்போது எனக்கு அவரது தந்தை கார்த்திக் ஞாபகம் தான் வரும். மனு ஆனந்த் பார்ப்பதற்கு சாஃப்ட் ஆகத் தெரிந்தாலும் நிஜத்தில் அப்படி இல்லை.. படத்தில் எனக்கு ஒரு காதல் காட்சி கூடக் கொடுக்கவில்லை என்று வருத்தம் இருக்கிறது.ந்இரண்டாம் பாகத்தில் நிச்சயமாக அதைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.